குரு அரவிந்தனின் `சொல்லடி உன் மனம் கல்லோடி’ !… ( நாவல் ) கே.எஸ்.சுதாகர்.
(ஆனந்தவிகடனில் பல சிறுகதைகளை எழுதியவரும், ஆனந்தவிகடன் பவளவிழா சிறப்பிதழில் பரிசுபெற்ற ‘நீர்மூழ்கி நீரில்மூழ்கி’ என்ற குறுநாவலைத் தந்தவருமான குரு அரவிந்தனின் சமீபத்திய நாவல் `சொல்லடி உன் மனம் கல்லோடி’. இவரின் ‘நீர்மூழ்கி நீரில்மூழ்கி’ நாவலுக்கு தமிழகத்தின் முன்னணி ஓவியர்கள் ஐவர், ஓவியங்கள் வரைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.)
குரு அரவிந்தனின் `சொல்லடி உன் மனம் கல்லோடி’ நாவல் வாசித்தேன். மணிமேகலைப் பிரசுரமாக இந்த ஆண்டு (2019) வெளிவந்த இந்த நாவலை வாசிக்கும் தோறும் பாரதியின் `நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற கவிதை வரிகள் தான் நினைவிற்கு வந்து போயின.
மெல்ல மெல்ல வாசகரை உள் இழுக்கும் உத்தி, ஆரம்ப அத்தியாயங்களிலேயே தெரிகின்றது.
தேவகி ஒரு நடன ஆசிரியர். அவரிடம் நடனம் பயிலும் மகள் கமலினியும், மாலதியும் இனிய தோழிகள். இனிய தோழிகள் என்றாலும் இருவேறு துருவங்கள். அவர்கள் இருவரினதுக் கொள்கைகள் வேறுவேறானவை. கமலினி ஆங்கில மோகமும், அமெரிக்கா ஆசையும் கொண்டவள். ஆனால் மாலதி அப்படியல்ல. தமிழும் பரதநாட்டியமும் மூச்சாக வாழ்பவள். கமலினியின் குறும்புக்காரத் தம்பி கண்ணன். அவனது பார்வை சற்றே மாலதியின் மேல் விழுகின்றது. எங்கே மாலதிக்கும் கண்ணனுக்குமிடையே காதல் உருவாகிவிடுமோ என மனம் பதைபதைக்கும் வண்ணம் நாவல் நகர்கின்றது.
மாலதிக்கு அம்மா இல்லை. அப்பா சுந்தரம் மாஸ்டர். மச்சான் ராஜன்.
இவர்களுடன் விறுவிறுப்பாகச் செல்லும் நாவல் சொல்லும் செய்தி என்ன? ஒரு ஆண்மகன் தன்னிலும் வயது கூடிய ஒரு பெண்ணைத் திருமணம் புரிதல், ஆங்கில வெளிநாட்டு மோகம், ஒருவர் தான் பயின்ற கலைகளை அழியாது காத்தல், விதவைத் திருமணம்.
நடன இசைப்பிரியர்களுக்கு இந்த நாவல் ஒரு வரப்பிரசாதம். இசையால் வசமாகும் இதயங்களுக்கு, இந்த நாவலில் கொட்டிக்கிடக்கும் பரதநாட்டியம் இசை பற்றிய குறிப்புகள் `போனஸ்’ தகவல்கள்.
கமலினி மணம் முடித்து அமெரிக்கா போய்விடுகின்றாள். அதன் பின்னர் மாலதி தன் அத்தை பையன் ராஜனை வேண்டா வெறுப்புடன் மணம் செய்து கொள்கின்றாள். ராஜன் குடிகாரன், கேடு கெட்டவன்.
இவர்களிடையேயான உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், கண்ணன் மாலதியைத் திருமணம் செய்து கொள்கின்றானா என்பதே நாவல்.
கமலினி அமெரிக்கா சென்ற பின்னர், அமெரிக்கா பற்றிச் சொல்லிச் செல்லும் ஆசிரியர், கதையின் ஆரம்பத்தில் கதை நடைபெறும் களம் பற்றி விபரிக்கவில்லை. கதை எங்கு நடைபெறுகின்றது என்பது ஆரம்பத்தில் தெளிவில்லாமல் இருந்தது. இசை நடனம் ஆடல் பாடல் என ஆரம்பித்த நாவல், திசை மாறி பயணம் சென்று, மீண்டும் தொடக்க நிலைக்கு வருகின்றது. மற்றும் தேவகியின் கணவர் கனகேஸ்வரன் என்ற பாத்திரமும் நாவலுக்குக் கனதியில்லாமல் சும்மா வந்து போகின்றது.
நாவலின் அட்டைப்படம் பற்றிய ஒரு சுவையான தகவல். கனடாவில் பிறந்து வளர்ந்த, புதிய தலைமுறையைச் சேர்ந்த ஐஸ்வர்யா சந்துரு நாவலின் அட்டைப்படமாக உயிர்பெறுகின்றார். இவர் நாட்டியத்திலும் பாடல்கள் பாடுவதிலும் வல்லவர் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.
எமது நாட்டில் எத்தனையோ மாணவர்கள் பரதம், சங்கீதம், வீணை, மிருதங்கம் போன்றவற்றைக் கற்று வருகின்றார்கள். இவர்களில் எத்தனை வீதமானவர்கள் தொடர்ந்தும் அந்தக் கலைகளைத் தக்கவைத்துக் கொண்டு, அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தக்குடியவர்களாக இருக்கின்றார்கள்? வெறுமனே இவற்றைத் தெரிந்து வைத்திருந்தால் போதுமானதா? புலம்பெயர்ந்த நாட்டில் பெற்றோர்கள் அப்படித்தான் நினைக்கின்றார்கள் போலும்.
இருபது வருடங்களுக்கு முன்னர் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இந்த நாவல், காலத்தின் தேவையறிந்து நூல் உருவாக வருவது வரவேற்கத்தக்கது.
எளிமையான நடை. மனதில் வந்துபோகும் பாத்திரங்கள். நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு குடும்பப் படம் பார்த்தது போன்ற மன நிறைவு நாவலைப் படித்தபோது ஏற்பட்டது.