படைப்பாளிகள்

லெட்சுமணன் முருகபூபதி!

படைப்பிலக்கியவாதி – ஊடகவியலாளர் லெட்சுமணன் முருகபூபதி

புனைபெயர்கள்: ரஸஞானி – ரிஷ்யசிங்கர்

பிறந்த நாடும் ஊரும் திகதியும் : இலங்கை – நீர்கொழும்பு – 13-07-1951

தற்போது வாழும் நாடும் நகரமும்: அவுஸ்திரேலியா – மெல்பன்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் வெளியான மல்லிகை மாத இதழில் 1972 இல் முதல் சிறுகதை “ கனவுகள் ஆயிரம் “ எழுதி இலக்கியப்பிரவேசம் செய்தவர்.

வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியவர்.

எழுதிய புத்தகங்களின் பெயர்களும் , அவற்றைப் பற்றிய குறிப்புகளும்

சிறுகதைத் தொகுதிகள்:

1. சுமையின் பங்காளிகள் (1975) இலங்கை தேசிய சாகித்திய விருது பெற்றது. ( 1976 )

முருகபூபதி இலங்கையில் பிறந்த ஊரின் பெயர் நீர்கொழும்பு. கடலும் கடல் சார்ந்த நிலமும் என்பதனால் நெய்தல் பிரதேசம். அங்கு வாழ்ந்த பெரும்பான்மை இனத்தவரான கடலை நம்பி வாழும் மக்களின் வாழ்வுக்கோலங்களை, அவர்களின் பிரதேச பேச்சு மொழிவழக்கில் எழுதப்பட்ட கதைகள் அடங்கிய தொகுதி சுமையின் பங்காளிகள்.

இந்நூலின் இரண்டாம் பதிப்பு 2007 ஆம் ஆண்டில் வெளியானது.

2. சமாந்தரங்கள் (1989)

அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் புலம்பெயர்ந்த பின்னர் புகலிட வாழ்வுக்கோலங்களைச் சித்திரித்த கதைகளும் இலங்கையில் இருந்தவேளையில் எழுதப்பட்ட சில கதைகளும் இடம்பெற்ற தொகுதி சமாந்தரங்கள். தான், தனது குடும்பம், தனது சுற்றம், தனது நாடு, என்ற எண்ணங்களிலிருந்து பரிமாணம் பெற்று சர்வதேச வியாபகம் பெறும் கதைகள் அடங்கிய தொகுதி சமாந்தரங்கள்.

3. வெளிச்சம் (1998)

சமூகத்தை உள்ளவாறு சித்திரிக்காமல் உணர்ந்தவாறு சித்திரித்து எழுதப்பட்ட கதைகள் வெளிச்சம் தொகுதியில் இடம்பெற்றிருப்பதாக விமர்சகர்களினால் கருதப்பட்டிருக்கிறது. புகலிட வாழ்வில் பெற்றதும் இழந்ததும் இதில் பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது. வெளிச்சம் வானத்தில் மட்டுமல்ல மனதிலும் தோன்றவேண்டும் எனக்கூறும் கதைகள் இடம்பெற்ற தொகுதிதான் வெளிச்சம்.

4. எங்கள் தேசம் (2000)

தாயகம் இலங்கையில் நீடித்த போரினால் உடைமைகளையும் உயிர்களையும் இழந்து உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் பற்றிக்கூறும் கதைகள். உள்நாட்டு இடப்பெயர்வையும் வெளிநாட்டு புலம்பெயர் வாழ்வையும் சித்திரித்த கதைகள் உள்ளடக்கப்பட்ட தொகுதி எங்கள் தேசம்.

5. கங்கை மகள் (2005)

படைப்பாளி இனம், மதம், மொழி, பிரதேசத்திற்கு அப்பால் சிந்திக்கவேண்டும் என்பதை சர்வதேசக்கண்ணோட்டத்தில் சித்திரித்த சில கதைகள் இடம்பெற்ற தொகுதி கங்கை மகள். மனிதர்கள் மாத்திரமல்ல நதியும் கல்லும் பேசும் கதைகள். மாந்தரின் உளவியல் பருவகாலம்போன்று மாறிக்கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதை பதிவுசெய்த கதைகள் இடம்பெற்ற தொகுதி கங்கை மகள்.

6. நினைவுக்கோலங்கள் ( 2006)

இலங்கையில் வாழ்ந்த போது எனது பால்ய காலத்தில் நிகழ்ந்த பல உண்மைச்சம்பவங்களை பதிவுசெய்த சிறுகதைகளின் தொகுதி நினைவுக்கோலங்கள். நினைக்கத்தெரிந்த மனதிற்கு மறக்கவும் தெரியாது. நினைவுகள் எமது வாழ்க்கைப்பாதையில் தொடர்ந்து இணைந்து வரும் உறவு. அதிலிருந்து நாம் அகல முடியாது என்பதை உணர்த்தும் கதைகளைக்கொண்டது நினைவுக்கோலங்கள்.

7. மதக செவனெலி – (Shadows Of Memories) – மொழிபெயர்ப்பு (2012)

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையால் தோன்றிய நெருக்கடிகளை மனிதாபிமான ரீதியில் தீர்ப்பதற்கு படைப்பு இலக்கியத்தின் ஊடாக மேற்கொள்ள முடிந்த பணிகளை சித்திரித்த கதைகள் இடம்பெற்ற – சிங்கள வாசகர்களுக்காக எழுதப்பட்ட மொழிபெயர்ப்புத் தொகுதி. மூவின மக்களின் வாழ்வுக்கோலங்கள் தனித்துவங்களுடன் தமிழில் எழுதப்பட்ட எனது சில கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் சிங்கள மொழிபெயர்ப்பு மதக செவனெலி. இதனை தமிழ் மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பாளர் ஏ. ஸீ. எம். கராமத் சிங்களத்திற்கு தந்துள்ளார்.

நாவல்:

8. பறவைகள் (2001)

பறவைகள் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்க நேர்ந்தாலும் தனது இரைக்காக தரைக்குத்தான் வரல்வேண்டும் என்ற தொனியில், தாயகம் விட்டு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள், வெளியே என்னதான் உயர்வான வாழ்க்கை வாழ்ந்தாலும், தமது தாயகத்தின் நினைவு ஏக்கங்களுடன்தான் வாழ்வார்கள் என்பதை சித்திரித்த – உள்நாட்டு இடப்பெயர்வு – வெளிநாட்டு புலப்பெயர்வு குறித்த சமுதாயச்சித்திரிப்பு நாவல் பறவைகள்.

சிறுவர் இலக்கியம்:

9. பாட்டி சொன்ன கதைகள் (1997)

சின்னஞ்சிறிய வயதில் எனது பாட்டி என்னை உறங்கவைக்கும்பொழுது சொன்ன ( Bed time stories) கதைகளை உருவகக் கதைகளாக, இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப எழுதப்பட்ட சிறுவர்களுக்கு மாத்திரமின்றி பெரியவர்களுக்குமான கதைகள். இந்த நூல் தமிழ் நாட்டில் வெளிவந்தமையால், அங்கு நூலகசேவைகள் திணைக்களம், சிறுவர் இலக்கிய வரிசையில் இதனைச்சேர்த்து, சுமார் ஆயிரத்து ஐநூறு ஆரம்ப பாடசாலைகளின் நூலகங்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. சிறுவர் இலக்கிய வரிசையில் இடம்பெறுகிறது பாட்டி சொன்ன கதைகள். இத்தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட சில கதைள், சிறுவர்களுக்கு ஆர்வமூடடும் வகையில் சிறுவர் கதைகள் என்ற பெயரில் வண்ணப்படங்களுடன் இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது.

பயண இலக்கியம்:

10. சமதர்மப்பூங்காவில்(1990)

சோவியத் ரஷ்யாவில் 1985 ஆம் ஆண்டு, தலைநகரம் மாஸ்கோவில் நடந்த அகில உலக மாணவர் இளைஞர் விழாவுக்கு இலங்கைப்பிரதிநிதியாக சென்றிருந்தேன். 156 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள் வந்திருந்தார்கள். குறிப்பிட்ட பயணம் பற்றியும் சோவியத்தின் அரசியல் பொருளாதாரம், கலாசாரம், வெளியுறவு முதலானவற்றையும் சோவியத் ஒன்றியத்தின் இனங்கள் பற்றிய பார்வையையும், அங்கு ஏற்பட்ட மாற்றங்களையும் கதையாகக் கூறும் பயண இலக்கியம் சமதர்மப்பூங்காவில்.

கடித இலக்கியம்:

11. கடிதங்கள் (2001)

கடிதங்கள் காலத்தையும் கருத்தையும் சித்திரிப்பவை. உலகில் பல முக்கியஸ்தர்களின் கடிதங்கள் பின்னாளில் நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. நான் படைப்பிலக்கியவாதியாகவும் பத்திரிகையாளனாகவும் வாழ்வதனால் எழுத்தே எனது முழுநேரத்தொழிலாகவும் மாறியதனால், பல இலக்கியவாதிகளுடனும் கலைஞர்களுடனும் நீண்டகாலமாக தொடர்பாடலில் இருக்கின்றேன். மின்னஞ்சல் யுகம் வருவதற்கு முன்னர் எனக்கு வந்த இலக்கியத்தரமான கடிதங்களும் நான் மற்றவர்களுக்கு எழுதிய இலக்கிய நயம் மிக்க கடிதங்களினதும் தொகுப்பு கடிதங்கள்.

நேர்காணல்:

12. சந்திப்பு ( 1998)

நான் இலக்கிய மற்றும் ஊடக வாழ்வில் பல ஆளுமைகளை நேரில் சந்தித்து நேர்காணல்கள் எழுதியிருக்கின்றேன். அதில் தேர்ந்தெடுத்த இலங்கை , இந்திய கலை, இலக்கிய ஆளுமைகளுடன் நடத்திய சந்திப்பு நேர்காணல்களின் தொகுப்பு சந்திப்பு.

கட்டுரை நூல்கள்:

13. நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ( 1995)

இலக்கியப்பிரவேசம் செய்த 1970 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவுக்குப்புலம்பெயர்ந்த 1987 ஆம் ஆண்டுவரையில் என்னுடன் நன்கு பழகிய தமிழ், சிங்கள, முஸ்லிம், சோவியத் உக்ரேய்ன் இலக்கிய நண்பர்கள் ( இதில் எழுத்தாளர்கள், இலக்கியப்பேராசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் அடங்குவர்) 12 பேரைப்பற்றிய நினைவுத்தகவல்கள் நிரம்பிய கட்டுரைகளைக்கொண்டது. பிரான்ஸில் வெளியான பாரிஸ் ஈழநாடு வார இதழில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்.

14. இலக்கிய மடல் (2000)

இலங்கை, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலும் வெளியான இதழ்களில் பதிவாகிய எனது கட்டுரைகளின் தொகுப்பு இலக்கியமடல்.

புகலிட இலக்கியம், புகலிட வாழ்வுக்கோலங்கள். தலைமுறை இடைவெளி, , ஒளியில் மலரும் மொட்டுக்களான குழந்தைகளின் நிகழ்ச்சித்தொகுப்பு – பாப்பா பாரதி வீடியோ ஒளிப்பதிவு ( மூன்று பாகங்கள்) பற்றிய பதிவு, அவுஸ்திரேலியாவில் வெளியான தமிழ் இதழ்கள் – பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் மறைவும் பற்றி ஆய்வுக்கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்ற தொகுதி இலக்கிய மடல்.

15. மல்லிகை ஜீவா நினைவுகள் (2001)

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மல்லிகை என்னும் இதழின் பங்களிப்பு விதந்து போற்றுதலுக்குரியது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்த மல்லிகை இதழில்தான் எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் 1972 ஆம் ஆண்டு வெளியானது. மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தி ஊக்குவித்தவர். அவருக்கு 75 வயது பிறந்தவேளையில் ( பவளவிழா) அவரின் வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்து எழுதப்பட்ட நூல் மல்லிகை ஜீவா நினைவுகள்.

16. எம்மவர் (2003)

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த வாழ்கின்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரத்திரட்டு. 2001 ஆம் ஆண்டு மெல்பனில் நடைபெற்ற முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவின் அமைப்பாளர் என்ற முறையில் நான் சமர்ப்பித்த தொடக்கவுரையே முன்னுரையாக அமைந்த இந்த நூலில் பலரையும் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எம்மவர் எதிர்காலத்தில் எழுத்தாளர்கள் பற்றிய ஆவணத்தயாரிப்புக்கு உசாத்துணையாக விளங்கலாம்.

17. கவிஞர் அம்பி வாழ்வும் பணியும் (2004)

அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்களை 1970 களில் சந்தித்து இன்றுவரையில் நட்பு பாராட்டி வருகின்றேன். அவருடைய 75 வயது பவளவிழாவை முன்னிட்டு 2009 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூல். அவருடைய படைப்புகளை ஆய்வுக்கண்ணோட்டத்திலும் சித்திரித்தது கவிஞர் அம்பி: வாழ்வும் பணியும்.

18. ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் (2005)

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு முக்கியமான ஆளுமை ராஜஶ்ரீகாந்தன். இலக்கியப்பிரதியாளர், பத்திரிகை ( தினகரன் ) ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அர்ப்பணிப்புள்ள தொண்டன். அவருடைய திடீர் மறைவின் தாக்கத்தினால் எழுதப்பட்ட நூல்: ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள். இந்நூலிலும் இவருடைய வாழ்வையும் ஊடக மற்றும் இலக்கியப்பணிகளையும் விதந்து எழுதியிருக்கின்றேன்.

19. உள்ளும் புறமும் ( 2011)

இலங்கையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரையில் நான்குநாட்கள் தொடர்ச்சியாக கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ்

எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளராக இயங்கினேன். இந்த மாநாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் பயன்பாடும் பற்றிய பூரண விளக்கத்தை பதிவுசெய்த நூல் உள்ளும் புறமும்.

20. சொல்ல மறந்த கதைகள் ( 2014)

எனது இலக்கிய ஊடகத்துறை மற்றும் அரசியல் சமூகப்பொது வாழ்வில் நிகழ்ந்த பல உண்மைச்சம்பவங்களின் தொகுப்பு சொல்ல மறந்த கதைகள். ஒவ்வொரு தேசத்திலும் நீடிக்கும் போர்களினால் முதலில் பாதிக்கப்டுபவர்கள் குழந்தைகளும் பெண்களும்தான் என்பதை அழுத்தமாகப்பதிவுசெய்யும் நூல். பகை மறந்த – முரண் அறுத்த – நல்லிணக்கத்தை நோக்கிப்பயணிப்பதற்கு சமூகவியல் பார்வையில் எழுதப்பட்ட ஆவணப்பதிவு சொல்ல மறந்த கதைகள்.

21. சொல்ல வேண்டிய கதைகள் ( 2017)

எமது எதிர்காலம் குழந்தைகளுக்கானது. அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சமூகம் பற்றி வாழ்வியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புனைவு சாரா இலக்கிய நூல் சொல்லவேண்டிய கதைகள். இதனை பேரக்குழந்தைகளுக்கு சமர்ப்பித்துள்ளேன்.

22. சொல்லத்தவறிய கதைகள் ( 2019)

சமூகத்திற்காக பேசவேண்டியதும், சமூகத்தை பேசவைக்கவேண்டியதும் படைப்பாளிகளினதும் ஊடகவியலாளர்களினதும் பிரதான கடமை. அந்தவகையில் சமூகம், கலை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, அரசியல், மனவலிகள் பற்றி எழுதப்பட்ட புனைவு சாரா இலக்கியத் தொகுப்பு : சொல்லத்தவறிய கதைகள்.

23. இலங்கையில் பாரதி – ஆய்வு நூல் ( 2019 )

மகாகவி பாரதியின் படைப்பாளுமை பண்புகள் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வுசெய்யப்பட்ட இந்நூலின் உள்ளடக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிர் இதழில் 40 வாரங்கள் தொடராக வெளியானது. அத்துடன் அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழிலும் மறுபிரசுரமானது.

———————————–

முருகபூபதி தொகுத்துள்ள நூல்கள் ( சிறுகதை, கவிதை) மலர்கள் :

1. நம்மவர் (மலர்) 1996

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை, ஓவியர் கே.ரி. செல்வத்துரை, வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த கலைஞர் அண்ணாவியார் இளைய பத்மநாதன், கவிஞர் அம்பி ஆகியோரின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் விழாவை ( 1996 ஆம் ஆண்டு)மெல்பனில் எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழா நிகழ்வில் நடத்தியபொழுது வெளியிடப்பட்டது நம்மவர் – மலர் .

2. உயிர்ப்பு – சிறுதைகள் ( 2005)

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த – வதிகின்ற 20 எழுத்தாளர்களின் 20 சிறுகதைகளைக் கொண்ட தொகுதி. சிட்னியில் வதியும் ஓவியர் ஞானம் இதற்கு முகப்பு ஓவியம் வரைந்துள்ளார். 2005 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த ஐந்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் உயிர்ப்பு வெளியிடப்பட்டது.

3. வானவில் – கவிதைகள் ( 2007)

அவுஸ்திரேலியாவில் வதியும் 31 கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தொகுதி வானவில் 2007 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த ஏழாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்டது.

4. பூமராங் கலை, இலக்கிய மலர் ( 2010)

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் ( Australia Tamil Literary & Arts Society) பத்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட அவுஸ்திரேலியா வாழ் படைப்பாளிகளின் சிறுகதைகள், கட்டுரைகள், ஆய்வுகள், கவிதைகள் முதலான பல ஆக்கங்கள் இடம்பெற்ற சிறப்பு மலர் பூமராங்.

5. Being Alive ( ஆங்கிலம் – மொழிபெயர்ப்பு (2011)

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த – வதிகின்ற தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் Being Alive. இலங்கையில் கொழும்பில் 2011 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் மொழிபெயர்ப்பு அரங்கில் வெளியிடப்பட்டது.

6. கட்டுரைக்கோவை (2011)

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் சில உலக நாடுகளைச்சேர்ந்த எழுத்தாளர்களின் சிறந்த ஆய்வுகள், ஆக்கங்கள் இடம்பெற்ற கட்டுரைத்தொகுதி. இலங்கையில் கொழும்பில் 2011 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கும் பேராளர்களுக்கும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட்ட மலர் கட்டுரைக்கோவை.

7. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு சிறப்பு மலர் ( 2011)

தொன்மையான தமிழ் இலக்கியம் இலங்கையில் பல பரிமணங்களைப் பெற்றிருக்கிறது என்பதை ஆதார ஆவணங்களுடன் பதிவுசெய்த மலர். பல அறிஞர்கள், இலக்கியப்படைப்பாளிகள், சமூக ஆய்வாளர்கள் எழுதிய ஆக்கங்களுடன் வெளியான சிறப்பு மலர். இலங்கையில் கொழும்பில் 2011 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கும் பேராளர்களுக்கும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் பொது நூலகங்களுக்கும் வழங்கப்பட்ட சிறப்பு மலர்.

8. நெய்தல் (2015)

முருகபூபதி, இலங்கையில் வடமேல் மகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பில் 1954 ஆம் ஆண்டு இந்து தமிழ்ப்பிள்ளைகளுக்காக தொடங்கப்பட்ட ஆரம்பப்பாடசாலை விவேகானந்தா வித்தியாலயத்தில் முதல் மாணவனாக 1954 ஆம் ஆண்டு விஜயதசமி தினமன்று ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்து இணைத்துக்கொள்ளப்பட்டவர். . இன்று அந்தக்கல்விச்சாலை இப்பிரதேசத்தில் ஒரே ஒரு இந்து மத்திய கல்லூரியாக தரம் உயர்ந்துள்ளது. அதன் பெயர் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி. அதன் வைரவிழாவை முன்னிட்டு, அதன் முதல் மாணவன் என்ற நன்றியுணர்வுடன் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் ஆக்கங்களையும் சேகரித்து , நீர்கொழும்பூரின் சிறப்புகளையும் பதிவுசெய்யும் ஆவணமாகவும் முருகபூபதி தொகுத்த நூல்: நெய்தல். இக்கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

பெற்ற விருதுகள்:

1. சுமையின் பங்காளிகள் – 1975 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத்தொகுதிக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது .

2. பறவைகள் – 2002 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது .

3. அவுஸ்திரேலியா தினத்தில் ( ஜனவரி 26) 2002 ஆம் ஆண்டு சிறந்த பிரஜைக்கான விருது .

4. அவுஸ்திரேலியாவில் 2012 இல் பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது .

5. அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சு இணைய இதழ் 2018 இல் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், மெல்பன் தமிழ்ச்சங்கம் முதலான அமைப்புகளின் பாராட்டு விருதுகளும் பெற்றவர்.

ரஸஞானி ஆவணப்படம்: ( 2017 )

முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி என்ற ஆவணப்படத்தை 2017 இல் மெல்பன் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் வீடியோ கலைஞர் மூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்து வெளியிட்டனர்.

—-0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *