உலகம்

அமைச்சர் விஜித ஹேரத் இந்தியப் பிரதமருடன் சந்திப்பு

இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கத்தின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லி சென்றுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார்.

இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கத்தின் உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் தூதுக்குழுத் தலைவர்களுடன் இணைந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் புதுடெல்லியில்  நடைபெற்ற இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கத்தின் 25ஆவது அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு இலங்கைத் தூதுக்குழுவை அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்கினார்.

2023 முதல் 2025 வரை இச்சங்கத்தின் தலைமைப் பதவியை வகித்த நாடு என்ற அடிப்படையிலும், தற்போதைய தலைமையான இந்தியா மற்றும் உப தலைமையான மொரீஷியஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து ‘ட்ரொய்கா’ (Troika) உறுப்பினர் என்ற ரீதியிலும் இலங்கை இதில் பங்கேற்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், கடந்த மே மாதம் இலங்கையின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட ‘கொழும்பு பிரகடனத்திற்குப்’ பின்னரான முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

இம்மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, மீன்பிடி முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகிய துறைகளில் முன்னெடுக்கப்படும் ஒத்துழைப்புகள், குறிப்பாக மீனவர்கள், துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் கரையோர மக்களின் வாழ்வாதாரத்திற்கு நேரடியான பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பிராந்திய சவால்களை எதிர்கொள்ள உறுப்பு நாடுகளின் கூட்டு அர்ப்பணிப்பு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இம்மாநாட்டிற்கு இணையாக இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர்களுடனும் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

இதன் ஊடாகப் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *