எமது ஜனாதிபதி பற்றி எனது அவதானிப்பு!… ஏலையா க.முருகதாசன்.

இலங்கை ஜனாதிபதி பற்றி தமிழ்மக்களுக்கு ஒரு பொதுவான அப்பிப்பராயம் இருக்கும்.அது என்னவென்றும் தெரியும்.
அதை ஒருபுறம் வைத்துவிட்டு எமது நாடான இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதி அவர்கள் பற்றி அவர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எத்தகையவை என்பதை ஆராய்வதே இந்தப் பதிவு.
இப்பதிவை நான் ஒரு கோணத்தில் பார்த்து எழுதுவதை வாசிப்பவர்கள் அதைப் புறக்கணித்துவிட்டு அவர்கள் வேறு ஒரு அலசல் போட்டால் அது அவர்களின் கருத்தாகும்.
ஜனாதிபதி அவர்கள் தான் பதவி ஏற்றவுடன் எடுத்துவரும் நடவடிக்கைகள் என்பது நீண்ட காலமாக பாசியும் சகதியுமாக இருந்த ஒரு குளத்தை தூர் வாருவது போன்றதாகும்.
அவை என்ன என்பதற்கு முன்னால், நான் சந்தித்த எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலமே இப்படி ஒரு பதிவிற்கு ஏன் அவசியம் ஏற்பட்டது என்பதை உணர முடியும்.
நான் 1981 தொடக்கம் 1983 வரை சிங்கப்பூரில் வேலை பார்த்திருந்தேன்.வேலைக்காக சிங்கப்பூரில் போய் இறங்கிய என்னை மலைக்கவும் வியக்கவும் வைத்தது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையமே.ஒரு விமான நிலையம் பூங்காவாகவும் நவீனமாகவும் கட்ட முடியும் என்பதையும்,சிங்கப்பூர் எப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு அவ்விமான நிலையம் சாட்சியாக இருந்தது.
மூன்று ஆணடுகள் நான் அங்கு வேலை செய்தேன் அப்பொழுது அங்கு கற்றுக் கொண்டவை ஏராளம்.சீனர்,மலாயர், தமிழர் எனக் கொண்ட அந்த நாட்டு மக்களை இனம் சார்ந்து விளிக்காமல் ‘சிங்கப்பூரியர்கள்’ என விளித்து அரசாட்சி நடத்துவதால்தான் அங்கு ஒற்றுமை நிலவுகிறது.
அந்த நாட்டினுடைய நவீன வளர்ச்சியைப் பார்த்தும், ஒவ்வொரு கட்டமைப்பினது ஒழுங்கைக் கவனித்து வியந்து, சிங்கப்பூரோடு எமது நாட்டை ஒப்பிட்டுப் பார்த்து ‘ஏன் எங்கள் நாடு, அதுவும் வளம் கொண்ட நாடு இந்நிலைக்கானது என கவலை கொண்டேன்.
வேலைத்தளத்தில் ஒரு நாள் ஒரு சீன தொழிலாளியுடன் உட்கார்ந்து காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.அப்பொழுது 83 இனக்கலவரம் நடந்த அண்மை நாட்கள். அவர் என்னை நோக்கி ‘ என்ன நடக்குது உங்கள் நாட்டில், ஒரு அற்புதமான நாட்டை சிங்களவரும் தமிழருமாகச் சேர்ந்து பழுதாக்கிக்
கொண்டிருக்கிறீர்கள்.உங்கள் நாட்டில் என்ன இல்லை என்று சொன்னவர் தேயிலையிலிருந்து, எமது கனிமப் பொருள்கள், கடல்வளம், நிலவளம் என இன்னும் பல வளங்கள் அத்தனையையும் வரிசையாகச் சொன்ன அவர், உலகின் உயரத்திற்கு கொண்டு போயிருப்பார் என்றவர்,மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்த போது இந்த நாடு வெறும் மண்மேடு.இந்த நாட்டை எப்படி வளம்படுத்தலாம் என்று யோசித்து இங்கு வாழும் அனைத்து இன மக்களையும் சிங்கப்பூரியர் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அவர்களுக்குள் தேசிய உணர்வை ஏற்படுத்தி இந்த நாட்டை நவீனமாகக் கட்டி எழுப்பினார் என்று விரிவுரையே நடத்தினார். அவர் சொன்னது அத்தனையும் உண்மையே என்பதால் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
சிங்கப்பூரில் ‘பணிவன்பு எங்கள் வாழ்க்கை வழிமுறை ‘ என்ற மும்மொழி வாசகங்கள்; எங்குமிருக்கும் (ஊழரசவநளல ளை ழரச றயல ழக டகைந).
அந்நாட்டின் சுத்தத்தை பார்க்கும் போது, எமது நாட்டில் தமது வீட்டுக் குப்பைகளைக் கூட்டி வெள்ளவாய்க்காலுக்குள் போடும் எமது மக்களை நினைத்துக் கொள்வேன்.அங்குள்ள தமிழ் அமைச்சர் சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு கடுமையான சட்டங்களை ஏன் நடைமுறைப்படுத்தினோம் என்பதை’ நாங்கள் ஒரு இரவு மட்டும் இந்தச் சட்டத்தைத் தளர்த்தினோமென்றால் ஒரு இரவுக்குள் சிங்கப்பூர் குப்பைகளால் மூடப்பட்டுவிடும் ‘என்று சொன்ன செய்தியை சிங்கப்பூரிலிருந்து வரும் தமிழ்முரசு பத்திரிகையில் வாசித்திருந்தேன்.மகிழ்ச்சியான வாழ்க்கையே சிங்கப்பூரின் தாரக மந்திரமாகவிருக்கின்றது.
சிங்கப்பூரில் நான் கண்டவை, பெற்ற அனுபவங்கள் ஏராளம்.அவை யாவும் எமது நாட்டுடன் ஓப்பீடுகளாகவே எனது மனம் கொண்டது.
ஐரோப்பிய நாடான ஜேர்மனிக்கு வந்ததன் பின்பு படிப்படியாக இந்த நாடு பழக்கப்பட்டும், ஜேர்மனிய மக்களுடனான அறிமுகங்கள், அவர்களுடன் மேற்கொண்ட உரையாடல்கள் நாளாந்தம் நாம் அலுவல்கள் நிமித்தமாக சந்தித்த அனுபவங்கள் என அவை ஏராளம்.
இப்பதிவை வாசிப்பவர்களுள் இலங்கை, தமிழகம் சார்ந்தவர்களாக இல்லாது அவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும்,ஸ்கண்டிநேவியன் நாடுகளிலும், வடஅமெரிக்க நாடுகளிலும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வாழ்பவர்களாக இலங்கைத் தமிழர்கள் இருப்பின், நான் பெற்ற அனுபவங்களை அவர்களும் பெற்றிருப்பார்கள்.அவர்களும் தமது அனுபவக் கூறுகளை எமது நாட்டோடு ஒப்பிடாமல் இருக்கவும் மாட்டார்கள்.நண்பர்களுடனோ பலருடனோ கருத்துப் பரிமாற்றங்கள் செய்கையில், தாம் வாழும் நாட்டுடன் இலங்கையை ஒப்பிட்டுப் பார்த்து ‘எங்கடை நாடும் இருக்கிறதே, எப்பதான் முன்னேறப் போகிறதோ’ என நீண்ட பெருமூச்சுஎ விடாமலும் இருக்க மாட்டார்கள்.
மேற்கூறிய நாடுகளுக்கு இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து கிட்டத்தட்ட 35 வருடங்களாகவிட்டன.இத்துனை வருடங்களில் அவரவர் வாழும் நாடுகளின்
அனைத்துக் கட்டமைப்பகளின் வளர்ச்சிகளைக் கண்டு வியப்படையாமல் இருக்க மாட்டார்கள்.ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள்.பேருந்துகளும் ரயில்களும் நேரம் தவறாது அந்தந்த தரிப்பிடங்களில் வந்து நிற்பதையும், கடைகளில் பணியாளர்கள் கலோ சொல்லி வரவேற்பதையும் பொருட்களை வாங்கிவிட்டு செல்கையில் நல்ல நாளாகட்டும் என்று அவர்கள் எமக்குச் சொல்வதையும்,திணைக்களங்களில் சட்டரீதியாக எவையெவை எமக்குரியவையோ அவற்றைக் காலதாமதமின்றி செய்து கொடுப்பதையும்,வருமான வரித்துறையினர் எம்மிடமிருந்து வரியை அறவிடும் அதே வேளை எமக்கான ஒரு சதத்தைக்கூட கணக்குப் பார்த்து தருவதையும், மருத்துவமனைகளில் எமது நோயும் மனமும் ஆறுதலடையும் வகையில் பரிவுடன் பழகுதலையும், தொழிற்சாலை சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தொழிலாளியுடன்கூட அத்தொழிற்சாலையின் அதிஉயர் அதிகாரி ஒன்றாக இருந்து உணவருந்துவதையும்,வீதிகளின் நேர்த்தியையும், வீதிகளில் இருக்கும் சிறு பழுதுகளினால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகக்கூடாது என்பதற்காக அபாய விளக்கினை வைப்பதையும், வீதிகளின் சுத்தத்தையும்,காடுகளைப் பாதுகாப்பதையும்,மரங்களைப் பிள்ளைகளாகப் பராமரிப்பதையும்,பாடசாலைகளில் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் செய்வதையும், பிள்ளைகளில் வினைத்திறனை அதிகரிப்பதற்காக பல்வேறு செயல் தி;ட்டங்களை நடைமுறைப்படுத்துவதையும், நட்புடன் பழகும் காவல்துறையினரையும், தவறு செய்தால் அது எந்தப் பெரிய முக்கியமானவராக இருந்தாலும் அதற்கான தண்டனையை வழங்கும் நீதிமன்றங்களையும், விரைவுப் பாதைகளின் உள்ளே வருவதற்கும் வெளியேறுவதற்குமான வீதி ஒழுங்குமுறை பாதுகாப்பானதாகவும் ஒழுங்காகவும் இருத்தலையும் ஒவ்வொரு தனிமனித மாண்பும் போற்றத்தக்கதாக சமூக ஒழுங்கமைப்பும்,வீதிச் சமிக்ஞை விளக்குகளின் தாற்பரியத்தை பாலர் பாடசாலையிலேயே சொல்லிக் கொடுத்தலையும்,ஊழல் இலஞ்சம் அன்ற சேவையை மக்களுக்கு செய்ய வேண்டுமென்ற சதா கவனிப்புடன் இருக்கும் அரசாட்சி முறையையும் இன்னும் பல விடயங்களை எம்மனமும் மூளையும் உள்வாங்குகையில் எமது நாட்டைப் பற்றி சிந்திக்காமலா இருப்போம்.
இச்சூழ்நிலையில் புதிய ஜனாதிபதியாக மாண்புமிகு திரு:கோதபாயா இராஜபக்சா அரச தலைவராகச் தெரிவானதும், அவர் திணைக்களங்களில் அரச தலைவர்களின் படங்களோ வேறு எந்த அமைச்சர்களின் படங்களோ இடம்பெறக் கூடாது என்பதுடன் அரச சின்னமே இடம்பெற வேண்டுமென்று எடுத்த முடிவானதுஈ நாடுதான் முதன்மையானது, அரச தலைவர்கள் அல்ல என்ற பயண அடியெடுத்தலுடன் ஆரம்பித்த ஜனாதிபதியின் பணி மக்களுக்காகவே திணைக்களங்கள் அரச சேவை என்பது மக்கள் சேவை என முன்னிலைப்படுத்தி அனைத்துத் திணைக்களங்களுக்கும் திடீர் திடீரெனச் சென்று அங்கு நடைபெறும் பணிகளின் நிலவரத்தை ஆராயந்;தறிந்து துரிதப்படுத்தலுக்கான அறிவுரையைக் கூறியதுடன், பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வேகமாக தேவைகளைப் பூர்த்தி செய்ய
அறிவுறுத்தியமை(உதாரணமாக ஒரு சில மணித்தியாலங்களில் ஒரு பொதுமகனுக்கு அவனின் தேவையை செய்து கொடுப்பதை மாதக்கணக்கில் இழுத்தடித்துச் செய்வதை தவிர்ப்பதாகும்) இலஞ்சம் ஊழலற்ற ஒரு நாடாக இலங்கை இருக்க வேண்டுமென்ற முனைப்பு,வாகனப் போக்குவரத்துச் சட்டங்கள், போதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்கள், துறைசார் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் திணைக்களங்களின் மேம்பாட்டினை கருத்துக் கொணடு நியமித்தல் போன்றவற்றை அறியும் போது மனம் நிம்மதியடைகின்றது.
;என்னதான் ஆயிரத்தெட்டுக் காரணங்களை மனதில் வைத்து’பூ இது என்ன ஒரு விசயமா’ என மனம் ஒன்று சொல்ல வாய் ஒப்புதலுக்குச் சொன்னாலும், எவராலுமே இலங்கையின் தொடர்பை அறுக்கவோ நிரராகரிக்கவோ முடியாது.ஆகையால்தான் புதிய ஜனாதிபதி ; இலங்கையை முன்னேற்ற வேண்டுமென்ற வேகமான செயல்பாடுகளை வரவேற்க வேண்டும்.
இலங்கையில் திருத்தப்பட்ட வீதிகளையும்,அமைக்கப்பட்ட விரைவுப் பாதைகளையும் கண்டவர்களும்,கேள்விப்பட்டவர்களும் மகிழ்ச்சி கொள்ளாமல் இருந்திருப்பார்களா?.
எனவே ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இலங்கையர்கள் என விளித்து முன்னெடுக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கை முன்மாதிரியானதுதானே.
![]()