திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் பிரதம ஆசிரியர் – உதயன் பத்திரிகை, கனடா

1953ம் மே மாதம் 23ம் திகதி இலங்கையில் பிறந்த திரு ஆர். என்.லோகேந்திரலிங்கம் தனது கல்வியை ஆரம்பத்தில் பதுளை ஊவாக் கல்லூரியிலும் அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் விக்ரோரியாக்கல்லூரி, திருநெல்வேலி பரமேஸ்வரக் கல்லூரி ஆகியவற்றி ல் கல்வி கற்று தொடர்ந்து தனது தொழில்நுட்ப டிப்ளோமா கல்வியை யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரியிலும், இலங்கை பல்கலைக் கழகத்தின் கட்டுபத்தை வளாகத்திலும் பயின்று பின்னர் இலங்கை மின்சார சபையிலும் அதனைத் தொடர்ந்து இலங்கை உள்ளுராட்சித் திணைக்களத்திலும் மின்சார அத்தியட்சகராக சுமார் பத்து வருடங்கள் பணியாற்றிய பின்னர் 1990ம் ஆண்டு கனடாவிற்கு நிரந்தர வதிவிட விசா பெற்று தனது குடும்பத்தோடு குடியேறினார்.
விஞ்ஞானக் கல்வியை பயின்றாலும் தனது 15 வயதிலல் கவிதை எழுதுவதன் மூலம் எழுத்துலகில் புகுந்த திரு. லோகேந்திரலிங்கம் அக்காலத்தில் ஈழத்து தமிழ் மக்களை பீடித்திருந்த பல பிரச்சனைப் பிணிகளை தீர்ப்பதற்காக ஒரு ஆயுதமாக இலக்கியத்தை பயன்படுத்த
தொடங்கினார். வேலையில்லாத்திண்டாட்டம், அரசின் அடக்கு முறைகள், சாதிப்பிரச்சனைகள், அரசியல் ஏமாற்றுத்தனம், சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியன இவரது இலக்கியத்தின் கருக்களாகி நின்றன. 1975ம் ஆண்டு போலிகள் என்ற புதுக்கவிதை நூலை வெளியிட்டு அதன் வெளியீட்டு
விழாவில் கவிஞர் புதுவை இரத்தினதுரை மற்றும் காலஞ்சென்ற கவிஞர் சில்லையூர் செல்வராசன் ஆகியோர் கலந்து கொண்ட கவியரங்கிலும் பங்கு பெற்றினார். திரு லோகேந்திரலிங்கம் மேலும் சில புனை பெயர்களிலும் எழுதிவருகின்றார். அவற்றுள் ஒன்று “மலையன்பன்” இந்த புனைபெயரை அவர் சூட்டிக் கொண்டதற்கு காரணம் அவர்
இலங்கையில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ள மலைநாட்டில் பிறந்தபடியாலும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பால் அன்பு
கொண்டவர் என்ற காரணத்தாலும் என்கிறார். அரசியல் ஈடுபாடு கொண்ட இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் அங்கத்தவராக சேர்ந்து கம்யூனிசக் கோட்பாடுகளையும் கற்றுத்
தேர்ந்தார். ஆயினும் தேவையானோருக்கு உதவுதல் சமூக சேவை நிறுவனங்களோடு சேர்ந்து இயங்குதல் போன்றவற்றில் தனது பள்ளி நாட்களிலிருந்தே இவர் நாட்டம் காட்டி வந்தமை இங்கு
குறிப்பிடத்தக்கது. தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகள் தொடர்பான தேடல் பல கொண்ட இவர் இலங்கையிலேயே மொழி பெயர்ப்பு பணிகளில் தாம் மின்சார அத்தியட்சகராக பணியாற்றிய
திணைக்களங்களினால் ஈடுபடுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கவிதைகள் மாத்திரமல்ல சிறுகதைகள், இலக்கிய விமர்சனங்கள், கவியரங்குகளில் பங்கு பற்றுதல், அவற்றிற்கு தலைமை தாங்குதல் இலக்கிய கூட்டங்களை ஏற்பாடு செய்தல் போன்ற பல முன்னேற்றமான
பணிகளும் திரு லோகேந்திரலிங்கத்திற்கு மிகவும் கைவந்தவையே ஆகும். கனடாவிற்கு 1990 ஆண்டு வந்து குடியேறிய இவர் வந்த மறுநாளே சமூகப்பணிகளில் ஈடுபடத்தொடங்கினார். மொழி பெயர்ப்பு உதவிகள் தேவையானோர் மற்றும் படிவங்கள் நிரப்புதல் போன்றவகையிலும்
நூற்றுக் கணக்கானவர்களுக்கு உதவி நின்றார் லோகேந்திரலிங்கம்.. உலகத்தமிழர் பத்திரிகையினால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளிலும் இரண்டு வருடங்கள் இவர் பரிசுகளைத் தட்டிக்கொண்டார். 1993ம் ஆண்டு ஏனைய நான்கு நண்பர்களோடு சேர்ந்து இவர் ஆரம்பித்த சூரியன் என்னும் வாராந்த பத்திரிகைதான் கனடாவின் முதல்
இலவச வாரப்பத்திரிகை என்ற நாமத்தை தனக்காக்கித் கொண்டது. சுமார் மூன்று வருடங்கள் சூரியன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றி அதனை நல்ல ஒரு நிலைக்கு உயர்த்திய அவர் தொடர்ந்து பங்காளிகளுக்கிடையே தோன்றிய சிறிய தடங்கல்கள் காரணமாக
பத்திரிகையை இடைநிறுத்தி தனது சொந்தப் பத்திரிகையாக உதயனை ஆரம்பித்தார். அந்த நேரத்தில் இவருக்கு இவரது மனைவி மக்கள் மற்றும் சட்டத்தரணி சண் முருகேசு ஆகியோர் முக்கிய துணையாக நின்றனர் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு எப்போதும் கூறிநிற்பவர்
லோகேந்திரலிங்கம். உதயன் பத்திரிகை ஆரம்பித்த நாள் தொடக்கம் நல்ல பணிகளை ஆற்றிக்
கொண்டமையால் அது ஈழத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல இங்குள்ள தமிழ் நாட்டுத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் ஆகிய சமூகத்தவர் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கைப் பெற்று ஓங்கி வளரத் தொடங்கியது. இங்குள்ள அரசியல் பிரமுகர்களோடு நெருக்கமான உறவுகளைப் பேணிவருகின்ற உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் பல தடவைகள் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று ஒட்டாவா பாராளுமன்றத்திற்கும் சென்று வந்தவர் என்பதும். சில முன்னாள் கனடிய பிரதம மந்திரிகளின் அலுவலகங்களுக்கும் சென்று அவர்களை பேட்டி
கண்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுவரையும் அவர் சில நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் “காலத்தின் பதிவுகள் (கவிதைத் தொகுதி) மறுக்கப்பட வேண்டிய
மீறல்கள் (சிறுகதைத் தொகுதி) “இதுவரை” (கனடா உதயன் கதிரோட்டங்கள்ன் தொகுப்பு) ஆகிய முக்கிய இடம் வகிக்கின்றன. “இதுவரை” நூலின் வெளியீட்டு விழாக்கள் தமிழ்நாட்டில் பல
நகரங்களில் நடைபெற்றுள்ளன. இலங்கையிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் பல பேச்சாளர்களையும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும்
கனடாவிற்கு அழைத்து கௌரவித்துள்ளார். திரு ஆர். என். லோகேந்திரலிங்கம். அவர்களுள் முக்கியமானவர்கள், கவிப்பேரரசு வைரமுத்து, “ஆச்சி மனோரமா, லேனா தமிழ்வாணன், ஏர்வாடி
இராதாகிருஸ்ணன் மற்றும் பலர். 1999ம் ஆண்டு இவர் அழைத்து கனடாவிற்கு முதன் முதலாகச் சென்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், சில நாட்கள் திரு லோகேந்திரலிங்கத்தின் நடவடிக்கைகளையும் இயல்புகளையும் நன்கு கவனித்துவிட்டு அவருக்கு விழா மேடையில்
“நட்பின் நாயகன்” என்னும் பட்டத்தை வழங்கினார். இலங்கையையும் ஏனைய பல நாடுகளையும் சுனாமி என்னும் கொடிய கடல் பிசாசு தாக்கியழித்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த கனடிய
பாராளுமன்ற மற்றும் வர்த்தகக் குழுவினரோடு அங்கு சென்று பாதிக்கப்பட்ட தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு தனது கவலைகளைத் தெரிவித்து வந்தவர் இவர். கடந்த 2002ம் ஆண்டு கனடாவில் இயங்கும் மூத்த தமிழ் அமைப்பாகிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மன்றம் இவரது உதயன் பத்திரிகையை கனடாவில் “ சேவையில் சிறந்த பத்திரிகை” என்று சிறப்பு விருது வழங்கி
கௌரவித்தது.அக்கினிக்குஞ்சு “வாழ்நாள் சாதனையாளர்” விருதுவழங்கி கௌரவித்தது. இதே போல் 2005 ம் ஆண்டு இவரது பத்திரிகைத்துறை சேவையை பாராட்டி கனடிய பல்லினப் பத்திரிகையாளர் சங்கம் செய்த சிபார்சின் அடிப்படையி ஒன்றாரியோ மாகாண லெப்னினட் கவனர் அவர்கள் இவருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்தார். 2002ம்
ஆண்டு தென் ஆபிரிக்காவில்இடம்பெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டிலும் அதன் பின்னர் 2006 ம் ஆண்டு தமிழ் நாட்டின் சேலம் மாநகரில் இடம்பெற்ற பழ நெடுமாறன் அவர்களின் உலகத் தமிழர்
பாதுகாப்பு பேரவையின் மாநாட்டிலும் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் திரு லோகேந்திரலிங்கம். இவ்வாறாக பத்திரிகைப் பணி மூலம் அச்சு ஊடகத்துறை சார்ந்த
பணிகளைச் செய்து வந்தாலும் அதன் ஊடாக தன்னால் இயன்ற சமூகப்பணியை ஆற்றிவருவதே தனக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக என்று நம்பியிருக்கும் திரு லோகேந்திரலிங்கம் மிகவும
துணிச்சலான பத்திரிகையாளர் என்று பலராலும் பாராட்டப்பட்டவர்
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2014ம் ஆண்டு கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளுனர் நாயகம் அவர்களின் “10 சிறந்த பல்லினப்
பத்திரிகைகளில் ஒன்று” என்ற சிறப்பு விருதும் கனடா உதயனுக்கும் அதனை வெளியிடும் திரு ஆர். என். லோகேந்திரலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கனடாவில் இயங்கிவரும் “மனித நேயத்திற்கான ரொரென்ரோவின் குரல்” என்னும் அமைப்பின் தலைவராக இருந்து பல மனித நேயப் பணிகளை ஆற்றிவருகின்றார். இந்த அமைப்பு இலங்கையில் தாயத்தின் வன்னி
மண்ணில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை வழங்கியுள்ளது.
![]()