கதைகள்

சினிமாவிற்குப் போன கார்!… ( குறும்கதை )… சுருதி.

“சார்… உங்களுடைய காருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் ஒண்டு கிடைச்சிருக்கு. சம்மதமா?” சினிமாத்துறையைச் சார்ந்த ஒருவர் சாந்தனிடம் ரெலிபோனில் கேட்டார். சாந்தனின் உற்ற நண்பன் ஒருவன் மூலம் இந்த வாய்ப்பு சாந்தனுக்குக் கிட்டியது.

சாந்தன் சுற்றுலாப் பயணிகளை தனது காரில் சுற்றிக் காண்பிப்பவன். கிலோமீட்டருக்கு 15 ரூபாய்கள் வீதமும், ஒரு நாளைக்கு குறைந்தது நானூறு கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்வீர்களாயின் – சாரதிக்கான உதவித்தொகை 300 ரூபாய்களும் அவனுக்குக் கொடுக்க வேண்டும். காருக்கான எரிபொருள், மற்றும் அவனுக்கான சாப்பாடு தங்குமிட வசதிகளை அவனே பார்த்துக் கொள்வான். சராசரியாக நாளொன்றிற்கு 5000 ரூபாய்கள் உழைப்பான்

“சார்… இந்தத் திரைப்படம் மூலம் நீங்கள் பேரும் புகழும் அடைந்துவிடுவீர்கள். கிலோமீட்டருக்கு உங்களுக்கு நாங்கள் 50 ரூபாய்கள் வீதம் தருவோம். சாப்பாடு இலவசம். என்ன சொல்கின்றீர்கள்?”

`பேரும் புகழும்’ யார்தான் விரும்பமாட்டார்கள். அத்துடன் குறைந்த நேரத்தில் கூடிய வருமானம்.

“ஐயா…. எத்தனை நாள் படப்பிடிப்பு?”

“படப்பிடிப்பு பல நாட்கள் நடக்கும். நீங்கள் உங்கள் காரை ஐந்து நாட்கள் கொண்டுவந்தால் போதும்.”

சாந்தன் உடனே ஓம் சொல்லிவிட்டான். படப்பிடிப்பு அவனது வீட்டிற்கு அருகாமையில் இருப்பதால் ஒருகிழமை மனைவி பிள்ளைகளுடன் தங்கலாம். நெடும் தூரமெல்லாம் அலையத் தேவையில்லை என்ற மகிழ்ச்சி அவனுக்கு.

படப்பிடிப்பு அன்று சாந்தனிடம் ஒரு படிவத்தைக் கொடுத்து கையெழுத்துப் பெற்றுக் கொண்டார்கள். படத்தின் தலைப்பு – கோயில் உண்டியல். சாந்தனின் காரின் இலக்கத் தகட்டிற்கு மேல் `எட்றா வண்டிய’ என்று எழுதப்பட்ட ஸ்ரிக்கர் ஒன்றை

ஒட்டினார்கள். இது போதாதா சாந்தனுக்கு. மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் `எட்றா…. எட்றா’ என்று எகிறியது.

காட்சி இதுதான்: மயிர்க்கூச்செறியும் சண்டைக்காட்சி. முன்னாலே ஒரு லொறி போகும். அதற்குள் வில்லன் மற்றும் அடியாட்கள் முரண்டு பிடித்துக்கொண்டு நிற்பார்கள். பின்புறமாக இவனது கார் அவர்களைத் துரத்தும். இவனது காரில் கதாநாயகன். கதாநாயகன் சுமார் ரகம். சாந்தனுக்கு ஒப்பனைகள் பல செய்து, கதாநாயகனுக்கு அருகில் இருப்பதற்குத் தோதாக விகாரமாக மாற்றியிருந்தார்கள்.

ஒரு குறுகிய தூரத்தில் பல தடவைகள் மீண்டும் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தயாரிப்பாளருக்கு திருப்தி ஏற்படும் வண்ணம் பல தடவைகள் `டேக்’ எடுக்கப்பட்டன.

கார் புறப்பட்டதும் “ஃபாஸ்ரர் ஃபாஸ்ரர்….. விரைவாக விரைவாக” என்று கத்துவார் டைரக்டர். கார் புகை கக்கி, இடி விழுந்தது போலச் சத்தமிட்டுப் பாய்ந்து செல்லும். குறிப்பிட்ட தூரத்தில் ஒரு பாலம் இருந்தது. லொறி பாலத்தை அண்மித்ததும், இரண்டு வாகனங்களும் சம வேகத்தில் போக வேண்டும். அப்புறம் சண்டை ஆரம்பமாகும். சண்டையின் உச்சக்கட்டத்தில் வில்லன், சாந்தனின் கார் பொனற் மீது எகிறிக் குதித்துப் பாய்ந்து பாலத்திற்குள் விழுந்து தப்பி ஓடுவான்.

முதல்நாள் படப்பிடிப்பு முடிந்த பின்னர் கார் ஒரு கிலோமீட்டர் தன்னும் நகர்ந்திருக்காததை அவதானித்தான் சாந்தன், நூறு மீட்டர்கள் தூரத்திற்குள் படப்பிடிப்பு நடந்ததால், அதற்குள்ளேயே கார் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடியது. ஆனால் பெற்றோல் முற்றாகத் தீர்ந்து போயிருந்தது. பலத்த நட்டம் வரப்போகின்றது என்பதை உணர்ந்தான் சாந்தன். இருப்பினும் பொறுமை காத்தான்.

இரண்டாவது நாள் வில்லன், சாந்தனின் கார் பொனற் மீது குதித்து உக்கிரமாகப் போரிட்டான். அவனது பாரத்தைத் தாங்க மாட்டாமல் பொனற் சுருங்கிக் கடதாசி போலாகிவிட்டது.

அன்றைய படப்பிடிப்பு முடிந்த பின்னர் தயாரிப்பாளருக்கு தனது முறைப்பாட்டைத் தெரிவித்தான் சாந்தன். தயாரிப்பாளர் சாந்தன் கையெழுதிட்ட பத்திரத்தைத் தூக்கி நீட்டினார். அவனுக்கு அதில் எழுதியிருந்த ஒன்றும் புரியவில்லை.

சாந்தன் தன்னை ஒழுங்கு செய்த நண்பனிடம் தொடர்பு கொண்டபோது, அவனைப் பிடிக்க முடியவில்லை.

ஐந்தாவது நாள் படப்பிடிப்பு முடிந்ததும், பேசிக் கொண்டபடியே சாந்தனுக்கு சம்பளம் கிடைத்தது. மொத்தமாக ஓடிய நான்கு கிலோமீட்டர்களுக்கு 200 ரூபாய்களும், போனஸ் பணமாக 100 ரூபாய்களும் கிடைத்தன. பெற்றோல் செலவு போக, அந்த வாரம் அவன் 180 ரூபாய்கள் உழைத்திருந்தான். கூடவே சுருங்கிப் போன `பொனற்’, அறுந்து தொங்கிய `சைலென்சர்’.

முன்பே நினைத்து வைத்திருந்தபடி தனது குலதெய்வத்திடம் சென்றான் சாந்தன். “பொனற் திருத்த, சைலென்சரைத் தூக்கிக் கட்ட எங்கே போவேன்?” கடவுளிடம் முறையிட்டான். திரைப்படத்தின் தலைப்பு அவனைப் பயமுறுத்தியது. `கோயில் உண்டியலில்’ எண்பது ரூபாயைப் போட்டுக் கொண்டான்.

“பயப்படாதே! படத்தின் எழுத்தோட்டதில் வரும் வாகன ஓட்டுனர்கள் பட்டியலில் உன் பெயரும் இடம்பெறும்” என ஒரு அசரீரி அவனுக்குக் கேட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.