Featureகதைகள்

காதலர் விமானம்!… 21 ( நாவல் ) … ஏலையா க.முருகதாசன்.

ஆவியில் வெந்த தேங்காய்ப் பூவின் வாசனையும் சிவப்புப் பச்சையரிசிப்புட்டின் வாசனையும் கலந்த குழல்புட்டையும் முட்டைப்பொரியல், நெத்தலிக்கருவாட்டுப் பொரியல், பலாக்கொட்டை போட்டு கூட்டுப் போல சமைத்த முருக்கங்காய் கறி என எல்லாவற்றையும் சிவகாமி மேசையில் கொண்டு வைத்தவுடன் இதுவரை அமைதியாக இருந்த சாகித்தியன் ‘அம்மாவும் இப்படித்தான் இரவுச் சாப்பாடு சமைப்பா’ என்று சொல்ல,சிவகாமி சட்டென்று தாயைத் திரும்பிப் பார்க்கிறாள்.தாயின் முகமாற்றத்தை எதுவுமே காட்டிக் கொள்ளாது சாகித்தியனை அவனுக்குத் தெரியாதவாறு உற்றுக் கவனிக்கிறாள்.

எல்லாரும் ஒன்றாக இருந்து சாப்பிடத் தொடங்குகிறார்கள்.மிகவும் பக்குவமாக ஒரு சில்லுப் புட்டிலிருந்து கொஞ்சத்தை எடுத்து முட்டைப் பொரியலையும் முருக்கங்காய்க் கறியையும் பிசைந்து எடுத்து வாயில் போட்டுச் சாப்பிட்டதும்’ அருமையான ருசி அச்சு அசலாக அம்மாவின் சமையல் போல இருக்கு, இன்னும் அதற்கு மேலை’ என்கிறான் சாகித்தியன்.

தான் எப்பொழுதுமே சந்தழக்காத ஒரு பொடியனுக்கு எல்லாரும் ஆதரித்து சாப்பாடு கொடுக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இருக்கும் என்றுணர்ந்த சச்சிதானந்தம் ‘மகேஸ்வரியை பார்த்து தம்பி யாரென்று சொல்லவில்லையே’ என்கிறார்.

சிவகாமி உடனே தானும் அர்ச்சனாவும் படம் பார்க்கப் போனதையும் புதுச்சந்தையில் துணி வாங்கக் கடைக்குப் போனதையும், கடை முதலாளி தங்களிருவரையும் கொண்டு போய் விடச் சொன்னதையும் ஒரு படம் மாதிரி சொல்லி முடிக்கிறாள்.

மகிழ்ச்சியான சிரிப்புடன் சச்சிதானந்தம் ‘ஓ அப்படியோ,நன்றி தம்பி அப்பாவின்ரை பெயர் என்ன’ என்கிறார்.சாகித்தியனிடம் தகப்பனின் பெயரைக் கேட்க மகேஸ்வரியின் முகம் மாறுகிறது.அதைக் கவனித்த சிவகாமி ‘ம் என்னமோ இருக்குது’ என மனதுக்குள் நினைக்கிறாள்.

‘அப்பாவின்ரை பெயர் சந்திரசேகரம், அம்மாவின்ரை பெயர் செல்லம்மா எங்கடை வீடு சுண்ணாகம் பெற்றோல் செற்றிக்குப் பக்கத்திலை இருக்க ‘ என்கிறான் சாகித்தியன்.

அவன் சொன்னதைக் கேட்டதும் ‘ சச்சிதானந்தத்துக்கு புரைக்கேறி இரும அவரின் உச்சந்தலையை தட்டிவிடுகிறான் அவருக்குப் பக்கத்திலிருந்த சாகித்தியன்.

இவ்வளவு நேரமும் பொதுவான உணர்வுடன் இருந்த சச்சிதானந்தம் அவனைப் பாசத்தோடு பார்த்தவர் மனைவியை பார்த்து கண்களால் கேள்வி கேட்க மகேஸ்வரி ‘ஓம்’ என்பது போல தலையை ஆட்டுகிறாள்.

தான் செய்த அடவாடித்தனத்தை அறியாத அவர்கள் தனக்குச் சாப்பாடு பாசத்துடன் கவனிப்பதைக் கண்ட சாகித்தியன் குற்ற உணர்வால் குறுகிப் போகிறான்.

‘நீங்கள் எத்தனை பிள்ளைகள்’ என்று சச்சிதானந்தம் கேட்க,’நாங்கள் மூன்று பேர் அண்ணை நான் தங்கச்சி, அண்ணை நில அளவையாளராக வேலை பார்க்கிறார், எனக்குப் பல்கலைக்கழகத்துக்கு போக விருப்பமில்லை வேலை தேடிக் கொண்டிருக்கிறன், தங்கச்சி ஸ்காந்தாவிலை படிச்சுக் கொண்டிருக்கிறாள் ‘ என்று சொன்ன சாகித்தியன் சிவகாமியை உற்றுப் பார்;த்தவன்,சரியாக இவவவின்ரை முகம் மாதிரித்தான் தங்கச்சியின்ரை முகம் என்கிறான்.

இதுவரையும் எந்த உணர்வையுமே காட்டிக் கொள்ளாமல் இருந்த மகேஸ்வரி அடக்க முடியாத அழுகையை அடக்குவதை கண்ட சச்சிதானந்தம் அழுது காட்டிக் கொடுக்காதை என்பதுபோல தலையை மெதுவாக ஆட்டுகிறார்.

சாப்பிட்டு முடிந்து கொஞ்ச நேரம்வரை இருந்த சாகித்தியன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீட்டுப்படியிறங்க சச்சிதானந்தம் அவன் பின்னால் வர சிவகாமியும் வருகிறாள்.

காரடிக்கு வந்தவுடன்’ கவனமாக போயிட்டு வா’ என்று சச்சிதானந்தம் சொல்ல, எங்களைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டதற்கு நன்றி, போயிட்டு வாருங்கள்’ என விடை கொடுக்கிறாள் சிவகாமி.

வீட்டுக்குள் வந்த சிவகாமியின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.தங்கள் குடும்பத்திற்கும் சாகித்தியன் குடும்பத்திற்கும் ஏதாவது உறவு இருக்குமோ என எண்ணியவாறு தமையனின் அறைக் கதவைத் தட்டுகிறாள்.

‘வா’ என்று தமையனின் குரலைக் கேட்டு உள்ளே போன சிவகாமி. தமையனின் கட்டிலில் எறி தலையணையை சுவரோடு சாய்த்து வைத்தபடி ‘அண்ணை நீ ஒரு விசயத்தைக் கவனித்தனியோ’ எனச் சந்திரனை நோக்கிக் கேட்க ,அவன் ‘என்ன விசயமென்கிறான்’.

‘நான் கனநேரமாக கவனிச்சனான், சாகித்தியனை அம்மா கணடதும்,அவரைப் பற்றி

விசாரித்ததும் அம்மாவின்ரை முகம் முந்தின மாதிரி இல்லை, மேசையிலிருந்து நாங்கள் ஒன்றாயிருந்து சாப்பிட்ட போது,அம்மா வெதும்புகிறதைப் பார்த்த அப்பா தலையை ஆட்டின கவனிச்சனியே’

‘இல்லையே’ என்கிறான் சந்திரன்

‘உனக்குச் சாப்பாடென்றால் போதும் காலடியிலை பாம்பிருந்தாலும் தெரியாது, பொம்ப் இருந்தாலும் தெரியாது, அது சரி மேசையிலையிருந்து என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய், அரேபியக் குதிரைக்கு லெவ் லெட்டரோ, இல்லாட்டி இஞ்சை வந்து போறாளே ஒருத்தி உன்ரை அயல் வீட்டுக்காரி அவளுக்கோ, உன்னை நம்ப முடியாது,இரண்டு பேருக்கும் எழுதினாலும் எழுதுவாய்’ என்று சிவகாமி சொல்லி முடிக்கமுந்தி ‘ஏண்டி உனக்கு வேற வேலையே இல்லையா மோட்டுத்தனமாய்த்தான் யோசிப்பியோ’ அவன் சொல்ல,

‘மெய்யே அண்ணை, அம்மா அப்பாவின்ரை முகம் மாற்றத்திற்கு இப்படியிருக்குமோ என யோசிக்கிறன்’

‘எப்படி ‘

‘அம்மா சாகித்தியன்ரை அப்பாவை விரும்பியிருக்கலாம், அப்பா சாகித்தியனை அம்மா விரும்பியிருக்கலாம், சாகித்தியன் யாரென்று அறிஞ்சதும் இரண்டு பேரும் திக்குமுக்காடினமோ’

‘விசரி உனக்கு நல்ல யோசனையே வராதா’

‘இல்லை, அதுக்கில்லை, இந்த வயதானதுகளை நம்ப ஏலாது, எங்கடை வயதிலை எத்தனை பேரை லவ் பண்ணிச்சுகளோ ஆருக்குத் தெரியும்’என்று சொல்ல சந்திரன் ‘அம்மா இவளைக் கூப்பிடு என்னையும் நித்திரை கொள்ள விடாமல் அலட்டிக் கொண்டிருக்கிறாள், அவளைக் கூப்பிடம்மா’ என்கிறான் சந்திரன்.

‘சிவகாமி அவனைக் குழப்பாமல் வெளியிலை வா’ என்று தாயின் குரல் கேட்கிறது.

‘அம்மா உன்ரை அருமைப்புத்திரன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று வந்துபார்,லெவ் லெட்டர் எழுதிக் கொண்டிருக்கிறான் நீ நல்ல பிள்ளை நல்ல பிள்ளையென்று நம்பிக் கொண்டிரு, தசரதனின் முன்று பெண்சாதிகள் மாதிரியும்,அந்தப் புரத்து அழகிகள் மாதிரியும் இந்த வீடிருக்கும், அப்ப தெரியும் உன்ரை மோனின் அருமை பற்றி…….’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாய் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து நேரே மேசையடிக்குப் போய் சந்திரன் என்ன எழுதுகிறான் என்று பார்க்கிறார்…

‘அம்மா அவளின்ரை கதையைக் கேட்டு நீங்களும் வந்து பார்க்கிறியள்…நான் கவிதை எழுத முயற்சிக்கிறனம்மா….’ அவன் தாய்க்குச் சொல்லி முடிக்க முந்தி…

‘ஆ….அதுதானே பார்த்தியளே நான் சொன்னன் …..காதல் கவிதை

எழுதுகிறான்….அம்மா நீங்கள் கவலைப்படாதீர்கள்..குடுத்து வைச்சனீங்கள் உங்களுக்கு ஒரு மருமகள் அல்ல,மருமகள்கள் வரப் போகினம், உங்களுக்கு தேத்தண்ணி வைச்சுத்தர ஒருத்தி, சமைக்க ஒருத்தி, விறாந்தை கூட்ட ஒருத்தி அறைகள் கூட்ட ஒருத்தி, முற்றம் கூட்ட ஒருத்தி, உடுப்புத் தோச்சு போட ஒருத்தி………நினைச்சுப் பார்க்கவே சந்தோசமாயிருக்கு…தெல்லிப்பழை அம்பனையிலை சச்சிதானந்தம் குடும்பம் பிரபல்யமாகப் போகுது…’என அவள் சிரித்துக் கொண்டே சொல்ல…’

‘லூசுத்தனமாக் கதையாதை போய்ப்படு…..நாளைக்கு நாங்களெல்லாரும் சாவகச்சேரியிலை நடக்கிற கல்யாண வீட்டுக்குப் போக வேணும்’

‘அம்மா இவள் கொஞ்ச நேரத்துக்கு முன் உங்களைப்பற்றியும்,அப்பாவைப் பற்றியும் என்ன சொன்னவளென்று தெரியுமோ…’ என்று சந்திரன் சொல்லி முடிக்குமுன், கட்டிலை விட்டிறங்கி பாய்ந்து தாயக்குப் பின்னால் நின்றபடி,தமையனை முறைத்துப் பார்த்து, சொல்லாதை என்பதை மெதுவாக தலையை ஆட்டி காண்பித்து அவனைப் பேசவிடாது’ அம்மா நான் என்ன சொன்னனான் என்றாள் இப்பவே நீங்கள் இப்படி அழகென்றாள் குமர்ப்பிள்ளையிலை கொள்ளை அழகாயிருந்திருந்திருப்பியள் அதுதான் அப்பா மயங்கிவிட்டார்’ என்று சொன்னனான்’ என்று சொல்ல’ ஏன் நான் மட்டுமே கொப்பாவும் அந்த நேரத்திலை,றலிச் சயிக்கிளிலை முன்மக்காட்டிலை ஒரு குதிரை வெள்ளிப் பொம்மையை பொருத்தி கழுத்திலை இரண்டு மணிகளைக் கட்டி சைக்கிளிலை இருந்து போகும் போது அவற்றை கம்பீரம் அப்படியிருக்கும்.ஒழுங்கையாலை அவர் போகிற போது எத்தனை பெட்டையள் வேலிக்குள்ளாலை பார்த்திருப்பினம்….’

‘அதிலை அம்மாவும் ஒருத்தி, கடைசியிலை அம்மாவிலைதான் அப்பா வசமாக மாட்டிப் போனார்…….’ என்று சந்திரன் சிரித்துக் கொண்டு சொல்ல…’

‘சரி சரி விட்டால் கதைச்சுக் கொண்டிருப்பியள்…வாடி போயப்படு….நேரத்தோடை எழும்ப வேணும், அர்ச்சணா குடும்பமும் எங்களோடைதான் வருகினம்….’ என்று சொல்லிக் கொண்டே தாய் போக சிவகாமியும் போகிறாள்.

அடுத்தநாள் காலை நேரத்தோடை வெளிக்கிட்டு சச்சிதானந்தம் குடும்பமும்,அர்ச்சணா வீட்டுக் குடும்பமுமாக குமாரசாமியின் வானில் கல்யாண வீட்டிக்குப் போய்ச் சேருகிறார்கள்.

மாப்பிளை பகுதியும் பொம்பிளை பகுதியும் சச்சிதானந்தத்திற்கு சொந்தம் என்பதால் இருபகுதியினருமே வரவேற்கிறார்கள்.

பந்தலில் சந்திரசேகரத்தையும் அகத்தியனையும் கண்ட சிவகாமி ‘ஓ இவையும் சொந்தமோ என நினைக்கையில்’ சிவகாமி அங்கை பார் யாழ் நியூமார்க்கட்டில் பார்த்த கடை முதலாளியும், எங்களை வீட்டிலை கொண்டு வந்துவிட்ட சாகித்தியனும் இருக்கினம்….கண்டனியே’ என்று அர்ச்சணா சொல்ல,’ம் …கண்டனான் சாகித்தியனுக்குப் பக்கத்திலிருப்பவன்தான் தமையனோ…யாராயிருந்தால்தான்’ என்று

சொல்லியவாறு’ சிவகாமியும் அர்ச்சணாவும் உட்காருகிறார்கள்.

சச்சிதானந்தமும் மகேஸ்வரியும் சந்திரனும், அர்ச்சணாவின் குடும்பமும் அருகருகே உட்காருகின்றனர்.

சாகித்தியன் திரும்பிப் பார்க்க சந்திரன் அவனுக்கு கையசைக்கிறான்.சாகித்தியனிடம் பக்கத்தில் இரந்த இளைஞன் எதுவோ கேட்கிறான்.அவன் சொல்வதைக் கேட்டு அந்த இளைஞனும் திரும்பிப் பார்க்க, அவர்களோடு இருந்த தாயும் தகப்பனும் திரும்பிப் பார்க்கிறார்கள்.

திரும்பிப் பார்த்தவர்களைக் கண்டதும்,சச்சிதானந்தமும் மகேஸ்வரியும் தலையைக் குனிகின்றனர்.திரும்பிப் பார்த்தவர்களில் சந்திரசேகரம் மகேஸ்வரியைக் வைத்தகண் வாங்காமல் பார்த்து கண்கலங்கியபடி முகத்தை திரும்புகிறார்.

அப்பொழுது ‘மகேஸக்கா எழும்புங்கோ மணவறைக்கு பின்னாலை வந்து நின்று பிள்ளைனயின்ரை தாலிக்கு சுரை பூட்ட வேணும் வாங்கோ’ என கையைப் பிடித்து எழுப்பி கூட்டிக் கொணடு போய் மணவறைக்குப் பின்னாலை கொண்டு வந்துவிட்டிட்டு, செல்லம்மாவிடம் வந்து பொம்பிளையின்ரை தாய் ‘நீங்களும் வாங்கோ மணவறைக்குப் பின்னாலை நின்று தாலிப்புரியை பூட்டுங்கோ, வாங்கோ’ என்று சொல்ல,எதுவுமே பேசாது சந்திரசேகரத்தின் மனைவி செல்லம்மா எழுந்து போகிறாள்.

தாய் இரண்டு பேரையும் தனக்குப் பின்னால் கொண்டு வந்துவிட்டதைகஇ கவனித்த பொம்பிளை வதனிக்கு தாலிகட்டப் போற நேரத்திலும் அவர்களைத் திரும்பிப் பார்த்து சிரிக்க,’திரும்பு திரும்பி கல்யாணப் பொம்பிளை மாதிரி இரு’ என்று செல்லம்மா சொல்ல, ‘அம்மா சுப்பரான வேலைதான் செய்திருக்கிறா’ என்று சொல்ல ‘மணப்பெண் திரும்பக்கூடாது கதைக்கக்கூடாது, பொம்பிளையின்ரை அப்பா அம்மா தாலித்தட்டத்தைக் கொண்டு போய் சபையிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு வாங்கோ’ என்று சொல்லி ஐயர் தாலித்தட்டத்தை பொம்பிளையின்ரை தாய்தகப்பனிடம் கொடுக்கிறார்.

தாலித்தட்டத்தை நீட்டி கொண்டு போவதையே பார்த்துக் கொண்டிருந்த சிவாமியிடம்’ என்ன அதையே ஒரே பார்வையாகப் பார்க்கிறாய் உனக்கும் நடக்கும்’ என்கிறாள் அர்ச்சணா.

அர்ச்சணா சொன்னதைக் கேட்ட சச்சிதானந்தம் சிரித்துக் கொள்கிறார்.இளசுகள் உலகம் கிண்டலும் கேலியும் நிறைஞ்சதுதானே.நிறைஞ்சு இருக்க வேணும் என்று நினைப்பவர்.

அர்ச்சணா சொன்னதைக் கேட்டும் கேளாதமாதிரி இருந்த சிவகாமி தாலித்தட்டம் கொண்டு போவதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.அப்பொழுது சாந்தினியில் அவள் பார்வை குத்திட்டு நிற்கிறது.தமையனின் தோளைத் தனது தோளால் தட்டி’ பார் அங்கை உன்ரை லேஞ்சிக்காரி அரேபியக் குதிரையும்

வந்திருக்குது, அங்கை பார் என்று சொல்ல, சந்திரன் திரும்பிப் பார்க்க சாந்தினியும் பார்க்க ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கிறாளோ’ என சிவகாமி சொல்ல சச்சிதானந்தமும் அர்ச்சணாவும் திரும்பிப் பார்க்கின்றனர்.

ஏதோ சின்னஞ்சிறுசுகள் பருவத்துக்குரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் அதையேன் குழப்புவான் என சட்டெனத் திரும்பிக் கொள்கிறார்.

அந்த நேரம் பார்த்து தாலித்தட்டை சாந்தினியிடம் நீட்ட,சந்திரனைப் பார்த்துக் கொண்டே தாலியைத் தொட்ட சாந்தினி’ எப்ப நீ என் கழுத்திலை கட்டப் போறாய் என்று தாலியைத் தொட்டு ‘ சைகையால் கேட்க,யாரைப் பார்த்து இந்தப் பிள்ளை கேட்குது என்று சாந்தினிக்குப் பக்கத்திலிருந்த பெண்கள் சந்திரனை நோக்கித் திரும்ப,அதில் ஒரு வயதான பொம்பிளை ‘வர வர உலகம் கெட்டுப் போச்சுது,கூச்சம் நாச்சமில்லாமல் எப்ப என்ரை கழுத்திலை தாலி கட்டுவாய் என்று அந்த அப்பாவிப் பிள்ளையை கேட்குது….என்று சொல்ல, குபீரென்று சிரித்த சாந்தினி ‘அவர் அப்பாவிப் பிள்ளையா’ என்றவள், ‘கூச்ச நாச்சம் என்று சொல்லி பொம்பிளையள் அடுப்படிப் புகைக்குள்ளையிருக்கிறது அந்தக் காலம்,மாப்பிளை யாரென்று தெரியாமல் தாலிக்கு கழுத்தை நீட்டிப் போட்டு தாலி கட்டினதுக்குப் பிறகு சாதுவாக நிமிர்ந்து பார்த்து, இவர்தான் தாலி கட்டினவரோ என்பது அந்தக் காலம்.இவர்தான் எனது காதலன் தாலிகட்டப் போறவர் என்று நிமிர்ந்து பார்த்து கட்டு தாலியை கெதியிலை என்று சொல்வது இந்தக் காலம்’ எனச் சாந்தி சொன்னதைக் கேட்டு அவளின் தோழிகள் சிரிக்கின்றனர்.

கல்யாணச் சந்தடியால், சாந்தினி கதைப்பதைக் கேட்க முடியவில்லை.ஆனால் அவளும் தன்னைப் போல வாய்க்காரிதான் என நினைக்கிறாள் சிவகாமி.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *