இலங்கை

வடக்கில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்து மக்களின் காணிகளை மீளக் கையளிக்க வேண்டும்

வடக்கில் இராணுவத்தை குறைத்து, பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் அந்த மக்களின் மனங்களில் நல்ல இடத்தை பிடித்துக்கொள்ளும் வாய்ப்பு இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மன்னார் பிரதேசத்தில் தலைவரின் பிறந்த நாளன்று கேக் வெட்டிய 3 இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 3 இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.மாவீரர் தினம் மற்றும் தலைவரின் பிறந்தநாளை எமது மக்கள் உணர்வுபூர்வமாக செய்யும் நிலையில் அவர்களை இவ்வாறு கைது செய்தது ஏற்புடையது அல்ல. இதனால் இவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மிக மோசமான பழைய கட்டிடங்களை கொண்டதாக அடிப்படை வசதிகள் இல்லாததாக இருக்கின்றன. இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

இதேவேளை மன்னார் பாலத்திற்கு கீழுள்ள சோதனை சாவடியை தள்ளாடிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். சோதனை சாவடி கட்டாயம் இருக்க வேண்டும்.

ஆனால் அந்த இடம் மக்கள் பாவனைக்குரிய இடமாக இருக்கின்றது. இதனால் அந்த இடத்தை மக்கள் பிரயோசனமாக பயன்படுத்தும் வகையில் அதனை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மக்கள் அவ்விடத்திற்கு வந்து படகுகளில் பயணித்து தமது மனதை சந்தோசப்படுத்தும் இடமாக இருப்பதால் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இராணுவம் தொடர்பில் ஜனாதிபதி சில விடயங்களை கூறியிருந்தார். இராணுவம் குறைக்கப்படும் என்றும் வடக்கு, கிழக்கில் அதிகமான இராணுவம் மையம் கொண்டுள்ள நிலைமை மாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஏன் இவ்வாறு வடக்கு, கிழக்கில் கூடுதலான இராணுவம் இருக்கின்றது?அங்கு ஏன் இராணுவம் கூடுதலான காணிகளை வளைத்துப்போட்டுள்ளது? இந்தக் காணிகளை ஒப்படைக்க வேண்டும் என்றே எமது மக்கள் வீதிகளில் போராடுகின்றனர்.10 பேருக்கு இரண்டு இராணுவம் என்ற கணக்கில் இருப்பதாக நினைக்கின்றேன்.

ஏன் இந்தளவுக்கு இராணுவம் அவசியமாகவுள்ளது?அங்குள்ள இராணுவத்தை குறைத்து, அவர்களின் காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்கும் போது இந்த அரசாங்கம் மக்களிடையே நல்ல இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெறும்.

இதேவேளை மக்களுடைய காணிகளை விடுவிக்கின்ற போது மீண்டும் மீண்டும் அந்த காணிகளை பிடிக்க முயற்சித்தால் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தும் சூழலே ஏற்படும்.

நீங்கள் பழைய அரசாங்கங்கள் போன்று அல்ல என்று கூறிக்கொண்டு கடந்த கால அரசாங்கங்கள் செய்தவற்றையே செய்யக்கூடாது. காணி விடுவிப்பு விடயத்தில் கடந்த அரசாங்கங்களிடம் கதைத்து களைப்படைந்துள்ளோம். இந்த அரசாங்கத்துடனும் பேசியுள்ளோம். அரசாங்கம் செய்யும் நல்ல விடயங்களை நாங்கள் பாராட்டுவதுடன், அதற்கு ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *