அம்மாவின் சிறப்பு!…. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

எம்மொழிக்கும் இல்லா சிறப்பு
என்மொழிக்குண்டு என்றேன்
செம்மொழிதானே அதுவென்றார்
அவை பல உள்ளனவே என்றேன்
உலகின் மூத்த முதல் மொழிதானே எனக்கேட்க
உலகறிந்த உண்மைக்கு தம்பட்டம் ஏனென்றேன்
தம்பட்டம் வேண்டாம் என்கிறீரோ எனவினவ
அல்ல ஒப்புக்கொள்ளும் தாராளமனமே போதுமென்றேன்
வேறென்ன சிறப்பு அதை விரிவாக சொல்லென்றார்
சிறப்பு ழகரமென்ற சிறந்த பதில்
நான்சொல்ல
வேறேதும் சிறப்புண்டா என வேண்டிக் கேட்க
அம்மா என்றொரு சொல் அழகாய் உளதென்றேன்
அம்மா எனும்சொல் அவரவர் மொழியிலுண்டு
உன்மொழியில் மட்டும் சிறப்பென செப்புவதேனென்றார்
எம்மொழியில் அச்சொல் இருந்திடினும்
அச்சொல்லின் சிறப்பை நானறியேன் என்றேன்
என்மொழியில் சிறப்பு அதன் அமைப்பென்றேன்
அச்சொல்லில் உயிரும் இருக்கிறது
உடலான மெய்யும் இருக்கிறது
இரண்டும் சேர்ந்த உயிர்மெய்யும்
இருக்கிறதென்றேன்
அதனால் வயதானாலும் சாவாமொழியாய் வாழுகிறதென்றேன்
அம்மம்மா ஆகா என்றார் இதுவன்றோ தமிழின் இனிமை என்றார்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()