காதலர் விமானம்!…. 27…. ( நாவல் )…. ஏலையா க.முருகதாசன்.

சிவகாமிக்கும் தனது தங்கைக்குமிடையில் ஏதோ ஒரு பிரச்சனை ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்த குரு, சாக்கித்தியனுக்கு சிவகாமி குனிந்து தேத்தண்ணி கொடுத்த போது சாகித்தியனின் கண்களை ஊடுருவிப் பார்த்ததையும் கவனித்துக் கொண்டான்.
தேத்தண்ணியை இருவரும் குடித்து முடித்ததும் ‘சரி எழும்பு போவம் ‘ என்று தம்பியாரைக் கெதிப்படுத்திய குரு அங்கு நின்றவாறே ‘நாங்கள் போயிட்டு வாறம் ‘ என்று குரல் கொடுக்க அடுப்படி வாசல்வரை வந்த சிவகாமியின் தாயார் மகேஸ்வரி ‘சரி போயிட்டு கெதியிலை வாங்கோ’ என்று விடை கொடுத்தனுப்பினாள்.;
அடுப்படிக்குள் வந்த சிவகாமி ‘அம்மா நான் குளிச்சிட்டு வாறன்’என்று இரண்டடி எடுத்து வைக்க ‘கொண்ணை குளிச்சுக் கொண்டிருக்கிறான் பொறு’ என்று தாய் சொன்னவுடன் ‘மாமி இனித்தான் குளிக்கப் போறவோ அப்ப என்னெண்டு தேத்தண்ணி குடிச்சவா ‘ என்று சாந்தினி கேட்க’ ஏன் பிள்ளை அதை அவளிடமே நேரிலை கேளன், அவளிட்டை ஒரு கூடாத பழக்கமிருக்கு பல்லு மினுக்காமல் வாய் கொப்பிளிச்சுப் போட்டு தேத்தண்ணி கோப்பி குடிக்கிறது.நானும் கனதரம் சொல்லிப் பார்த்திட்டன் அவள் அதை விடுதிறதாக இல்லை, நீயாவது சொல் பிள்ளை ‘ என்று தாய் சொன்னவுடன் ‘அம்மா உனக்கு வேறை வேலையே இல்லையா வாறவை போறவையிட்டை என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறியள் ‘ என்று சிவகாமி சொல்லி முடிக்குமுன் ‘மாமி சுண்ணாகம் நாகம்ஸ் தியேட்டரில் ‘அண்ணி படம் ஓடினது பார்த்தனீங்களோ என்று தலையைக் குனிந்து சிவகாமியை நோக்கி பக்கவாட்டில் சரித்து ஆள்காட்டி விரலால் தன்னைக் காண்பித்து கேட்டு விட்டு நான்தான் உனக்கு அண்ணி நான் வாறவை போறவை அல்ல என்பது போல நிமிர்ந்த சாந்தினியிடம், ‘நாங்களும் பார்த்தனாங்கள்தான் உதவாத படம்’ என்று சிவகாமி சொல்ல,’மெய்யே மாமி படம் சரியில்லையோ, ஆனால் எங்கடை வீட்டிலை எல்லாருக்கும் பிடிச்ச படம்’ என்கிறாள்.
உண்மையில் அண்ணி படம் நல்ல குடும்பப் படந்தான்.ஆனால் சாந்தினி’ நான்தான் உனக்கு அண்ணியாக வரப் போகிறவள் என்பதை பூடகமாகச் சொன்னதை எதிர்த்தே சிவகாமி உதவாத படம் என்று சொன்னாள்.
சந்திரன் குளித்துவிட்டு வந்ததை அறிந்து சிவகாமி போக,’மாமி உங்கடை மகனும் பல்லு மினுக்காமலோ தேத்தண்ணி குடிசசவர் ‘ என்று கேட்க’ம்’ என்கிறாள் மகேஸ்வரி.
‘என்ன மாமி பழக்கம் இது.எங்கடை வீட்டிலை இப்படி இல்லை மாமி’
சாந்தினி அடிக்கடி தன்னை மாமி மாமி என்று அழைப்பதை விரும்பினாள் மகேஸ்வரி.
மகேஸ்வரி காலைச் சாப்பாட்டுக்காக தோசைச் சட்டிiயை அடுப்பில் வைத்துவிட்டு,தோசை வார்க்க ஆயத்தபபடுத்துவதைக் கண்ட சாந்தினி ‘விடுங்கோ மாமி நான் வார்க்கிறன்’ என்று கரண்டியை வாங்கி வார்க்கத் தொடங்கினாள்.
வட்டவடிவமாக அவள் தோசை வார்த்த முறையைக் கண்டதுமட்டுமல்ல தோசையை மற்றப் பக்கம் புரட்டிப் போட்ட விதத்தைக் கண்டு மகேஸ்வரி வியப்படைந்தாள்.
தோசை சுடுவதில் ஒரு நுட்பம் இருக்கின்றது.தோசை மொத்தமாகவோ மெல்லிசாகவோ இருக்காமல் நடுத்தரத் தடிப்பில் இருக்க வேண்டும்.தோசையின் வட்டவடிவமான பக்கங்கள் முறுகியிருக்க வேண்டும். ஆனால் கருகி இருக்கக்கூடாது.உணவு சமைப்பது ஒரு கலை.
தன்னைத் தோசை சுடவிடாமல் சுட்டு அடுக்கிக் கொண்டிருந்த சாந்தினியை கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள் மகேஸ்வரி.
தோசை சுட்டு அனுபவப்பட்டவர்களால் மட்டுமே இப்படிச் சுட முடியும்.மகேஸ்வரியால் கேட்காமல் இருக்க முடியவில்லை.’ஏன் பிள்ளை இப்படி நேர்த்தியாகச் சுடுகிறியே அம்மாவா இதைச் சொல்லித் தந்தவர்’என்றவுடன் ‘ஓம் மாமி ,அம்மா சொல்லுவா சாப்பாடு சமைப்பதை இரசித்துச் சமைக்க வேண்டும்,அது கலை என்பா,அப்பா ஒரு நாள் சொன்னார் தனது தங்கச்;சி நல்லாய்ச் சமைப்பாவாம்.ஆனால் அவாவோடை சண்டைபிடிச்சுக் கொண்டு கதைக்கிறேலையாம். அப்பா வீட்டிலை சொல்லிக் கட்டளை தங்கச்சியாரைப் பற்றி கதைக்க வேண்டாம் என்று’.
‘நாங்கள் மூவரும் பிறந்ததிலிருந்து மாமியின் குடும்பத்தைத் எங்களுக்குத் தெரியாது,அவை எங்கை இருக்கினமோ தெரியாது.அவையை, அவையின்ரை பிள்ளைகளைப் பார்க்க ஆசைதான்.ஆனால் அப்பாவை மீறி ஒன்றும் செய்ய ஏலாது. அண்ணன் தங்கச்சிக்கிடையில் என்ன சண்டையோ ஆருக்குத் தெரியும்’ என்று சொன்னவுடன் மகேஸ்வரி முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு இருமத் தொடங்கினாள்.
‘என்ன மாமி திடீரென்று இருமல்’ இந்தாங்கோ தண்ணியைக் குடியுங்கோ என்று செம்போடு தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்.’ என்னமோ தெரியாது தொண்டை அடைச்சுது’ என்று தணணீரை வாஙகிக் குடித்தாள் மகேஸ்வரி.
‘அம்மா காலமைச் சாப்பாடு என்ன’ என்று கேட்டக் கொண்டே சந்திரன் அடுப்படிக்குள் இருந்த சாப்பாட்டு மேசைக் கதிரையில் உட்காருகிறான்.
‘தோசைதான்’ என்று தாய் மகேஸ்வரி சொல்ல,’ஏன் அவருக்குத் தோசை பிடிக்காதோ’என்று கேட்க ‘அவனுக்கு தோசைதான் பிடிக்கும் அதுவும் நல்லெண்ணையும் முட்டையும் விட்ட முறுகின தோசையென்றால் நல்லாய்ப் பிடிக்கும்’ என்றவுடன், சாந்தினி சந்திரனுக்காக நல்லெண்ணை விட்டு முட்டையும் விட்டு முறுகின தோசையைச் சுடத் தொடங்கினாள்.
சாந்தினி சுட்ட தோசையை மகேஸ்வரி சாப்பாட்டு மேசையில் கொண்டு போய் வைக்கிறாள்.சிவகாமியும் அந்த நேரம் பார்த்து அடுப்படிக்குள் நுழைந்து சாப்பாட்டு மேசையிலிருக்கும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருக்கும் தோசைகளைப் பார்த்து ‘அம்மா இன்றைக்கு என்ன நடந்தது உங்களுக்கு இப்படி வடிவாகச் சுட்டிருக்கியள் ‘ என்று கேட்டுக் கொண்டே கதிரையில் உட்கார சந்திரன், சாந்திதான் சுட்டது என்று கண்ணால் காட்ட ‘ஓகோ’ என்று சிவகாமி சொல்ல, ‘ஓகோ’ என்று சிவகாமி சொன்னதைக் கேட்டு,சந்திரன் கண் ஜாடையால் தான்தான் சுட்டது என்பதைச் சொல்லிருக்கிறான் என்பதை ஊகித்த சாந்தினி ‘ ஏன் மாமி உங்கடை பிளளையள் ஆருமே வாயாலை பேச மாட்டினமோ’ என்று சாந்தினி கேட்க ‘ஏன் பேச மாட்டினம் வாயைத் திறந்தால் வங்காள விரிகுடா தோற்றுப் போகும், சரி பிள்ளை நீயும் போயிருந்து சாப்பிடு.சாப்பிடக் கூப்பிட்டிட்டு உன்னை வீட்டுக்காரி மாதிரி வேலை வாங்குகிறன் பார்’ என்று அவள் முடிக்க முந்தி’ இது என் வீடு மாதிரி, நீங்கள் ஒரு பேச்சுக்கு எனக்கு மாமி மாதிரி என்றால் ஒரு பேச்சுக்கு நான் உங்களுக்கு மருமகள் மாதிரித்தானே’ எனச் சாந்தி சொல்லிக் கொண்டே சந்திரனுக்கு எதிரில் உட்காருகிறாள்.
‘மாமி நான் சுட்ட நல்லெண்ணை முட்டைத் தோசை எப்படியென்று கேளுங்கள் மாமி’ என சாந்தினி கேட்க’ பிள்ளை உனக்கு எதிரிலைதானே இருக்கிறான் அவனையே கேளன்’ என்று மகேஸ்வரி சொல்ல, சந்திரனைப் பார்த்து ‘நல்லாயில்லையா ‘ என்று சாந்தினி கேட்க, ‘பரவாயில்லை’என்று அவன் பதில் சொல்ல,’பரவாயில்லையா’என்று சாந்தினி கேட்க ‘இல்லை… நல்லாயிருக்கு’ என்று அவன் பதில் சொல்ல,’முதலிலேயே சொல்லலாந்தானே நல்லாயிருக்குதெண்டு’ என்றவள் சாந்தினி, சிவகாமிiயைப் பார்த்து, எப்படி நான் சுட்ட தோசை என்று கேட்க ‘ம்’ என்று சிவகாமி வேண்டா வெறுப்பாகப் பதில் சொல்ல,’கடவுளே’ என்கிறாள் சாந்தினி.
தாயாரை வார்த்தைக்கு வார்த்தை மாமி மாமி என்று அழைப்பது சிவகாமிக்கு எரிசசலைக் கொடுத்தது.’அம்மா அப்பாவினரை ஒரு தங்கச்சி நீர்கொழும்பிலை இருககிறதாய் சொன்னனீங்களே,ஒருக்கா அங்கை போவமா’ என்று சிவகாமி சொன்னவுடன் சாந்தினியின் முகம் வாடியதைக் கண்ட சிவகாமி தலையைக் குனிந்து, குனிந்தபடியே ஓரக் கண்ணால் சாந்தினியைப் பார்க்கிறாள்.
சந்திரன் எதுவுமே பேசாமல் சாப்பிட்டு முடித்து அந்த இடத்தைவிட்டு எழுந்தால் போதுமென்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். உரலில் இடித்த காரமான மிளகாய்ச் சம்பலுக்கு தோசை உவப்பாக இருந்தது.
‘மாமி நீங்களா இந்தச் சம்பலை இடிச்சனீங்கள்,அது சரி நீங்கள்தான் விடியப்புறம் எழும்பி இடிச்சிருப்பீர்கள்,இங்கைதான் இரண்டு பேர் கும்பகர்ணனின் சகோதரங்கள் போல நித்திரை கொண்டிருப்பினம், நான் வரேக்கிலைதானே எழும்பினவை,மாமி நான் நேரத்தோடை வருவன் என்று ஏதேன் அசிகை தெரிஞ்சதோ’ என்று சாந்தினி கேட்க, ‘எனக்கு மூக்கு உளைஞ்சதுடன் காகம் ஒன்று முத்தத்திலை அங்குமிங்கும் நடந்து கத்தியது’ என்றாள் மகேஸ்வரி.
‘அப்ப நான் நேரத்தோடை வாறது உங்கடை மூக்குக்கும் தெரிஞ்சிருக்கு காகத்துக்கும் தெரிஞ்சிருக்குது’ என்று சாந்தினி சொன்னவுடன்.’அம்மா தடிமன் வாறதுக்குத்தான் மூக்கு உளையும்,அரிசிக்குத்தான் காகம் கத்தியிருக்கும்’ என்று சொல்லிக் கொண்டே தாயை உற்றுப் பார்த்தவள்,அம்மா எதற்காக அவளைத் தூக்கி வைச்சுக் கொண்டாடுகிறாளோ தெரியாது என்று நினைக்கிறாள்.
சந்திரன் சாப்பிட்டு முடிந்ததும் எழுந்து போய்விடுகிறான்.சிவகாமியும் சாப்பிட்டு முடிந்ததும் தனது அறைக்குள் போய்விடுகிறாள்.சாந்தினி சாப்பிட்டு முடிந்து எழும்பிக் கையைக் கழுவியதும்,’பிள்ளை சிவகாமியின்ரை அறைக்;குள்ளை போயிருந்து கதையன், மாமா இறைச்சியும் சுறாவும் வாங்கப் போனவர், இன்னும் காணவில்லையென்று சொல்ல, சச்சிதானந்தம் வருவது காலடிச் சத்தத்தில் தெரிகிறது.
சாந்தினி எழுந்து சிவகாமியின் அறைக்குள்; நுழைந்து ‘ஏதாவது கதைப் புத்தகமிருக்கா’ என்று கேட்டுக் கொண்டே மேசையில் இருந்த குமுதத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டுகிறாள்.
அப்பொழுது அடுப்படிக்குள் வந்த சச்சிதானந்தம்’இஞ்சரப்பா வர்ற வழியிலை பியோன் கடிதம் ஒன்றைத் தந்தவர்,தங்கச்சி அற்புதத்தின்ரை கடிதம் ‘ என்று என்வலப்பைக் கிழித்து கடிதத்தை வாசிக்கிறார்.மனதால் வாசித்தவர்,பிறகு சத்தமாக ‘…. மகள் மணிமேகலைக்கு கலியாணத்தை முற்றாக்கிவிட்டோம், அவள் ஒரு சிங்களப் பொடியனை விரும்பிப் போட்டாள்.பொடியன்றை பகுதிக்கும் தமிழப் பிள்ளையைச் செய்ய விருப்பமாம்,அண்ணை நாங்கள் என்ன செய்கிறது.பிள்ளையள் விரும்பிறதைத்தானே நாங்கள் செய்ய வேண்டும்.நீங்கள் கோபிக்க மாட்டீர்கள்தானே.அண்ணியையும் பிள்ளைகளையும் கேட்டதாகச் சொல்லுங்கள்.கலியாணத்துக்கு கோபதாபம் பார்க்காமல் கட்டாயம் வாருங்கள்.நாங்கள் வந்து நேரிடையாக சொல்லவில்லையென்று குறை நினைக்காதீர்கள். கொழும்பிலைதான் கலியாணம்.திகதியை முடிவெடுத்ததும் விபரமாக கடிதம் போடுகிறன்.
உங்கள் தங்கச்சி
அற்புதம்
கடிதத்தில் உள்ளதை சச் சிதானந்தம் வாசித்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர் சிவகாமியும் சாந்தினியும், சாந்தினி சிவகாமியைப் பார்த்து ‘யார் மணிமேகலை’ என்று கேட்க,’அப்பாவின்ரை தங்கச்சியின்ரை மகள், எனக்கும் அண்ணைக்கும் மச்சாள்.நீர்கொழும்பிலை இருக்கிறவை.வடிவான பிள்ளை.போயும் போயும் சிங்களப் பொடியனை லவ் பண்ணியிருக்கிறாள்….’ என்று சொல்லி முடிக்க முந்தி சாந்தினி, ‘அதனாலென்ன காதலுக்கு இனம் மதம் கிடையாது,சிங்கள மக்களும் எங்கடை சகோதரர்கள்தானே இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்ததை இறைவனாலும் மாற்ற முடியாது ‘ என்று உற்சாகமாகச் சொன்ன சாந்தினியின் முகம் பிரகாசமாகியதை, சிவகாமி கவனித்தாள்.
குமதம் புத்தகத்துடன் ஊற்சாகமாக சிவகாமியின் அறையைவிட்டு வெளியே வந்த சாந்தினியைக் கண்ட சச்சிதானந்தம் ‘பிள்ளை எப்ப வந்தவள்’ என்கிறார்.
காலமையே தமையன்மாருடன் வந்திட்டா,நான் சொல்ல முந்தி நீங்கள் கடிதத்தை வாசித்தியள்.தமையன்மார் திரும்பி வருவினம்.தோசை சுட்டதும் அவாதான்’ என்றாள் மகேஸ்வரி.
‘மாமா எங்களுக்காக இறைச்சி,சுறா எல்லாம் கஸ்டப்பட்டு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறியள்,அப்ப உங்களுக்கு ஒரு கலியாண வீடு இருக்குது போகேக்கிலை என்னையும் கூட்டிக் கொண்டு போவியள்தானே’ என்றவுடன் ‘அப்பா அம்மா ஓமெண்டால் கூட்டிக் கொண்டு போவம்’ என்று சச்சிதானந்தம் பதிலளிக்க, உற்சாகமாக குமுத புத்தகத்துடன் வீட்டு வாசலடிக்கு வந்தவள் படியில் காலை வைத்தபடி உற்கார்ந்து அரைச் சுவரில் சாய்ந்தபடி புத்தகத்தை வாசித்தவளுக்கு, யாரோ வருவது போலத் தெரியவே நிமிர்ந்து பார்க்கிறாள், அர்ச்சனா ‘கலோ ‘ என்று சொல்லியவாறு சாந்தினியை நோக்கி வந்து படியில் கால் வைக்க, கால்களை ஒதுக்கி படியில் ஏற விடுகிறாள் சாந்தினி…….’
இனி…
(தொடரும்)
![]()