கதைகள்

காதலர் விமானம்!…. 28 …. ( நாவல் ) …. ஏலையா க.முருகதாசன்.

சாந்தினியின் பெற்றோர் சம்மதித்தால் தனனையும் நீர்கொழும்பில் நடக்கும் கல்யாண வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போவதாதக சச்சிதானந்தம் சொன்னதும் சாந்தினிக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டதற்கு காரணம் நீர்கொழும்பிலிருக்கும் சந்திரனின் மைத்துனி தன்னைவிட அழகியோ எனப் பார்ப்பதற்கே.

நீர்கொழும்புக்குப் போகும் நாளை எதிர்பார்க்கும் மனநிலை சாந்தினிக்கு அப்பொழுதே தொடங்கிவிட்டது.

காலைச் சாப்பாடு முடிந்து மத்தியானச் சாப்பாட்டுக்கான ஆயத்தத்தில் மகேஸ்வரி ஈடுபடுத் தொடங்கினாள், அப்பொழுது „மாமி அடுப்படியைவிட்டு வெளியிலை வாருங்கள் முன்னுக்கு இருக்கிற வயலுக்குள்ளை கொஞ்சத்தூரம் நடந்து போட்டு வருவம்’ என்று சாந்தினி சொல்லி முடிக்கும் முன்பே „ இல்லைப் பிள்ளை இப்ப தொடங்கி ஆயத்தம் செய்தால்தான் மத்தியானம் நேரத்துக்கு உங்களுக்குச் சாப்பாடு தரமுடியும்.சாப்பாட்டுக்குக் கூப்பிட்டிட்டு ஏனோதானோ என்று சாப்பாடு தரமுடியாது நான் வரேலை சிவகாமியைக் கூட்டிக் கொண்டு போய் வயலிலை உலாத்திப் போட்டு வாருங்கள்’ என வாஞ்சையோடு மகேஸ்வரி சொல்ல, „சிவகாமி வாறியளா வயலிலை நடந்து போட்டு வருவம் „என்று கேட்க அரைகுறை மனதுடன் சிவகாமி சம்மதிக்கிறாள்.

„அப்ப நீங்கள் வரேலையோ, வாங்கோ மாமி வந்து சமைக்கலாந்தானே

இப்பத்தான் தோசை சாப்பிட்டனாங்கள், அது செமிக்க கன நேரமாகும் நடந்து போட்டு வந்தால் செமிச்சிடும், செமிச்சால்தானே நீங்கள் சமைக்கிற ஆட்டிறைச்சிக் கறியையும், சுறாவறையையும் ஒரு கைபார்க்க முடியும்’ என்று சொல்லும் போதே „இல்லைப் பிள்ளை நீங்கள்; இரண்டு பேரும் போயிட்டு ஆறுதலாக வாருங்கள்’ என்று மகேஸ்வரி சொல்ல சாந்தினியும் சிவகாமியும் வயலை நோக்கி நடக்கின்றனர்.

சச்சிதானந்தம் குடும்பத்தின் வீடு அம்பனை வயலுக்கு வடக்குப் புறத்தில் மகாஜனக் கல்லூரியின் எல்லையோடு கிழக்குப் புறத்திலிருந்தது.

வயலுக்குப் போக வேண்டுமென்றால் வீதியைக் கடந்து வெள்ள வாய்க்காலுக்கு மேலே போட்டிருக்கும் பாலத்தில் நடந்து போக வேண்டும்.

இருவரும் வீதியைக் கடந்து பாலத்தில் ஏறப் போக „நான் வெள்ளவாய்க்காளிலை இறங்கி நடந்து வாறன் „என்ற சாந்தினி சொல்லியவாறு இறங்கி நடந்து வயல் பக்கம் ஏற, அவள் காலில் நெருஞ்சி முள்ளுக்குத்த „ஆ’ என்று அலறி காலைத் தூக்க,முள்ளிலை குத்து வாங்கிட்டா என்றுணர்ந்த சிவகாமி „இது தேவையில்லாத வேலை’ என்று சொல்லிக் கொண்டே அவளுக்கருகில் போய் நிற்க, சிவகாமியின் தோளில் சாந்தினி ஒரு

கையை வைத்துக் கொண்டே சாந்தினி நிற்க, முள்ளுக்குத்திய வலது காலை உயர்த்தி நின்ற சாந்தினியின் உள் பாதத்தில் குத்தியபடியே இருந்த முள்ளை பிடுங்கி எடுத்து வீசுகிறாள் சிவகாமி.

குத்திய இடத்திலிருந்து இரத்தம் கசிவதைக் கண்ட சிவகாமி „ அப்படியே நில்லுங்கோ „ என்று சொல்லிக் கொண்டே அவர்களுக்கருகிலிருந்த குப்பைமேனிச் செடியிலிருந்து ஐஞ்சாறு இலைகளைப் பிடுங்கி கசங்கி சாந்தினிக்கு முள்ளுக் குத்திய இடத்தில் கொஞ்ச நேரம் வைத்து அமத்திப் பிடிக்கிறாள்.

சிவகாமியை நன்றியோடு பார்த்த சாந்தினி „நன்றி’ என்று சொல்லியவள் „பார்த்தியா உன்னுடைய அண்ணியின் காலை பிடிக்க வைத்திட்டேன்’ என்று மனதுக்குள் நினைத்து மெலிதாக வாய்திறக்காது புன்னைக்க „வீட்டுக்கு வந்தவர்களுக்கு ஏதாவது கஸ்;டம் ஏற்பட்டால் அதைப் போக்க வேண்டும், அதைத்தான் செய்தனான் , அதற்காக அண்ணியின் காலைப் பிடிக்க வைத்திட்டேனே என்று நடக்க முடியாத ஒரு விசயத்துக்காக கற்பனை செய்து சந்தோசப்படாதையுங்கோ’ என்றவுடன் „ நான் நினைத்ததை இவள் அப்படியே சொல்கிறாளே „ என்று நினைத்தவள் தனது மனதில் உள்ளதைக் காட்டிக் கொள்ளாமல் „நான் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை’ என்றவாறு நடக்கத் தொடங்கினாள்.

அக்கம் பக்கத்து தோட்டத்தைப் பார்த்தவாறு வரம்பில் நடந்து கொண்டிருந்தனர்.அப்பொழுது புல்லுக் கடகமும் கேத்தலுமாக எதிர்ப் பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த பொன்னம்மா, சிவகாமியிடம் „ஆர் பிள்ளை இது புதுசாயிருக்கு’ என்று கேட்க,’எங்களுக்கு தெரிஞ்சவை சுண்ணாகத்தில இருக்கிறவ, வீட்டுக்கு வந்திருக்கிறா, வீட்டிலை இருக்க போரடிக்குது என்று கேட்டா அதுதான் வயலிலை நடப்பம் என்று கூட்டிக் கொண்டு வந்தனான் „ என்று சொன்னவுடனே „உன்னைப் போல வடிவான பிள்ளை’ என்று சொல்லிக் கொண்டே இரண்டடி வைத்து அவர்களைக் கடந்து நடந்த பொன்னம்மா திரும்பி „பிள்ளையள் இரண்டு; பேரும் திரும்பி ஒன்றாய் நில்லுங்கோ „என்றவள் அவர்களை ஏற இறங்கப் பார்த்திட்டு „இரண்டு பேரின்ரை மூக்கும் முழியும் ஒரே சாயலாயிருக்கு உயரமும் கிட்டத்தட்ட ஒரே அளவாயிருக்கு,நெருங்கின சொந்தக்காரப் பிள்ளையோ என்று நினைச்சன் ‘ என்று பொன்னம்மா சொல்லி முடிக்குமுன்பே’ பொன்னாச்சி உலகத்திலை ஏழு பேர் ஒரே விதமாக இருப்பினமாம், இங்கை நாங்கள் இரண்டு பேர் இருக்கிறம், மிச்சம் ஐஞ்சு பேரும் எங்கையோ இருப்பினம்’ என்ற சிவகாமி பொன்னம்மாவின் பதிலை எதிர்பாராது நடக்கத் தொடங்க சாந்தினியும் அவளுடன் நடக்கத் தொடங்கினாள்.

சாந்தினியின் இடமான சுண்ணாகமும் ஒரு விவசாய நிலந்தான்.வயல்வெளியை அருகாமையாகக் கொண்ட ஸ்கந்தவரதோயாக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாலும் வயல்வெளிகளில் இறங்கி நடந்ததில்லை.

சுண்ணாகம் ஐயனார் கோவிலில் நடக்கும் திருவிழாக்களுக்குப் பெற்றோருடன் போய்வரும் சாந்தினி அந்தக் கோவிலைச் சுற்றியிருக்கும் வயல்வெளியைப் பார்த்திருக்கிறாளே தவிர,அதில் இறங்கி நடந்ததில்லை.

அம்பனை வயல்வெளி வரம்புகளில் ஒற்றையடிப் பாதையில் கால்களை அளந்து அளந்து வைத்து நடந்து சென்று கொண்டே வயல்வெளியில் சுற்றுமுற்றும் பச்சைப்பசேலென இருக்கும் பயிர்களையும் அவற்றில் காய்த்திருக்கும் வெண்டிக்காய், பயிற்றங்காய்,பூசனிக்காய், பாவற்காய், கத்தரிக்காய் எனவும் இடைக்கிடை வாழைத் தோட்டங்களையும் பார்த்து பரவசமடைந்தவளாக நடந்து கொண்டிருந்தாள் சாந்தினி.

சிவகாமிக்கு இது பழக்கப்பட்ட அனுபவம்.சிவகாமியின் குடும்ப வருமானமே தோட்ட வருமானந்தான். ஆவர்கள் தோட்டக்காரர்கள்.சச்சிதானந்தத்துக்கு ஒரு உத்தியோகத்தில் இருக்கக்கூடிய படிப்பு இருந்த போதிலும் அரசாங்க உத்தியோகத்திலோ, ஒரு முதலாளியின் கீழ் இன்னொரு நிறுவனத்திலோ வேலை செய்வது ஒரு அடிமைத்தனம் நின நினைத்தகு; கொண்டு சுதந்திரமான யாருக்கும் அடிமையில்லாத தோட்டக்காரனாக அதிலிருந்து வரும் வருவாயை வைத்துக் கொண்டு தனது குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சாந்தினியும், சிவகாமியின் வீட்டுக்கு வந்த அந்த குறுகிய நேரத்தில், அவர்கள் தோட்டம் செய்பவர்கள் என்பதைக் கதையோடு கதையாக அறிந்து கொண்டாள்.

அதனால்,நடந்து கொண்டே „சிவகாமி உங்கடை தோட்டம் எங்கை, தூரமோ „ என்று சாந்தினி கேட்க, „இல்லை அங்கை ஒரு வாழைத் தோட்டம் தெரியுதே, அதுதான் எங்கடை தோட்டம் „ என்று சொன்னவள்’அவ்வளவு தூரம் நொண்டி நொண்டி நடக்க முடியுமா’ என்று கேட்க’ முடியும்’ என்கிறாள் சாந்தினி.

இருவரும் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது,ஒரு புடலங்காய் பந்தலைக் கண்டுவிடுகிறாள் சாந்தினி.பந்தலில் புடலங்காய்கள் தூங்கிக் கொண்டிருந்தன.பந்தலுக்குக் கீழே இளம் தோட்:டக்கார கணவனும் மனைவியும், பிஞ்சுப் புடலங்காய்களின் நுணிகளில் கல்லுக் கட்டிக் பெகாண்டிருந்தனர்.

அதைப் பார்த்ததும் சாந்தினி புடலங்காய் பந்தலை நோக்கி நடந்து பந்தலுக்குள் போனவள் „ஏன் கல்லுக் கட்டிறியள்’ என்று கேட்கிறாள்.கல்லுக் கட்டிக் கொண்டிருந்த பெண் „கல்லுக் கட்டினால்தான் நீளமாய் வளரும் இல்லாட்டி சுருண்டு போயிடும்’ பதில் சொல்லி முடிக்கும் முன் „ஓகோ அதுதான் உங்கடை புடலங்காய்கள் நீளமாய் இருக்குதோ, நீளமாய் வளரவிட வேண்டுமென்றால் கல்லுக் கட்ட வேண்டுமோ’ என்று சாந்தினி சொன்னதுதான் தாமதம் அந்தப் பெண் பலமாக சிரிக்க, சிவகாமி அடக்க முடியாத சிரிப்பை அடக்கிக் கொண்டு சிரிக்க, இளம் தோட்டக்காரன் வேறுபக்கம் பார்த்துச் சிரிக்க ஒன்றும் புரியாமல் „சிவகாமி ஏன் நீங்கள் எல்லாரும் சிரிக்கிறியள் „ என்:று சாந்தினி கேட்க,சிவகாமி சிரித்துக் கொண்டே „அவாவைக் கேளுங்கோ விளக்கமாகச் சொல்லுவா’ என்று

சொல்லிக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணின் கணவர் பந்தலின் அடுத்த பக்கத்தில் ஏதோ பராக்கு இருப்பது போல போய்விடுகிறார் .

சாந்தினியின் அருகில் வந்த அந்தப் பெண் அவள் காதில் சிரிப்புப் பாதியாக புடலங்காய்க்கு கல்லுக் கட்டுதல் தொடர்போடு உள்ள ஆண்களின் உறுபு;புச் சம்பந்தப்பட்ட விடயத்தைச் சொல்லி முடித்ததும், சாந்தினி வயலில் பலருக்கு கேட்கிறமாதிரி பலமாகச் சிரிக்கத் தொடங்கியவள் சிரிப்பை அடக்க முடியாமல் கீழே இருந்து சிரித்தவள் கண்களில் கண்ணீர் வரும்வரை சிரித்தாள்.

சாந்தினியின் சிரிப்புக்கு காரணமாக தனது மனைவி என்ன சொல்லியிருப்பாள் என்பதை உணர்ந்த அவளின் கணவன் வேறு பக்கம் பார்த்தக் கொண்டே புடலங்காய்க்கு கல்லுக் கட்டிக் கொண்டிருந்தான் .

சாந்தினி பலமாகச் சிரிப்பதற்கு காரணம் எது என்பதை சிவகாமியும் உணர்ந்ததால் அவளும் சிரித்தாள்.சிரிப்புக்கள் அடங்கியதும் „சிவகாமி இவதான் நீர்கொழும்பிலை இருக்கிற மச்சாளா’ என்று தோட்டக்கரப் பெண் கேட்க „ இல்லையக்கா இவா சுண்ணாகத்திலை இருக்கிறவா, எங்கள் குடும்பத்துக்கு தெரிஞ்சவை, இண்டைக்கு வீட்டை வந்தவா வயல்வெளியைப் பார்க்க வேண்டுமென்றவா அதுதான் கூட்டிக் கொண்டு வந்தனான்’ என்கிறாள் சிவகாமி.

„சுண்ணாகத்திலை இருந்துமா புடலங்காய் விசயம் தெரியாமல் போச்சுது, சுண்ணாகச் சந்தையிலை பார்க்காத புடலங்காயா….’ ஏன்று தோட்க்காரப் பெண் சிரித்துக் கொண்டே சொல்ல’ ஐயோ பேசாமலிருங்கோ பிறகும் அந்தக் கதையைச் சொல்லப் போகிறியள் போல, சந்தையிலை பார்திருக்கிறன், வீட்டிலும் அடிக்கடி அம்மா மஞ்சள் தூள் போட்டு வறுப்பா, புடலங்காய்க்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குது என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள் சாந்தினி.

„சிவகாமி நான் இவாவை உங்கடை மச்சாள் என்று என்று ஏன் கேட்டனான் என்றால் உங்கடை முகச்சாயல் இவாவிலும் இருக்குது என்று தோட்க்காரப் பெண் சொன்னதும் சிவகாமி சாந்தினி அகிய இருவரின் நெற்றியும் சுருங்கியது.பொன்னம்மாவும் சொல்லுறா இவாவும் சொல்லுறா என்னமோ இருக்குது என்று இருவரும் ஒரே நேரத்தில் யோசித்தார்கள்.

„சிவகாமி உங்கடை தோட்டத்துக்குப் போயிட்டு வருகிற போது நீளமான புடலங்காய் பிடிங்கித் தாறன் அதை இவா இவாவின்ரை வீட்டுக்கு கொண்டு போகட்டும் „ என்று தோட்டக்காரப் பெண் சிரித்தும் சிரிக்காமல் சொன்னதும் அவர்கள் இருவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு தலையை ஆட்டுகின்றனர்.

தோட்க்காரர்கள் மத்தியிலும் கிராமப்புறங்களிலும் காய்கறிகளின் தோற்றங்களை ஆண் பெண் உறுப்புக்களின் தோற்றத்தொடு ஒப்புட்டுச் சொல்வதும் மற்றவர்களுக்கு கேட்டும் கேளாத மாதிரிச் சொல்வது அவர்களின் பேச்சு வழக்கிலிருக்கும் அர்த்தம் பொதிந்த ஒரு இரகசிய இயல்பு.

ஆணுறுப்பை புடலங்காயுடன் ஒப்பிட்டுச் சொல்வார்கள்.ஆடையில்லாமல்: சிறுவர்களைக் கண்டால் அவர்களின் ஆணுறுப்பு நீளமற்று இருந்தால் வயதான சில பெண்கள் இவன்ரை புடலங்காய்க்கு கல்லுக்கட்ட வேண்டுமென்பர். ஆண்கள் கால்களை அகட்டி நடந்தால் அவற்றை புடலங்காய் தடக்குப்படுதோ என பக்கத்திலிருக்கும் பெண்களுக்கு இரகசியமாகச் சொல்லிச்: சிரிப்பார்கள்.

பெண்களின் மார்புக் கச்சைக்கு நீத்துப் பெட்டி என்றும் சொல்வார்கள்.பெண்களின் மார்பகத்தை இளநீர் குரும்பை வாழைப் பொத்தி என்றும் சொல்வார்கள்.இவையெல்லாம் கிராமப்புறங்களிலும் தோட்க்காரர் மத்தியிலும் புழங்கும் இரகசிய வார்த்தைகள்.குடும்பிக்கும் வாழைப் பொத்தி என்றும் சொல்வார்கள்.பெண்பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் இளநீர் கேட்டு பிடுங்கச் சென்றால் குசும்புக்காரப் பெண்கள் „ஓ தம்பிக்கு அந்த வீட்டு இளநியிலை ஒரு கண் இருக்குது என்பர்.தோட்க்காரர்களிடத்திலும் கிராமப்புறத்திலும் சிரிப்புக்கும் கலகலப்புக்கும் பஞ்சமில்லாதிருப்பதற்கு இத்தகைய குசும்புத்தனங்களுந்தான் காரணம்.

வெங்காய நடுகையின் போதும், நாற்று நடுகையின் போதும், புல்லுப் பிடுங்கும் போதும் இரட்டை அர்த்த வார்த்தைகள், அடைமொழிகள் ஒப்புவமை வார்த்தைகள் குசும்புத்தனமாக பெண்களின் வாயிலிருந்து வெளிவரும்.ஆண்களும் ஒன்றமே விளங்காத கல்லுளி மங்கனாக நடித்து அவற்றை இரசித்து அவர்களும் சிலேடை வார்த்தைகளை அப்பாவித்தனமாகச் சொல்வது போலச் சொல்வார்கள்.

கிராமப்புறத்து மக்களிடமும் தோட்டக்கார் மத்தியிலும் மட்டுமல்ல பெரும்பாலும் அனவருக்குமே தெரியுமென்றாலும் கிராமப்புற மக்களிடமும் தோட்க்காரர் மத்தியிலும் குசும்புக்கு குறையிருக்காது.

சாந்தினியின் முகம் சிவந்திருந்தது.சந்திரன் இன்னும் அவளைப் பற்றிச் சிந்திக்காவிட்டாலும், சாந்தினி அவனை கணவனாகவே கற்பனை செய்ததால்:, தோட்டக்காரப் பெண் சொன்ன புடலங்காய் விசயத்தோடு அவள் தனக்கும் சந்திரனுக்கும் திருமணம் நடக்கும் என்பது போலவும் முதலிரவு வரை அவள் கற்பனை சென்றதால் அவளை அறியாமலே அவள் முகம் சிவந்திருந்தது.

சிவகாமி குடும்பத்தின் வாழைத் தோட்டத்திற்கு இருவரும் போனதும், சிவகாமி வாழைத் தோட்டத்தையும் மற்றப் பயிர்களையும் காண்பித்தாள்.நீளமான பயிற்றங்காய்களைக் காண்பித்து „இந்தப் பயிற்றங்காய் நீளமாயிருப்பதால் இதைக் குரங்குவால் பயிற்றங்காய’ என்று சொல்வார்கள் என்று சொல்லிக் கொண்டே, சிவகாமி பயிற்றங்காய்களை ஆயத் தொடங்க,’ஏன் பிடுங்கிறியள்’ என்று சாந்தினி கேட்க „உங்களுக்குத்தான் வீட்டுக்கு வந்த விருந்தாளியை வெறுங்கையோடு அனுப்பக் கூடாது அதற்குத்தான்’ என்ற சிவகாமி, வாழைத் தோட்:த்திலிருந்த வாழைப் பொத்தியை கொக்கத்தடியால் பிடுங்கப் போக, கொக்கத்தடியை

வாங்கிய சாந்தினி தான் பிடுங்கிறன் என்று பிடுங்கப் போக „ எட்ட நிண்டு பிடுங்குங்கோ, பால் பட்டால் கறை போகாது „ என்கிறாள் சிவகாமி.

எட்ட நின்று வாழைப் பொத்தியை பிடிங்கிய சாந்தினி,நிலத்தில் விழுந்த வாழைப் பொத்தியை எடுத்து’ இந்தப் பக்கம் மழமழப்பாக கூராய் இருக்குது’ என்று வாழைப் பொத்தியின் நுணிப்பக்கத்தை கையால் தடவிச் சொல்ல, சொண்டுகளை மடித்து சிரிப்பை அடக்கிய சிவகாமி’ „ம்’ என்று மட்டும் சொல்ல,’ இதற்கும் ஏதோ கதையிருக்குது போல என்று சொல்ல,’ அப்படி ஒன்றும் இல்லை’ என்று சொல்யலியவாறு சிவகாமி தோட்டத்தை விட்டு நடக்கத் தொடங்க சாந்தினியும் பின் தொடருகிறாள் .வரும் வழியில், தோட்க்காரப் பெண் புடலங்காயைப் பிடுங்கி சிரித்துக் கொண்டே சாந்தினியின் கையில் குடுக்கும் போது,சாந்தினியின் கையிலிருக்கும் வாழைப் பொத்தியைக் கண்டுவிடுகிறாள்.

சிரித்துக் கொண்டே,சாந்தினியின் காதில் ஏதோ சொல்ல,சாந்தினி அதற்கும் சிரிக்க „ஏன் உங்கடை தோழி சொல்லேலையோ’ என்று கேட்க,’அவ சொண்டை மடிச்சு சிரிச்சவ’என்று சொல்ல,’ஏன் சிரிச்சனீங்கள் சிவகாமி’ என்று தோட்க்காரப் பெண் கேட்க’அக்கா இவ வாழைப் பொத்தியின் இந்தப் பக்கத்தைக் காட்டி மழமழப்பாக கூராக இருக்குது „என்று கேட்டா அதுதான் சிரிச்சனான் என்று தோடட்க்காரப் பெண்ணின் காதடியில் சொல்ல, தோட்க்காரப் பெண் சீலைத்தலைப்ப எடுத்து வாயைப் பொத்தியபடி சிரிக்க, அதைக் கவனித்த அவளின் கணவன் „ எதுக்கும் ஒரு அளவு இருக்குதப்பா , கண்ட கண்ட கதையளைச் சொல்லி படிக்கிற சின்னப் பிள்ளையளைக் கெடுக்காதையப்பா „ என்று சொல்ல,’இவையா சின்னப்பிளளைகள் வடக்கன் மாடுகள் மாதிரி திமிறிக் கொண்டு இருக்கினம் „ என்றவளுக்கு’ நீங்கள் சிலேடைக்கு டிகிறி படிச்சிருக்கியள் போல’ என்று சொல்லிக் கொண்டே சாந்தினி „புடலங்காய்க்கு நன்றி’ என்று சொல்லிச்; சிரித்துக் கொண்டே சிவகாமியுடன் வரம்புகளில் நடந்த அவளின் முகம் சிவந்தபடியே இருந்தது.

சிவகாமியும் சாந்தினியும் வீட்டுக்குள் நுழைந்ததும்,சாந்தினி நொண்டி நொண்டி வருவதைக் கண்ட சிவகாமியின் தாய் சாந்தினி நொண்டுவதற்கான காரணத்தைக் கேட்க, தனக்கு முள்ளுக் குத்தியதை சாந்தினி சொல்ல,முள்ளுக்குத்திய நோவால்தான் முகம் சிவந்திருக்குது என்று சிவகாமியின் தாய் நினைக்கிறாள் .

ஆனால் அது காரணம் அல்ல, புடலங்காய் உள் அர்த்தத்தை சந்திரனுடனும்,வாழைப் பொத்தி உள் அர்த்தத்தை தன்னுடன் ஒப்பிட்டு கற்பனையில் மூழ்கியதை அவள் மட்டுமே உணர்வாள்.

(தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *