கவிதைகள்
விநாயகனே நீவந்து விக்கினங்கள் போக்கிடையா!… கவிஞர் காதேவ ஐயர் ஜெயராமசர்மா.

விண்ணதிர மண்ணதிர
விஞ்ஞானம் வளர்ந்திருக்கு
பெண்மையென ஆண்மையென
பேதமெலாம் அகன்றிருக்கு 
கண்ணான கண்ணியமோ
காணாமல் போயிருக்கு
கணபதியே வழிகாட்டி
கருணையெமக் கீந்திடுவாய் !
அஞ்ஞானம் மேலெழுந்து
அனைத்தையுமே ஆள்கிறது
அறமென்னும் நிலையிப்போ
அருகியே போகிறது
கல்மனதைக் கொண்டுள்ளார்
கணக்கின்றி பெருகுகிறார்
கணபதியே கண்திறந்து
காட்டிடுவாய் நல்வழியை !
விவாதமெனும் பேரலையே
வியாபித்து நிற்கிறது
வில்லங்கம் உலகெங்கும்
விசுவரூபம் கொள்கிறது
விரும்பாத பலவற்றை
வீணர்வந்து கொட்டுகிறார்
விநாயகனே நீவந்து
விக்கினங்கள் போக்கிடையா !
![]()