அப்பாவா இப்படி?
என்னோட பெயர் ப்ரியா. வயது பதினெட்டு.
பெங்களூர் மவுண்ட்கார்மல் காலேஜ்ல படிக்கிறேன். என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரேகுழந்தை.
தினமும் காலையில் என்னோட அப்பாதான் என்னை அவரோட கார்ல காலேஜுக்கு கூட்டிகிட்டுப் போவார். என்னை செல்லமா ‘டுப்பி’ன்னு கூப்பிடுவார். நானும் அப்பாவும் பிரண்ட்ஸ் மாதிரிதான் பழகுவோம். எனக்கு அப்பான்னா ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
அம்மா என்னிடம் ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. ப்ரதோஷம், சங்கஷ்ட சதுர்த்தி, அமாவாசை, ஆடின்னு அடிக்கடி கோவிலுக்குப் போவாங்க. பூஜை, புனஸ்காரம் என்று நேம நிஷ்டைகள் அதிகம். கோபம் வந்தா ஹிஸ்டீரியா வந்தமாதிரி கத்துவாங்க.
இப்ப எனக்கு நவராத்திரி வெகேஷன். நாங்கள் பிரஸ்டீஜ் அபார்ட்மெண்ட். குடியிருப்பில் நான்காவது தளத்தில் இருக்கிறோம். எனக்கு போரடிச்சா எதிர் வீட்டுக் குடியிருப்பு சுதா மேடம்கிட்டப் போய் அரட்டை அடிப்பேன். என்னுடைய ஆறுவயதிலிருந்தே அவங்க எனக்குப் பழக்கம். ஒரு பெரிய மல்டிநேஷனல் ஐடி கம்பெனில டெலிவரி ஹெட்டா இருக்காங்க. அடிக்கடி அமெரிக்காவுக்கு பறப்பாங்க. திரும்பி வரும்போது எனக்கு நிறைய சாக்லேட் வாங்கிட்டு வருவாங்க. எப்பவும் மொபைல்லையும், லேப்டாப்லயும்தான் இருப்பாங்க. ப்ராஜக்ட் எஸ்கலேஷனாம். முப்பத்தைந்து வயது இருக்கும். ஆனா இன்னமும் கல்யாணம் பண்ணிக்கல. ரொம்ப ஸ்டைலா இருப்பாங்க. இங்க்லீஷ்லதான் எப்பவும் பேசுவாங்க. ஞாயிறுகளில் எங்க வீட்டுக்கு வந்து அப்பாவோட செஸ் விளையாடுவாங்க.
அன்னிக்கி ஒரு சனிக்கிழமை…
அம்மா விடிகாலையிலேயே ஏதோ ஒரு பஜனை மண்டலியுடன் திருப்பதி போயிட்டா. ராத்திரிதான் வருவா. அப்பா ஆபீஸ் கிளம்பிருவாரு… நானும் காலை ஒன்பதுமணிக்கே என் பிரண்ட் வினிதாவோட வீட்டுக்கு என்னோட சான்ட்ரோ கார்ல கிளம்பிட்டேன். போகிற வழியில் எம்ஜி ரோடில் பயங்கர ட்ராபிக். கூகுளில் பார்த்தா வினிதா வீட்டுக்கு இன்னும் இரண்டு மணிநேரம் காண்பிக்குது. நான் அவளுக்கு போன் பண்ணி வரலைன்னு சொல்லிட்டு, காரை யூ டர்ன் எடுத்து வீட்டுக்கு திரும்பிப் போறேன்.
அபார்ட்மெண்ட் திரும்பும்போது மணி பதினொன்று. பார்க்கிங் ஸ்லாட்டில் அப்பாவின் பென்ஸ் கார் இருந்தது. அட அப்பா எங்கும் போகலை! சர்ப்ரைஸா அவர் முன்னால போய் நிக்கலாம்னு லிப்டில் ஏறி வீட்டுக்கு வந்தால் வீடு டோர்லாக் போட்டிருந்தது. சிலசமயங்களில் அப்பா டோர்லாக் போட்டுக்கொண்டு உள்ளே தூங்குவதுண்டு. அம்மா, அப்பா, எனக்கு என்று தனித்தனி சாவிகள் உண்டு. என் சாவியைப் போட்டு டோர் லாக்கைத் திறந்து உள்ளே போனேன்.
அப்பாவின் பெட்ரூம் கதவு சாத்தியிருக்கு. “அப்பா”ன்னு குரல் கொடுத்துக்கொண்டே கதவைத்திறந்து பார்த்தவ அப்படியே ஷாக் அடிச்சமாதிரி மிரண்டு நிக்கறேன். கண்ணைப் பொத்திக்கனும்போல பயங்கர அசிங்கமான காட்சி பூதமாட்டம் தெரியுது.
பலமா கதவை அறஞ்சு சாத்திட்டு திரும்பிப் பார்க்காம வீட்டைவிட்டு வெளியே ஓடிச்சென்று படிகளில் இறங்கி ஓட்டம் பிடித்தேன்.
நெஞ்சு பட படன்னு அடிக்குது. வேர்த்துக்கொட்டுது. ஆத்திரமும் அழுகையுமா தெருவில் நடந்து போகிறேன். என்வசம் நான் இல்லை.
ச்சே ! நான் பார்த்ததை அப்பாவும் பார்த்துத் தொலைச்சுட்டாரே. இனிமே எப்படி நாங்க ஒருத்தரை ஒருத்தர் வீட்ல பார்த்துக்கப்போறோம்? எப்படி நானும் அவரும் இனிமே மனம்விட்டு பேசிக்கமுடியும்? எல்லாம் பாழப்போச்சே. எங்கவீட்ல எல்லோருடைய நிம்மதியும் அழியப்போகுதே…
இரவு ஒன்பதுமணிக்கு மெதுவா வீடு திரும்பறேன். வீட்டை நெருங்க நெருங்க நெஞ்சு திக்திக்னு அடிச்சுக்குது; நெத்தியெல்லாம் வேர்க்குது. நல்லவேளை அப்பாவின் பென்ஸ்கார் பார்க்கிங் ஸ்லாட்ல இல்லை. அம்மா திருப்பதியிலிருந்து வந்துட்டாங்க.
“எங்கடி ஒழிஞ்சே? அப்பாவும் வீட்ல இல்ல….நீ என்னடான்னா ஊரைச் சுத்திட்டு இப்ப வர்ற…இரு இரு அப்பா வரட்டும் அவர்கிட்ட சொல்றேன்” ன்னு என்னை மிரட்டறாங்க.
உண்மையை நான் இப்ப சொன்னா அம்மா தாங்குவாங்களா?
பதில்பேசாம என் ரூமுக்குள்ளப்போய் கதவை சாத்திக்கிட்டு பெட்ல படுத்துகிட்டு அழறேன்.
அப்பா பத்துமணிக்கு வீட்டுக்கு வந்தார். மெதுவா எழுந்து கதவுகிட்ட நின்னு என்ன பேசறார்ன்னு காதை வச்சுக் கேக்கறேன். .ஒரு பேச்சையும் காணோம். எப்பவும் “ஹாய் டுப்பி” ன்னு கத்திக்கொண்டு வருவார்.
என் ரூமை விட்டு நான் வெளியே வரவில்லை.
‘ஆமா நான் ஏன் பயப்படனும்? பயப்படவேண்டியது அப்பா; வெட்கப்பட வேண்டியது அவர்; தப்பு பண்ணினவர் அவர்; ரொம்ப யோக்கியர் மாதிரி வேஷம்போட்டு ஊரையும் வீட்டையும் எமாத்திண்டு இருக்கிறவர் அவர்; அவர்தான் எனக்குப்பயந்து நடுங்கனும். எனக்கென்ன பயம்?’
தைரியமா ரூமை விட்டு வெளியே வந்தேன். “அம்மா பசிக்குது தட்டுவை” என்று சொல்லிக்கொண்டே டைனிங்டேபிள் முன்னாடி போய் உட்காருகிறேன்.
அம்மா போய் அப்பாவை – அந்தத் துரையை சாப்பிடக் கூப்பிடறாங்க. அந்தத் துரை வயிறு சரியில்லை….வரலைன்னு சொல்றார். தெரியுமே எனக்கு! என் முன்னாடி உக்காந்து அவரால ஆயுளுக்கும் இனிமே சாப்பிடமுடியதுன்னு தெரியுமே!
தொடர்ந்த நாட்களில் எங்கவீட்ல ஒரு மெளனப் புயல் வீசிண்டிருக்கு. ச்சே! அவரை அப்பான்னு சொல்லிக்கறதுக்கே அசிங்கமா இருக்கு. நான் ஹாலுக்கு வந்தா அவர் பால்கனிக்குப் போறார்; நான் பால்கனிக்குப் போனா அவர் பெட்ரூம் போய் கதவைச் சாத்திக்கிறார். என் முகத்தைப் பார்க்க அவரால் முடியல.
அம்மா ஒன்ணும் புரியாம தனியா அழறாங்க. புரியாம இருக்கிறப்பவே அழறீங்களே அம்மா? புரிஞ்சப்புறம் எப்படி ஒப்பாரி வைப்பீங்க? இந்த மாதிரி வேஷம் போடற புருஷனைக் கட்டிண்டதுக்கு நீங்க அழத்தான் செய்யணும். அழுங்க நல்லா அழுங்க.
அன்று திங்கட்கிழமை. அப்பா ஆபீஸ் போயிட்டார்.
போன்மணி அடிக்குது…
நான்போய் எடுத்தேன். “இஸிட் டுப்பி?”னு சுதா கேக்கறா. எத்தனை தைரியமா எனக்கே போன் பண்ணி வெட்கமில்லாம பேசறா? நான் பதிலே சொல்லல.
“டுப்பி ப்ளீஸ் போனை வெச்சுடாதே…நான் சொல்றதைக்கேளு” கெஞ்சறா.
“……………………”
“மை டியர் டுப்பி, கோபமா ஹனி?” ரொம்ப அன்பா கேட்கிறா. என்னால தாங்க முடியல. “யா” ன்னு சொல்றேன்.
“ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் அஸ்…நத்திங் ராங் ஹாஸ் ஹாப்பண்ட்”
அவ அப்படிச் சொன்னதும் எனக்கு அப்படியே கோபம் பத்திண்டு வருது.
“மிஸ் சுதா, என்னை ஏமாத்தப் பார்க்காதீங்க. எது ராங் இல்லை? மனசுல கை வைச்சுச் சொல்லுங்க நீங்க செஞ்சது தப்பில்லை? அசிங்கமில்லை? பாவமில்லை? கேவலமனவங்க நீங்க. செஸ் விளையாட ஆரம்பித்து இப்ப அப்பாவுடன் செக்ஸ் விளையாடல்…குமட்டிக்கிட்டு வருது. எதுக்காக போன் பண்ணீங்க?”
“எனக்கு உன்னைப் பார்க்கணும், உன்னோட நிறையப் பேசணும்…ப்ளீஸ் டுப்பி. எந்தக் காம்ளெக்ஸ்சும் இல்லாம நாம சந்திக்கணும்…அப்போ உனக்கு எல்லாம் புரியம்.”
நான் யோசிக்கிறேன்… சரி, என்னதான் சொல்றான்னுதான் பார்க்கலாமே! என்கிட்ட அவமானப் படப்போறது அவதான். வம்பை அவதான் விலைக்கு வாங்கறா. எனக்கென்னவாம்?
“சரி…எப்ப எங்க பார்க்கலாம்?”
“இன்னிக்கு சாயங்காலம் நாலு மணிக்கு…லால்பாக் மெயின்கேட்.”
“சரி வர்றேன்…”
சென்றேன்.
கொஞ்ச நேரத்துக்கு ரெண்டு பேருமே எதுவும் பேசலை. நான் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தேன். ரொம்ப அழகாகத்தான் இருக்கா.
“ஒனக்குத் தெரியுமா டுப்பி? இருபது வருஷமா உங்கவீட்டின் உண்மை ரகசியம்? அந்த உண்மையை இன்னிக்கு உன்கிட்ட சொல்லப்போறேன்.”
“……………………….”
“அன்னிக்கு பெட்ரூம்ல நானும் உன் அப்பாவும் இருந்த நிலைமையை நியாயப் படுத்துவதற்காக இந்த உண்மைகளை நான் சொல்லவரலை. ஆனா உண்மைகளை நீ தெரிஞ்சுக்கணும். உன் அம்மாவும் அப்பாவும் கணவன் மனைவியுமா வாழலை டுப்பி…
“அவங்க ரெண்டு பேருக்குள்ள செக்ஷுவல் ரிலேஷன்ஷிப்பே கிடையாது. இது ரொம்ப கொடுமையான விஷயம். செக்ஸ் இஸ் ஆன் இன்டிமேஸி; நாட் ஸீக்ரெஸி…அந்த இன்டிமேஸி உன்னோட அப்பாவுக்கு கிடைக்கவேயில்லை. உன்னோட அம்மா சின்ன வயதிலிருந்தே எப்பவும் கோயில்கள், பூஜைகள், புனஸ்காரங்கள் என்றுதான் ஆசைப்பட்டாளே தவிர சராசரிப் பெண்ணாக இருக்கவில்லை….
“இதெல்லாம் உன்னோட அப்பாவே சொன்ன உண்மைகள் டுப்பி.”
எனக்கு புரியற மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. அப்பா உண்மையிலேயே ரொம்ப நல்லவர்தானான்னு நினைக்கிறப்பவே குபுக்குன்னு கண்ல தண்ணீர் வருது.
“அழாத டுப்பி. அழறது வெறும் ந்யூராட்டிக் ரியாக்ஷன்தான். அழறதிலேயும் சுகம் கண்டுதான் நிறையப்பேர் எதுக்கெடுத்தாலும் அழறாங்க. நீ ப்ரில்லியன்ட் கேர்ள், அழக்கூடாது.”
திடீர்ன்னு எனக்கு சுதாமேல சந்தேகம் வந்துடுச்சு. இவ பொய்யையும் புரட்டையும் பேசி எமாத்தினாலும் ஏமாத்திடுவா. தப்பு பண்ணினவங்க எதையாவது பேசித் தப்பிக்கத்தான் பார்ப்பாங்க. இவ பேசறதைக் கேட்டு நான் ஏமாந்துடக்கூடாது. சூடா நாலு கேள்வி கேட்கணும்.
“சுதா நீங்க நல்லாத்தான் பேசறீங்க. ஆனா பண்றதெல்லாம் அசிங்க அசிங்கமா பண்றீங்க… அடுத்தவளோட புருஷன ரகசியமா முகர்ந்து பார்க்கிறது எவ்வளவு கேவலம்?”
“டுப்பி, ப்ளீஸ்… நாங்க பெட்ரூமல இருந்தத நியாயம்னு வாதாடறதுக்காக உன்னை நான் மீட் பண்ணல. எனக்கு நியாயம், அநியாயம் என்று எதவும் கிடையாது. வுமன் என்கிற காம்ளெக்ஸோ, ஜாதி என்கிற இன்ஹிபிஷனோ, மதம் என்கிற நம்பிக்கையோ – எதுவுமே எனக்குக் கிடையாது. உன்னோட அப்பாக்கு ஒரு பிஸிகல் நீட் இருந்திச்சு….எனக்கும் அது ரொம்ப தேவையா இருந்திச்சு. அவ்வளவுதான். ஸ்கின் டு ஸ்கின் நோ ஸின் டுப்பி. இந்த வயசுல உனக்கு இதெல்லாம் புரியாது.
“உன்னோட அப்பா ரொம்ப நல்லவர். உங்கவீடு வெறும் கண்ணாடிவீடு. உங்கப்பா நெனச்சிருந்தா என்னிக்கோ அந்தக் கண்ணாடி வீட்டை தூள் தூளா, சுக்கல் சுக்கலா உடைச்சிருக்கலாம். ஆனா அவர் அப்படிச் செய்யாம உங்க குடும்பத்தைக் கட்டிக் காத்திருக்கிறார். அற்புதமான மனுஷன் அவர்.
“இப்ப சொல்றேன். பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி யுவர் டாடி ரேப்ட் ஹிஸ் ஓன் ஒய்ப்… சொந்த மனைவியையே பலாத்காரம் பண்றது எவ்வளவு துர்ப்பாக்கியமான விஷயம்? ஆக்சிடென்ட் மாதிரி ஒருமுறை நடந்துவிட்ட அந்த உறவில் நீ உருவாகிப் பிறந்துவிட்டாய் டுப்பி….செக்ஸ் என்கிற விஷயத்தில் உன்னோட அம்மாவுக்கு இருக்கும் பெரிய வெறுப்புதான் உன்னோட அப்பா தடம் புரண்ட காரணம்… ப்ளீஸ் டுப்பி அவரை வெறுக்காதே.”
“……………………..”
“நீ வந்து அவர பெட்ரூம்ல பார்த்தபிறகு அவர் புழுவா துடிச்சார். எப்படி இனிமேல் உன் முகத்தில் விழிப்பேன்னு அவமானத்தில் குறுகிப்போனார். நான்தான் அவரிடம் நீ ரொம்ப ஸ்மார்ட் பொண்ணு. அப்பாவைப் புரிஞ்சுப்பேன்னு சொல்லி சமாதானப்படுத்தினேன்.
“இன்னொரு முக்கியமான விஷயம் டுப்பி. நான் என் கம்பெனிமூலமாக அடுத்த ஆறு வருடங்களுக்கு அமேரிக்கா போகிறேன். அடுத்தவாரம் வீட்டைக் காலி பண்ணுகிறேன். எனக்கும் உன் அப்பாவுக்கும் இனி எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது.”
எனக்கு அப்பாவின்மேல் சிறிது கருணை ஏற்படுகிறது. உண்மையைக் கண்டு பயப்படக்கூடாது. அப்பத்தான் வாழ்க்கையில் நிம்மதியாக வாழமுடியும். யாரோட தப்பையும், நடத்தையையும் பார்த்து வெறுக்கவோ, கோபப்படவோ கூடாது. குறிப்பாக அப்பாவை கோவிச்சுக்கக் கூடாது. எனக்கு அப்பா வேணும். அவரின் அன்பும், பாசமும் எனக்கு கண்டிப்பா வேண்டும்.
என் மொபைல் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தேன்.
ஐ! அப்பாதான்!
உடனே சந்தோஷத்துடன் “சொல்லுங்கப்பா” என்றேன்.
“டுப்பிம்மா என்னை மன்னிச்சுடும்மா….அப்பா இனிமே தப்பு பண்ண மாட்டேம்மா…..” அப்பாவின் குரலில் உண்மையான வேதனையும், மன்னிப்பும்….
“அப்பா ப்ளீஸ்பா….நான் என்னிக்கும் உங்க டுப்பிதான்… எங்கப்பா இருக்கீங்க?”
“வீட்லதாம்மா.”
“இப்பவே வரேம்பா…”
சந்தோஷத்துடன் என் சான்ட்ரோல துள்ளி ஏறி ஆக்ஸிலேட்டரை அழுத்துகிறேன்.
அப்பாவின் பென்ஸ்கார் பார்க்கிங் ஸ்லாட்டில் இருந்தது.
அவசரமாக லிப்டில் ஏறி, வீட்டில் நுழைந்து அப்பாவின் பெட்ரூமை நோக்கி ஓடுகிறேன். கதவு சாத்தியிருக்கு.
அப்பான்னு குரல் கொடுத்துக்கொண்டே கதவைத் திறந்து பார்த்தவ, அப்படியே ஷாக் அடிச்சமாதிரி விக்கித்து நிற்கிறேன்.
கண்ணைப் பொத்திக்கணும் போல பயங்கரமான காட்சி பூதமாட்டம் தெரியுது.
அப்பா மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் வழிய தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
“அப்பாஆஆ ஏம்பா இப்படி?” மயங்கிச் சரிகிறேன்.
கதையாசிரியர்: எஸ்.கண்ணன்