கதைகள்

விலைப் பட்டியல்!.. ( சிறுகதை )… சங்கர சுப்பிரமணியன்.

பெங்களூரில் சிவாஜி நகர் என்றாலும் சரி அல்லது அலசூர் என்றாலும் சரி நல்ல வசதி. தமிழர்அதிகம் வாழும் இப்பகுதிகளில் எல்லா வேலைகளையும் ஒரேஇடத்தில் முடித்துக் கொள்ளலாம். அதற்கு ஏற்றதாக சிவாஜிநகரில் தர்மராஜா கோவில் தெருவையும் அலசூரில் பஜார் தெருவையும் சொல்லலாம். கடைகள், உணவகங்கள் மற்றும் கோவில் எல்லாம் அதே தெருவில் இருக்கும்.

எப்பவும் கூட்டம் நிரம்பி வழியும் இத்தெருக்களில் எங்கே போகவேண்டும் என்று மட்டும் தீர்மானித்தால் போதும். நடக்கவே வேண்டாம் கூட்ட நெரிசல் நம்மை இழுத்துக் கொண்டுபோய் அங்கே விட்டுவிடும்.

அன்று மனைவி செண்பகம் காலை சிற்றுண்டி எதுவும் செய்யவில்லை. அவளுக்கு இரண்டு மூன்று நாட்களாக் காய்ச்சல். ரொட்டித் துண்டுகளக் கொடுத்து சாப்பிடச் சொல்லி டாக்டர் கொடுத்த மருந்தையும் கொடுத்து சாப்பிடச் சொன்னேன். அதன் பின் வீட்டிற்குத் தேவையான சில சாமான்களை வாங்கிவிட்டு உணவகத்திலேயே காலை சிற்றுண்டியை முடித்துக் கொள்ளும்படி மனைவி சொல்லவே வீட்டைவிட்டு கிளம்பினேன்.

அலசூர் பஜார் தெருவிலுள்ள கிருஷ்ணபவன் உணவகத்தில் நுழைந்தேன். என்ன சாப்பிடலாம் என்று சர்வர் வருவதற்கு முன்பே விலைப்பட்டியலைப் பார்த்தேன். இட்லி, பூரிக் கிழங்கு, ஊத்தப்பம், மசால் தோசை, ரவா தோசை என்று பட்டியல் நீண்டபடி இருந்தது. முன்னெச்சரிக்கையாக பர்ஸையும் பார்த்து அதில் பணம் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொண்டேன்.

ஏனென்றால் இப்போது எல்லா உணவகங்களிலும் மாவாட்டுவதற்கு கிரைண்டர் உள்ளது. சர்வர் வந்தார்.

“இரண்டு இட்லி சாம்பார்” என்றேன்.

“பேற ஏனாது பேகா”

“ஆமேல ஹேலுதினி” வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்டவனிடம் அப்புறம் சொல்வதாகச் சொன்னதும் இட்லி எடுத்து வரச்சென்றார் சர்வர்.

காலைச் சிற்றுண்டியை முடித்து விட்டு ராமதாஸ் பலசரக்குக் கடைக்கு வந்தேன். விலைப்பட்டியலைப் பார்த்தேன். கடை முதலாளி தெலுங்கர். ஆனாலும் வியாபார யுக்திக்காக தமிழில் விலைப்பட்டியல்
இருந்தது. தமிழில் இருந்ததால் தமிழர் பண்பாட்டையும் விலைப்பட்டியலில் பார்த்தேன். து. பருப்பு, உ. பருப்பு, க. பருப்பு, ந. எண்ணெய், தே. எண்ணெய், க. எண்ணெய் என்ற தமிழரின் சிக்கன பண்பாட்டை விலைப்பட்டியல் சுமந்து நின்றது. எனக்கு தேவையான க. பருப்பு மட்டும் அரை கிலோ வாங்கிவிட்டு நேராக சோமேஸ்வரன் கோவிலுக்கு வந்தேன்.

மனைவி பெயருக்கு ஒரு அர்ச்சணை பண்ணலாம் என்று முடிவு செய்து அர்ச்சணை சீட்டு வாங்குமிடம் சென்றேன். அங்கும் ஒரு விலைப்பட்டியல். சாதா தோசை, மசால் தோசை மாதிரி சாதா அர்ச்சணை, சிறப்பு அர்ச்சணை, பால் அபிசேகம், பன்னீர் அபிசேகம், சிறப்பு அபிசேகம் என்று இங்கும் விலைப் பட்டியல் அநுமார் வால் போல் நீண்டு சென்றது.

மனைவிக்கு சாதா காய்ச்சல்தான். விஷக்காய்ச்சல் என்றால் சிறப்பு அர்ச்சணை பண்ணலாம் என்பதால் சாதா அர்ச்சணை சீட்டை மட்டும் வாங்கி அர்ச்சணை பண்ணிவிட்டு கோவிலைவிட்டு வெளியே வந்தேன். மனதில் இலேசாக பாராமாக இருப்பதை உணர்ந்தேன்.

பலசரக்கு கடைக்காரரும் உணவகம் நடத்துபவரும்
எனக்கு எந்தவகையிலும் தொடர்பு இல்லாதவர்கள். அவர்களே எனக்கு பொருளைக் கொடுத்தபின்னும் சாப்பிட்டபின்னும்தான் பணத்ததைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் என்னைப் படைத்தவனை
கோவிலினுள் நுழையும்போதே “அம்மையே அப்பா ஒப்பிலாமணியே” என்று பாடிக்கொண்டே கையை உயர்த்திக் கும்பிட்டபடி செல்கிறேன்.

ஆனால் காக்கும் இவனுக்கு நம்பிக்கையில்லாமல் பணம் கொடுத்து அர்ச்சணை சீட்டு வாங்கியபின்தான் அர்ச்சணை செய்ய முடிகிறது என்ற வேதனைதான். இருந்தாலும் அதிகமாக அதைப்பற்றி எண்ணாமல் ரப்பர் வைத்து அந்த எண்ணத்தை என் உள்ளத்தில் இருந்து அழித்துவிட்டேன்.

நான் இப்படி நினைப்பதோடு மட்டுமில்லாமல் அந்த நினைவோடு இருந்தால் அர்ச்சணை பண்ணியும் பலன் இல்லாமல் போய்விடும். கடவுள் கோபப்பட்டு என் மனைவி சுகமடைவதில் தாமதம் செய்துவிடுவார் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டே “ஹரகர சிவசிவ” என்றபடி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *