கவிதைகள்
மண்ணில் செல்வம்!… ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

வேரறுந்த மரம் வீழ்வதும் இயற்கையே
சீரற்ற வாழ்வு சிக்கலாகாது போகாது
மாறிவரும் உலகில் மயங்கி நின்றால்
தேறிடாது மனது தெளிவில்லாதாகில் ![]()
இன்றுனை சுற்றும் கூட்டமதை எண்ணி
அன்றுன் நிலையை ஒரு நொடி எண்ண
நன்றியுறு மனதை நாநிலத்தே காண் நீ
தொன்றுதொட்டு வள்ளுவன் வழியதுவே
செல்வமது சேர்ந்திருக்கும் இடம்தனிலே
நல்லது நடக்காது என்ற நிலையிருப்பின்
வெல்லம் தித்திக்காதுபோயின் ஏதுபயன்
சொல்லவொரு நா வருமா இனிப்பென்று
கள்ளமிலா மனதிலே கறை சேர்ந்திடாது
தெள்ளத் தெளிவான நீரின் தன்மைபோல
வெள்ளத்தனைய நீளும் மலரின் நீட்டமாக
உள்ளமது உயர்வடையும் உண்மையாலே
கரைசேரும் மீன்பிடி படகைப் போலன்றோ
திரைகடல் தேடியதெல்லாம் எமக்கல்லவே
தரையில் பயிர்செய்து சந்தைவரும் நெல்
இரையாம் மாந்தர்க்கு மண்ணில் செல்வம்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()