மணமுடித்ததிலிருந்து வளைகாப்புவரை!… ( சிறுகதை )…. சங்கர சுப்பிரமணியன்.

![]()
“குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம். அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் “ என்பது போல் “கொரணாவிலே வாழ்விலொரு திண்டாட்டம் ஆனால் வந்ததம்மா இணையவழி கொண்டாட்டம்” என்பதையும் மறந்து எங்கள் ஊரில் சொல்லப்படும்
“கிடப்பது கிடக்கட்டும் கிழவனை தூக்கி மணமேடையில் வை” என்ற பழமொழி போல இணையவழியில் ஒரே கொண்டாட்டம் களைகட்டுகிறது. வடிவேலு பாணியில் “கொரணாவா அதபத்தி எல்லாம் பேசப்படாது ராஸ்கல்” என்பதுபோல் ஆகிவிட்டது.
கிட்டத்தட்ட வாழ்க்கையும் இப்போது எளிதாக வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுவதபோல் அல்லவா ஆகிவிட்டது. ஆமாம் இல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்குமா கலிமுற்றிப் போச்சு என்றார் அனந்து. “செய்வன திருந்தச் செய்” என்பதுபோல் “சொல்வதை திருந்தச் சொல்லும்” என்று சொல்லி கலி முற்றல கொராணாதான் முற்றிப் போச்சு என்றார் கிச்சு. அதற்கு யோவ் எந்த லோகத்தில் இருக்கிறீர் இப்ப கொராணாவெல்லாம் பேஷன் ஆகிப்போய் விட்டது ஓய் என்றார். என்னாங்கானும் சொல்றீர் ஓய் என்று கேட்டதற்கு,
“ஓய், நீரு தான் கொரணா கொரணா என்கிறீர். ஆனால் இங்கு ஒரே கோலாகலமாய் இருக்குது ஓய்” என்றார்.
“அப்படியா கிச்சு, செத்த வெவரமா சொல்றேளா?”
“ஊரே அமர்க்களப்படுது ஓய். கல்யாணத்திலிருந்து கருமாதி வரை
எல்லாம் ஜோரா நடக்குது”
“என்னாங்கானும் சொல்றீர்?
கொராணாவுல உலகமே சுருண்டு கிடக்கு. நீரு என்னன்னவோ சொல்றீர்”.
கிச்சு இப்படிச் சொன்னதும் உமக்கு விவரமே தெரியாதா? சரியான அம்மாஞ்சி ஓய் நீரு என்று மேற்கொண்டு பேச ஆரம்பித்தார். என் சினேகிதன் ஒருத்தனோட நெருங்கிய சொந்தக்காரப் பொடியன் ஒருவனுக்கு சேலத்துல இணையவழியிலே கல்யாணமாகி ரெண்டு நாளைக்கு முன்னாலதான் இணயவழியில் வளைகாப்பு எல்லாம் நடந்துச்சாம் என்றதும் அப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்ட தற்கு நடந்ததை விபரமாய் சொன்னார்.
பெண்பார்ப்பதையும்
நிச்சயதார்த்தத்தையும் முன்கூட்டியே ஏற்பாடு பண்ணி லிங்கையும் பாஸ்வேடையும் கொடுத்துட்டாங்க என்றதும் அட கடவுளே இப்படியெல்லாம்
கூட நடக்குமாவென்றார் கிச்சு. அதற்கு
மேலும் நடந்திருக்கு அப்புறம் பத்திரிகை அடித்து வாட்ஸ்ஆப்புல அனுப்புனாங்க. அப்புறமா இணயவழில கல்யாணமும் ஜோரா நடந்துச்சாம். சென்னையில மதரயில கோவையில சேலம் சிங்கப்பூர் மலேசியா லண்டன் அமெரிக்கான்னு உறவுக்காராள் எல்லாம் பார்க்க கல்யாண சாப்பாடு போடாமலே கல்யாணம் நடந்து முடிந்தது. இப்படி கல்யாணம் முதலிரவு எல்லாம் நடந்து வளைகாப்பும் நடந்து போச்சு என்றார்.
முதலிரவு எல்லாமுமா இணையவழில காட்டுனாங்க என்று கிச்சு கேட்டதற்கு வாயைக் கழுவுமோய் சினிமாவிலெல்லாம் காட்டுவாங்களே மணப்பெண் பால்செம்பை எடுத்துக்கொண்டு மணமகன் இருக்கும் அறைக்குள் செல்வாள் இல்லையா அதுபோல்தான் காட்டுனாங்க. அதைத்தான் ஓய் நானும் சொன்னேன் என்றார் கிச்சு. போகிற போக்கைப்பார்த்தால் கொரோணா
தொடர்ந்து நீடித்தால் உன் சிநேகிதரின் சொந்தக்காரருக்கு பிள்ளை பிறந்து பெயர் வைப்பதையும் இணையவழியில் காண்பித்துவிடுவார்கள் என்று சொல்லவே
அனந்து சிரிப்பை அடக்கமுடியாமல் கிச்சுவின் வெள்ளை வெளேரென்றிருந்த சட்டையில் வெற்றிலை போட்டிருந்த வாயால் செம்புள்ளிகளாய் பன்னீர் தெளித்தார்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()