இலங்கை

அரசாங்கத்திடம் ஊழல் ஒழிப்பைத் தவிர வேறு கொள்கை இல்லை – சந்திரிகா கடும் விமர்சனம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அத்திட்டத்தைத் தவிர அரசாங்கத்திடம் வேறு எந்தக் கொள்கையும் இல்லை எனவும், மற்றொரு வர்க்கத்திற்கு எதிராக வர்க்க வெறுப்பைத் தூண்டி வருவதை அவர்கள் இன்னும் சரிசெய்து கொள்ளவில்லை எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கை சட்டக் கல்லூரியின் சமத்துவ முன்முயற்சி அமைப்பின் ‘VORTEX தொகுதி V’ வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

தற்போதைய அரசாங்கம் குறித்து எனது முறைப்பாடு என்னவென்றால், மிகச் சிறப்பாக இருந்த ஊழல் ஒழிப்பு விடயத்தைத் தவிர அவர்களிடம் வேறு எந்தக் கொள்கையும் இருக்கவில்லை என்பதுதான்; வேறொன்றும் இல்லை. மற்றொரு வர்க்கத்திற்கு எதிராக வர்க்க வெறுப்பைத் தூண்டிவிடுவதைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தற்போதும் அவர்கள் அதை சரிசெய்து கொள்ளவில்லை.

கொள்கை ஒன்று இன்றி மக்களிடம் பேச முடியாது என்பதை நான் அறிந்திருந்தேன். கொள்கை ஒன்றை முன்வைக்காமல் எவ்வாறு ஒருவரால் மக்களிடம் வாக்குக் கேட்க முடியும்? ‘என் முகத்தைப் பார்த்து வாக்களியுங்கள்’ என்பதற்காக அல்ல, தமது கொள்கையை மக்களுக்குக் காட்டி, இதற்காகத்தான் வாக்களிக்க வேண்டும் எனக் கூற வேண்டும். எம்மில் பலர் செய்வதும் அதையேதான்.

எனவே, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். பாராளுமன்றத்திலும் பல்வேறு கட்சிகளிலும் உள்ளவர்கள் தலைமைத்துவத்தை எடுப்பார்கள் எனக் காத்திருக்காதீர்கள். கொள்கைகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் எவ்வாறு கேட்க முடியும்?

தற்போதைய பாராளுமன்றத்தை அல்ல, அதற்கு ஒன்று அல்லது இரண்டு பாராளுமன்றங்களுக்கு முந்தைய பாராளுமன்றம் ஒன்றில் பட்டதாரிகள் சுமார் 20 பேர் மாத்திரமே இருந்தனர். பலருக்குக் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைத் தகுதி கூட இருக்கவில்லை. அப்படியிருக்கையில், அவர்கள் எவ்வாறு ஒரு நாட்டை ஆள முடியும்? அவர்கள் எமது நாட்டை அழித்துவிட்டனர்.

எமது நாடு இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு நாடாகும். அவற்றில் பெரும்பாலானவை இன்னும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகள் காரணமாக எங்களிடம் மிக உயர்ந்த மட்டத்தில் விருத்தி செய்யப்பட்ட மனித வளம் உள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் உலகின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றாக நாம் உள்ளோம். ஒருமித்த தேசத்தை எம்மால் உருவாக்க முடியாமல் போனமையே இதற்கு நிச்சயமான காரணமாகும்.

சமத்துவம் என்பது மாற்றுத்திறனாளிகளைத் தாண்டி அனைத்துப் பிரஜைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சமத்துவமின்மையே இலங்கை உண்மையான உன்னத நிலையை அடைவதைத் தடுத்துள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *