Featureகதைகள்

காத்தருளும் கண்ணன்!…. ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

கோடைவெயில்  கொளுத்திக் கொண்டிருந்தது. சம்பந்தமே
இல்லாமல் ஒரு மூதாட்டி ஒரு போர்வையை போர்த்தியவாறு ஒரு துணிக்கடைக்குள் நுழைந்தாள். அக்கடையில் கல்லாப்பெட்டியில் கடையின் சொந்தக்காரர் இருந்தார். அவரின் பின் சுவரில் இரண்டடுக்கு ஓன்றரையடி அளவு சட்டத்தில் கண்ணபிரான்
கையில் குழலேந்தி ஊதுகின்ற வடிவில் நின்றுகொண்டிருக்க சட்டத்தை விலையுயர்ந்த பூமாலை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

இதை பார்த்துக் கொண்டே சென்ற மூதாட்டி கையெடுத்து கும்பிட்டபடியே கடைக்குள் நுழைந்தாள். கடையின் உட்புறம் புடவைகள் இருக்கும் இடத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. அந்த இடத்திலும் ஒருபடம் சுவரை அலங்கரித்தது. அந்த படத்தில்
கோபியர்களின் ஆடைகளைக் திருடிய கண்ணன்
மரமொன்றின் மீது ஒளிந்திருக்க ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அந்த கோபியர்கள் கண்ணனிடம் ஆடையைக்கேட்டு கெஞ்சிக்
கொண்டிருந்தனர்.

பெண்கள் கூட்டத்தில் நுழைந்த மூதாட்டி அங்கு குவிந்து கிடந்த புடவைகளில் மிகவும் விலைகுறைந்த நூல்புடவையொன்றை எடுத்து மறைத்துவைத்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்து கடையைவிட்டு வெளியேற முயன்றாள். இதைக்கவனித்துவிட்ட வேலைக்காரன்  ஒருவன்,

“பாட்டி கொஞ்சம் நில்லுங்க” என்றான்.

“என்னப்பா”

“அந்த புடவையை வெளியே எடுங்க”

“என்னப்பா சொல்ற? எந்த புடவை?”

“பொய் சொல்லாதிங்க பாட்டி, மறைச்சு வச்சுருக்கிற புடவையை வெளியே எடுங்க”

இனிமேல் தப்பிக்கமுடியாது என்பதை உணர்ந்த அந்த மூதாட்டி போர்வைக்குள் மறைத்து வைத்திருந்த புடவையை வெளியே எடுத்தாள். அனைவரும் பார்க்கவும் அவள் கூனிக்குறுகினாள். அந்த மூதாட்டியை புடவையுடன் கடை முதலாளியிடம்
அழைத்துச்சென்ற வேலைக்காரன் நடந்ததை விளக்கினான். விபரமறிந்த கடைக்காரர்,

“என்னம்மா இது. வயதில பெரியவங்களா இருக்கீங்க இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டார்.

உடனே அவள் கண்கலங்கியபடி அவமானத்துடன் தான் போர்த்தியிருந்த போர்வையை அகற்றினாள். அவள் உடுத்தியிருந்த புடவை மிகவும் மோசமாகக் கிழிந்திருக்க தையல் போட இடமில்லாமல் அனேக தையல்களுடன் நைந்து போயிருந்தது. உடலை முழுமையாகவும் மறைக்க முடியவில்லை.  அதன்பின் பேச ஆரம்பித்தாள்.

ஐயா, நான் செய்தது பெரிய தவறுதான். இந்த திருட்டை நான் நியாயப்படுத்தவில்லை. என்னை வேண்டுமானால் காவல் நிலையத்தில் ஒப்படையுங்கள். சிறையில் அடைக்குமளவுக்கு பெரிய திருட்டாய் என்மேல் போடுங்கள். என்னை சிறையில் அடைத்தால் என் மானத்தை மறைக்க சீருடையாக புடவை கிடைக்கும். அதற்குமுன் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

“அப்படி என்னம்மா கேள்வி கேட்கப்போற, கேளும்மா” என்று கேட்டார் கடைக்காரர்.

“ஐயா  திருட்டை யார் செய்தாலும் திருட்டு திருட்டுதானே?”

“ஆம், அதிலென்ன சந்தேகம் உனக்கு?”

“நான் என் மானத்தை மறைக்க வேற வழிதெரியாது தெரிந்தே திருடினேன். ஆனால் போற்றித்தொழும் ஒருவர் வயதுப்பெண்களின் ஆடைகளைத்
திருடியதோடல்லாமல்
அவர்களது மானத்தோடும் விளையாடியிருக்கிறார். அவரை அழகாக படம் வரைந்து சுவரிலும் மாட்டி தொழுகிறீர்கள். அதைத்தான் சொல்கிறேன்”
என்றாள்.

இதை சற்றும் எதிர்பாராத கடைக்காரர் தடுமாறினார். மூதாட்டி சொல்லும் நியாயம் அவருக்கு புரிந்தது. அவளைப்பார்த்து,

“சரிம்மா, நீ போம்மா. அந்த புடவையையும் எடுத்துட்டு போம்மா.” என்று கூறியவர்,
கடையின் உட்பக்கமாக பார்த்து,

“ஏம்பா, குணசேகர் இங்க கொஞ்சம் வந்துட்டு போ” என்று கடையின் மேற்பார்வையாளரை அழைத்தார்.

மேற்பார்வையாளர் ஓடோடி வந்து என்னங்க முதலாளி என்று மிகவும் பணிவோடு கேட்டபடி நிற்கவும் அவனிடம்,

“குணா, புடவை பிரிவுல சுவற்றிலே தொங்கிக்கிட்டிருக்கிற கோபியர் கண்ணன் படத்தை எடுத்துட்டு அங்கே கிருஷ்ணர் பாஞ்சாலிக்கு புடவை கொடுக்கிற படத்தை மாட்டுவதற்கு உடனே ஏற்பாடு செய்” என்று கட்டளையிடவம் அவனும் அப்படியே செஞ்சுடறேன் முதலாளி என்று சொல்லியபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

அந்த மூதாட்டி கண்ணில் நீர்நிறைய கடைக்காரரை கையெடுத்து கும்பிட அவர் பின்னாலிருந்த குழலூதும் கண்ணன் அப்பாடா நான் பிழைத்தேன் என்று எண்ணியபடியே குழலாதுவதுபோல் தோன்றியது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *