கவிதைகள்

ஓய்வறியா மனிதமனம் ஓலமிட்டு அழுகிறதே!…. கவிஞர். மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

  முப்படையின் வலிமையினால் முழுவுலகம் அடக்கிநின்று
தப்பிதங்கள் பலசெய்து தலைமைநிலை தானெடுத்து
சொத்தெல்லாம் கொண்டுசென்று சொந்தநாட்டை வளமாக்கி
எப்பவுமே அரசுவென எண்ணிநின்ற தோர்நாடு  !

அந்நாடு ஆணவத்தை தன்னுடைமை ஆக்கியது
நீதியெனும் வார்த்தைக்கு தான்தலைமை தாங்கியது
கூட்டுச்சேர்ந்த நாடுகளை கொடைவழங்கும் நோக்கினிலே
வீட்டுக்காவல் போலவைத்து வெற்றிக்கொடி ஏற்றியது  !

விழிப்புண்ட  நாடெல்லாம் விடுதலையை நாடியது
கொழுப்புக்கொண்ட  தலைமையது கொண்டகொள்கை மாற்றியது
நட்புறவு என்பதனை புதுக்கொள்கை ஆக்கிநின்று
பிரிந்துசென்ற நாட்டையெல்லாம் பிணைத்துநிற்க எண்ணியது  !

பிரிந்துசென்ற ஓர்நாடு  தலைமைதாங்கத்  தொடங்கியது

      வரங்கொடுத்த  நாடங்கே வலைக்குள்ளே  சிக்கியது
ஆணவத்தின் பேருருவாய் அந்நாடு உருவெடுத்து
      அகிலத்தை ஆட்டிவிடும் வழியோடத் தொடங்கியது   !
 
      பாரினையே உலுக்கிவைக்கும் போரொத்த கொரனோவால்
      யார்பெரியார் யார்சிறியர் எனும்பேதம் அகல்கிறது 
      உலகாண்ட  அரசெல்லாம் உருக்குலைந்து போகும்படி
      கொரனோவின் தாண்டவம் கோரமாய் ஆகியதே  ! 
 
      அடிமைப்பட்ட  நாட்டினது ஆலோசனை இப்போ 
      ஆணவத்தை அணைத்துநின்ற நாடுநோக்கி நிற்கிறது 
      கொரனோவின் வரவாலே கொடியதுன்பம் வந்தாலும்
      அனைவருமே சமமென்னும் அர்த்தமிப்போ வெளியாச்சு  ! 
 
      பேரழிவைத் தந்துநிற்கும் பெருந்துயராம் கொரனோவால்
      யாதுமே ஊரென்றும் யாவருமே கேளிரென்றும் 
      எண்ணிநிற்கும் சிந்தனையை எல்லோரின் மனங்களிலும்
      கொடுங்கொரனே எனுமரக்கன் கொடுத்துவிட்டான் இப்போது  ! 
 
      இனங்கடந்து மதங்கடந்து மொழிகடந்து எதிரெயென
      வரம்பின்றி வகைவகையால் உயிர்வதைத்து நிற்கிறது 
      உரங்கொண்ட  விஞ்ஞானம்  ஓடியோடித் திரிகிறது 
      ஓய்வறியா மனிதமனம் ஓலமிட்டு அழுகிறதே ! 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *