கவிதைகள்

அனைவருமே அமைதியுடன் இருந்திடவே நினைப்போம்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

சித்திரையைக் கொண்டாடச் சிறகடிக்கும் மனது

சிரிப்புடனே உலாபோக எழுந்துவரு முணர்வு

அத்தனையும் இப்போ அடங்கிவிடும் நிலைமை

ஆரிடத்து நோவோம் ஆர்க்கெடுத்து உரைப்போம் !

 

புத்துடப்பு வாங்க வோவென்னும் மனது

போனாலே துன்பம் வருமென்னும் உணர்வு

எத்தனையே உயிர்பிரியும் இக்கால நிலைமை

எப்போது மாறுமென யாருரைப்பார் எமக்கு !

 

பட்டாசு வாங்குதற்கு விரும்புகின்ற பிள்ளை

பட்சணங்கள் செய்வதற்கு விரும்புகின்ற பாட்டி

கஷ்டநிலை தெரியாமல் கதையுரைக்கும் தாத்தா

அத்தனை மனதேற்றி ஆரிடத்து உரைப்போம் !

 

நாட்டுநிலை தெரியாமல் நடைபயிலும் மாமா

நடுவீட்டினிலே தலைவிரிக்கும் நம்முடைய மாமி

சீட்டுக்கட்டி ஓலமிடும் சித்தப்பா சித்தி

காட்டுகின்ற காட்சியினை யார்வருவார் காண !

 

அப்பாவாய் அம்மாவாய் அகமிருக்கும் நாங்கள்

ஆசைபல இருந்தாலும் அடக்குகிறோம் இப்போ

குடும்பத்துக் குதூகலத்தைக் குறைக்க மனமில்லை

குவலயத்து நிலையெம்மை குழப்பிருக்கு இப்போ !

 

திண்டாட்ட தருமணதில் கொண்டாட்டம் எதற்கு

வண்டாகத் திரிந்தவர்கள் வாடுகிறார் சிறையில்

அண்டிநிற்கும் இருளனைத்தும் அகன்றுவிடும் வரைக்கும்

அனைவருமே அமைதியுடன் இருந்திடவே நினைப்போம் !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *