நீதானே என் பொன்வசந்தம்!… ( நாவல் )
01
”நித்யா”
அவளது நீண்ட நேர கேவல் அப்போதுதான் முடிவுக்கு வந்திருந்தது. கைகளை பற்றிக்கொண்டேன். அவளை எப்படி தேற்றுவது என்ன சொல்லி தேற்றுவது.
“நித்யா….”
மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். கடந்த ஐந்து வருட நட்பில் அன்றிருந்த அளவுக்கு உடைந்துபோயிருந்த நித்யாவை நான் பார்த்ததில்லை. என்னதான் ஆகட்டும்… அவள் கலங்கக்கூடாது. ஆனால் எப்படி? கடந்த சில நாட்களாக பதிலை தேடி தேடி தோற்றுப்போனேன். பற்றியிருந்த கைகளை மெல்ல இறுக்கினாள். அவளுக்கு தெரியும்.. வெளிக்காட்டிக்கொள்ளாத பெரிய சூறாவளி ஒன்று எனக்குள்ளும் வீசிக்கொண்டிருக்கிறது என்பது. நம்மிருவருக்கும் தேவையான ஆறுதலை அந்த அணைப்பு பரிமாறிக்கொண்டது.
“பயமா இருக்கடா……… அம்மாட்ட சொல்லலாமா?”
கடந்த இரு நாட்களில் நித்யா பேசிய முதல் வார்த்தை அது.
“ம்ம். சொல்லத்தன் வேணும். வேற வழி இல்ல நித்யா… எப்பிடி எடுக்கப்போறாங்க எண்டுதான் தெரியேல்ல”
தொடர்ச்சியாக சில மணிநேரங்கள் மௌனமாகவே விலகிக்கொண்டிருந்தது. கைகளை விலக்கிக்கொள்வதில் இருவருக்கும் விருப்பம் இருக்கவில்லை.
இருபத்தொரு வயதில் இது நீயோ நானோ எதிர்பாராத பிரச்சினை. ஆனால் நீ இதற்காக உடைந்துபோகக்கூடாது நித்யா. அவமானங்களும், புறவுலகு குறித்த விரக்திகளுடனுமே கடந்து போய்க்கொண்டிருந்தவனை அணைத்துக்கொண்டவள் நீ நித்யா. நீ வெறுமனே என் தோழி மட்டுமல்ல.. எதிர்பார்ப்பில்லாத தூய அன்பை என்மேல் கொட்டியவள். தாய் அன்பு என்பதை எனக்கு புரியவைத்தவள் நீ. நீ உடைந்துபோவதை நான் அனுமதிக்கமுடியாது.
**********
“நான் பிரக்னெண்டா இருக்கிறன் வருன்”
உடைந்து வந்த வார்த்தைகளின் முடிவில் நித்யா தேம்பிக்கொண்டிருந்த ஒலி தூரமாக கேட்பதுபோலிருந்தது. கையில் தொலைபேசி இருந்ததோ மறுமுனையில் நித்யா அழுதுகொண்டிருந்ததோ மறந்து போய்விட்டது. என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதை கிரகித்துக்கொள்ள சில மணிநேரங்கள் இடைவெளி தேவைப்பட்டது.
“நித்யா கர்ப்பமாக இருக்கிறாள். நித்யாவின் வயிற்றில் என் குழந்தை…. ஓ மை காட்….”
சந்தர்ப்ப சூழ்நிலைகளும், அந்தநேரத்து உணர்ச்சி பெருக்குகளும் உடல் ரீதியான உறவை இருவருக்குள்ளும் ஏற்படுத்தி விட்டாலும் அந்த நேரத்து பாதுகாப்பு குறித்தோ, அதன் பின்னரான விளைவுகளை கையாளும் பக்குவத்தையோ அந்த வயதில் இருவரும் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.
பெரும்பாண்மையான ஞாயிற்றுக்கிழமைகளில் நானும் அவளும் வீட்டில் தனித்திருந்திருக்கிறோம் என்றபோதும் அன்று மட்டும் ஏன் அப்படி நடந்தது? சினேகமான ஆயிரம் அணைப்புகள் எமக்குள் நிகழ்ந்திருந்தபோதும் அன்றைய ஸ்பரிசம் மட்டும் ஏன் ஒரு தூண்டலை எமக்குள் நிகழ்த்தியிருக்கவேண்டும்…? பதிலற்ற முட்டாள்தனமான கேள்விதான் என்றபோதும் திரும்ப திரும்ப மூளையை போட்டு உடைத்துக்கொண்டிருந்தேன். நானோ அவளோ இல்லாத மூன்றாவது குற்றவாளியை தேடும் முயற்சிதான் அது.
“ஓ நித்யா… இப்போது நான் உன்னருகில் இருக்கவேண்டும்”
************
“வருன்…..”
பேசுவதையோ, சாப்பிடுவதையோ மறந்துவிட்டிருந்தாள் அவள். எப்போதாவது வரும் ஒன்றிரண்டு வார்த்தைகளையும், கட்டாயப்படுத்தி திணிக்கும் உணவுகளையும் தவிர அவள் அப்படியே இருந்தாள்.
”அம்மா என்ன சொன்னாங்க வருன்”
பதிலெதுவும் சொல்லாமல் அவளருகில் அமர்ந்துகொண்டேன். தோள்களில் சாய்ந்துகொண்டாள். அவள் எப்போதும் அப்படித்தான். வார்த்தைகளை கோர்த்து நான் பேசுவதை விட என் மௌனங்களில் இருந்து என்னை புரிந்துகொள்ள தன்னால் முடியும் என்று நம்புபவள்.
“நித்யா…”
“சொல்லு”
“என்னால எதுவுமே யோசிக்கமுடியல்ல… என்ன செய்யிறதெண்டும் தெரியல்ல. ஆனா நீ எனக்கு முக்கியம் நித்யா”
“…..”
சொல்லவந்ததை சொல்லமுடியவில்லை. உணர்வுகள் முட்டி மோதிக்கொண்டிருந்தது. என்ன செய்வதென்றும் புரியவில்லை. தயங்கி தயங்கி மெதுவாக நித்யாவின் வயிற்று பகுதியை தடவிப்பார்த்தேன். ஒரு கணம் உடல் சிலிர்த்துக்கொண்டது. என்னை சுற்றி ஆயிரம் பிரச்சினைகள் இருக்கு… இந்த நேரத்தில் நித்யாவை திருமணம் செய்துகொள்ளவும் இப்போதைக்கு இயலாது… என்னால் எதுவுமே முடியாது. ஆனால் அதையெல்லாம் கடந்து, நித்யா வயிற்றில் இருப்பது என் குழந்தை. என் வாரிசு…!
நித்யாவும் மெலிதாக புன்னகைத்துக்கொண்டாள்.
02
”நித்யாவுக்கு மட்டும் ஏன் என்னை பிடிக்கிறது” நித்யாவுடனான பள்ளி நட்பு ஆரம்பித்த காலங்களிலிருந்து அடிக்கடி நினைத்துக்கொள்வேன். இப்போதுகூடத்தான். அழகு, ஸ்மார்ட்னெஸ், திறமை எல்லாமே மறைகணக்கில் இருக்கும் ஒருவனை எப்படி பெண்களுக்கு பிடிக்கும்? எத்தனை தடவை நினைத்தாலும் பதில் ஒற்றையாய்தான் எப்போதும் முடியும். பிள்ளையை நேசிக்கும் தாயின் மனதில் என்ன தேவைதான் இருந்திவிடப்போகிறது. நீ என் தாய் அல்லவா நித்யா !
”அவ கண், காதை பார் வருன்.. அப்பிடியே உன்னை மாதிரி”
கட்டிலில் சரிந்திரிருந்த நித்யாவின் முன்னே மென்பூவாய் படர்ந்திருந்தாள் அபி. நான்கு மாதங்களே ஆன என் குட்டி தேவதை. வைத்தியசாலையில் காத்திருந்து கைகளில் ஏந்திக்கொண்ட தருணம் முதல் என்னை புரட்டி போட்டவள். இதுவரை நாமிருவர் சந்தித்த துயரங்களை மொத்தமாக துடைத்துப் போட்டவள்.
“நீதான் சொல்லுற நித்யா… ஆனா எனக்கு அவ குட்டி நித்யாவாத்தான் தெரியுறா. கண், நெத்தி, சிரிப்பு… நான் தூக்கிறபோது சிரிக்கிறா பார்… நான் அப்செட்டா இருக்கும்போது என் தலையை கோதிவிடுவியே, அந்த ஃபீல் இருக்கு நித்யா அவ சிரிக்கும்போது”
நித்யா சிரித்தாள் “என்னடி.. அப்பாவ ஒரேயடியா மாத்திட்ட போல” அபியின் நெற்றியிலே மென்மையாக முத்தமிட்டாள்.
இருக்காதா நித்யா. நீ கொடுத்த வரம் அல்லவா அவள்.
“வெளிக்கிடு வருன்.. உனக்கு நேரமாயிட்டுது”
“இல்ல நித்யா… இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டு போறன். ஒண்டும் அவசரமில்ல”
என் நிலை பற்றி, என்னை சூழ்ந்திருந்த பிரச்சினைகள் பற்றிய கவலை அறவே போயிருந்தது. நித்யா இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்பதுதான் என் அப்போதைய கவலை. தனிமை பொழுதுகளில் அழுவதும், அபியை முத்தமிடுவதிலுமே போக்கிக்கொண்டிருக்கிறாள். நாம் மூவரும் ஒன்றாக இருக்கும் தருணங்களில்தான் அவள் சற்றேனும் சந்தோசமாக இருக்கிறாள். அந்த கணப்பொழுதுகளை, அவளின் சந்தோசத்தை விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை நான்.
*************
”வருன்… என்னாலதானே இதெல்லாம். நான் இல்லாட்டி நீ நிம்மதியாவாச்சும் இருந்திருப்ப”
”நான் உன்ன பற்றி நினைச்சதை நீ என்னை பற்றி நினைக்கிற நித்யா. என்னாலதான் உனக்கு பிரச்சினை… நிம்மதி இல்லாம போச்சு”
திரும்பி பார்த்தாள். பார்வையில் கோபம் இருந்தது. வழக்கமான பொழுதாக இருந்தால் பிரச்சினைகளை ஏன் உன் தலையில் இழுத்து போடுகிறாய் என்று வகுப்பெடுத்திருப்பாள். அன்று அவளாகவே சமாதானமாகிவிட்டாள்.
“எழுத்து எழுதாம இருந்திருக்கலாம் வருன்….”
சூழ்நிலை எமக்கு வேறு எந்த வழியையும் விட்டு வைத்திருக்கவில்லை என்பது இருவருக்கும் தெரிந்தேதான் இருந்தது. ஆனாலும் அவள் எனக்காக யோசிக்கிறாள். சட்டரீதியாக இருவரும் கணவன் மனைவி. இருவருக்கும் ஒரு தேவதை குழந்தையாக கிடைக்கப்போகிறாள். ஆனால் இதுவரை இந்த விசயம் என் குடும்பத்துக்கு தெரியாது என்பதும் நித்யாவின் புதிய பாரமாக இருந்தது. பெரும்பாலான நேரங்களில் என் பாரத்தையும் சேர்த்து சுமப்பவள் அவளல்லவா..!
”நீதான் வேண்டாம் எண்டுற நித்யா. எங்க வீட்டுக்கு சொல்லிடலாம். அதொண்டும்..”
“பிரச்சினை இல்லைன்னு சொல்லாத வருன். உன் பிரச்சினைகள பற்றி உன்ன விட எனக்கு நல்லாவே தெரியும்”
அதன்பின்னர் வார்த்தைகள் மௌனித்து போக அருகில் இருந்த நித்யாவை பார்த்தேன். எட்டு மாதமாகியிருந்தது. என்னை சுமந்துகொண்டிருந்த அவள் பேரழகியாகியிருந்தாள்.
“என்னடா அப்பிடி பார்க்கிற”
மௌனமாக சிரித்தேன். புரிந்துகொண்டாள் போலும்… கைகளை என்னுடன் கோர்த்துக்கொண்டாள். வெளியே மெதுவான மழை தூறிக்கொண்டிருந்தது.
(தொடரும்)