கவிதைகள்
செய்ததை மறப்பரோ?…. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

வீறுடை மடந்தையை வேறுடன் அழித்திட ![]()
வித்திட்ட மாந்தரை பாரினில் கண்டோம்
பதைத்தது மட்டுமா பதறிற்றே நெஞ்சமும்
பண்பினை புதைத்திட்ட பாதகச்செயலால்
படிப்பைத் தராது பைந்தமிழ் நாட்டினில்
படிப்பெதற்கென்று படுகுழியில் தள்ளினர்
பாவையரென்றால் பழிபல சூட்டலாகினர்
பரிதாபத்தில் வைத்து பார்த்து மகிழ்ந்தனர்
பால்மனம்மாறா இளம் பிள்ளைகளுக்கிடை
பலனை அறியாமலே திருமணம் நடத்தினர்
பழியென யாரும் எடுத்துரைத்தால் மறைத்து
பண்பாடென வாழ்வதனை பகடையாக்கியே
பொட்டை அழித்தனர் பூவைப் பறித்தனர் 
பூவையர்தம் வாழ்வையும் காவு வாங்கினர்
எரிகின்ற நெருப்பில் இட்டுப் பொசுக்கினர்
இம்மையில் இதுவே மறுமைக்கு நன்றென்று
இத்தகு சூழலும் கடந்து வந்த நம்மாதரை
இன்று பெண்ணில் பெரிதாக யாதுளவென்று
வெட்டிப்பேச்சால் வீண் புகழ்பாடி நடித்தால்
செய்ததை மறப்பரோ இந்நாள் பெண்டிரும்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()