Featureகட்டுரைகள்

மறைக்கப்பட்ட கண்ணீரும், அருந்தப்பட்ட தேநீரும்!… 01… க . அருந்தவராஜா.

இலங்கை , இந்தியா ஆகிய நாடுகள் பிரித்தானியரின் கலாணித்துவ ஆட்சியின் கீழ் இருந்த காலம் . வரிகள் என்ற ஒற்றை சொல்லில் மக்களின் உழைப்புக்கள் உறிஞ்சப்பட்டன. மேலும் பஞ்சம் , பட்டினி, சாதிய அடக்கு முறை என்பன ஏழைத் தொழிலாளர்களை சாவின் விளிம்பில் வைத்திருந்தன.
மக்களின் ஏழ்மையிலும் அறியாமையிலும் பணம் கறக்க வழி தேடினான் வெள்ளைக்காரன். கூட இருந்து மீதம் கறக்கமுற்பட்டான் கங்காணி .
இலங்கையிலே செல்வம் கொட்டிக் கிடக்கிறது. வாருங்கள் வந்து வேலை செய்து விட்டு அள்ளிச் செல்லுங்கள் என்றான் கங்காணி . தமிழர்கள் நம்பினார்கள். இலங்கையின் மலைநாடு பெருங்காடுகளால் மூடிக்கிடந்தன. அவற்றை வெட்டி அழித்து கோப்பி, தேயிலை தோட்டங்கள் அமைக்க பெருமளவான தொழிலாளர் தேவைப்பட்டனர். வெள்ளையர்கள் கங்காணிமாரின் உதவியுடன் இந்த வேலைகளுக்காக தென்னிந்தியாவில் ஆள் பிடிக்கத் தொடங்கினர். ஏற்கனவே வறுமையில் வாடிய மக்கள் இவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கினர்.


தமிழ்நாட்டின் திருச்சி, துறையூர், முசிறி, ஆத்தூர், பெரம்பலூர், மற்றும் மதுரை , நாமக்கல், புதுக்கோட்டை , தஞ்சாவூர், இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவான தொழிலாளர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.இலங்கை வருவதற்காக தங்கள் ஊர்களில் இருந்து கால்நடையாக இராமநாதபுரம் பகுதியை சென்றடைந்தனர். பின்னர் ஒவ்வொருவரின் உடற்தகுதி பரிசோதிக்கப்பட்டன. தகுதியான ஆண்களின் நெஞ்சில் முத்திரை (தீயினால் + தழும்பு) குத்தப்பட்டன. பின்னர் அவர்கள் தொகுதி தொகுதியாக கப்பலில் ஏற்றப்பட்டு பாக்கு நீரிணையைக் கடந்து இலங்கையின் மன்னார்ப் பகுதியில் இறக்கி விடப்பட்டனர். மீண்டும் அவர்கள் கால்நடையாக பெருங்காடுகள் ஊடாக பல நாட்கள் பயணித்து கண்டிப்பகுதியை அடைந்தார்கள். இந்தப் பயணத்தில் விசக் கடி, மிருகங்களின் தாக்குதல், நோய் , பசி, தாகம் போன்ற பல காரணிகளால் அதிகளவான தொழிலாளர்கள் காட்டு நடை பாதைகளிலேயே வீழ்ந்துஇறந்தனர். இவ்வாறு 1841 -1849 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 70000 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக அறிய முடிகிறது .இவ்வாறு கப்பலில் ஏற்றப்பட்ட தொழிலாளர்கள் பாக்குத் தொடுகடலிலில் பயணித்த போது கப்பல் கவிழ்ந்து 450 தொழிலாளர்கள் இறந்ததாக கூறப்படுகின்றது . ( சில தகவல்கள் 1000 பேர் எனவும் , 164 பேர் எனவும் தெரிவிக்கின்றன ,) எப்படியாயினும் எல்லா கடற் பயணங்களிலும் மரணித்தவர்கள் தொகை 1000 க்கும் அதிகமாக இருக்கலாம் என்பது நிதர்சனமாகும்.
ஆதிலட்சுமி கப்பல் மன்னாரில் இருந்து பாம்பன் நோக்கி பயணித்த போது கடலில் மூழ்கியதாக ஒரு தகவலும் மற்றொரு தகவலின்படி பாம்பனில் இருந்து மன்னார் வரும் போது நீரில் மூழ்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உழைத்து வாழ விரும்பிய மக்களை, ஏமாற்றி , துன்பியல் பொறிக்குள் வீழ்த்தி உயிர் ஊசலாடிய மக்களின் உழைப்பில் ஊஞ்சலாடிய கனவான்களை இந்த உலகம் மறந்து விடுமா ?

எப்படியாயினும் ஒரு இனத்தின் கண்ணீர் இன்று தேநீராக அருந்தப்படுகிறது .ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தங்கள் இரத்தத்தை கொடுத்த மக்களின் வரலாறு மறைக்கப்படுவதும் மறக்கப்படுவதும் கொடுமையானது. இந்த வரலாற்று நிகழ்வை இலங்கை கந்தலோயா பாடசாலை மாணவர்கள் கண்காட்சி நாடகமாக நடிப்பு மூலம் 2018 இல் வெளிப்படுத்தியிருந்தனர்.
கண்ணீர் வரலாறு தொடரும் ….  02

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button