நல்லது!
வேலை செய்வது என்பது முக்கியமானதுதான் ஆனால் அந்த வேலையை எதற்காக செய்கிறோம் என்பது அதனிலும் முக்கியமான விசயம்.
சுவரோவியங்கள் என்பவை மக்களிடையே மிக நெருக்கமாக நித்தம் போய்சேரக்கூடிய கலைவடிவங்களுள் ஒன்றாக நான் நம்புகிறேன். நகரின் மிக முக்கிய இடங்களில் கிடைக்கக்கூடிய அதிகளவு மக்கள் கடந்துபோகக்கூடிய வெளியை நீங்கள் பயன் படுத்துகிறீர்கள் என்கையில் அதனை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பது கவனிக்கவேண்டிய விசயமில்லையா. தெற்கிலே வெற்றுப்பெருமைகளை பேசுகிறார்கள் என்பதற்காக நாங்களும் எல்லோருக்கும் ஏற்கனவே சிந்தனையில் ஊறி வீண்பெருமைகளையும் காணுமிடமெல்லாம் கதைகதையாக பரப்பிக்கொண்டிருக்கிற அதேவிசயங்களை பற்றியும் பேசுவதற்கு ஏன் இவ்வளவு உழைப்பை செலுத்தவேண்டும் உங்கள் கலையும் சிந்தனையும் எவ்வாறு மக்களை போய்ச்சேரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை எவ்வளவு தூரம் விளைவுகளைத் தரக்கூடியதாக பயன்படுத்தமுடியுமோ அவ்வாறு பயன்படுத்துவதுதானே நமது பங்களிப்பின் நோக்கமாக இருக்கமுடியும். கடந்த காலங்களும் வரலாறும் நமக்கு இவ்வளவும்தானா கற்றுத்தந்திருக்கிறன.
நண்பர்களே நீங்கள் “வேலையும் செய்ய மாட்டானுகள் செய்யவும் விடமாட்டானுகள்” என்று கோபிப்பது தர்க்கமற்றது ஒரு விடுதலை குறித்த, இயற்கையை பேணுவது குறித்த, தனிமனித உரிமைகள் குறித்த மனிதாபிமானம் பற்றிய, மற்றவர்களை மதித்தலை, நிற-மத- இன வேற்றுமைகளை, அதிகாரங்களின் நெருக்குதல்களை, குழந்தைகள்-உலகம் பற்றியோ பேசுவதில்தானே தெற்கில் வரைந்தவர்களை வெட்கவும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் அனைவரையும் சென்றடையவும் கூடிய சித்திரங்களாக இருக்க முடியும். அதேதான் நண்பர்களே வேலைசெய்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது எதற்காக வேலை செய்கிறோம் என்பது.
சீமெந்து விளம்பரங்களும் நகரை வண்ண- மயமாக்குபவைதான் ஆனால் அவை கலையாகுவதில்லை.
– பா.காண்டீபராஜ்