இந்தியா

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ இந்திய பிரதமர் மோடி பதிவு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிகாட்டி “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என இந்திய பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருநாளன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறை யீட்டு வழக்கு கடந்த 20ஆம் திகதி உச்சநீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விபுல் அரவிந்தகுமார், பஞ்சோலி ஆகியோர் இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தினத்தன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்களின்றி தீபத்தூணில் தீபம் ஏற்று மாறு உத்தர விட்டதுடன் மதுரை மாவட்ட ஆட்சியர், பொலிஸ் கமிஷனர் ஆகியோரது கண்காணிப்பில் உரிய பாதுகாப்புடன் கோவில் நிர்வாகத்தினர் மட்டுமே சென்று தீபம் ஏற்ற உத்தர விட்டனர்.

 

இந்த உத்தரவை பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கொண்டாடினர். எப்படியாவது கார்த்திகை திருநாள் அன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப் படும் என்ற எதிர்ப்பார்ப்பும் பக்தர்கள் இடையே இருந்தது.

 

இந்த நிலையில் உச்சநீதிமன்றில் தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வராத நிலையில் கார்த்திகை தீபத்திருநாளான கடந்த 24ஆம் திகதி மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டு திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

அன்று மாலை 6.00 மணிக்கு வழக்கமாக தீபம் ஏற்றும் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருந்த தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வில்லை.

 

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்றாத விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் ராம. ரவிக்குமார் மற்றும் இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.

 

ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தனியாக மனுத் தாக்கல் செய்தால் இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றில் தமிழக அரசு மீதும், மதுரை மாவட்ட ஆட்சியர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன.

 

இந்தநிலையில், திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இடையீட்டு மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் தீபத்தூணில் இன்று (28) திகதி தீபம் ஏற்ற உத்தரவிட்டு உள்ளது. தலைமை செயலாளர், டிஜிபி, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு குறித்து விளக்கம் கேட்டு அழைப்பாணையும் அனுப்பி உள்ளது.

 

அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், கோவில் நிர்வாகம் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரிடம் ஒப்படைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியும் தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் த.வெ.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, மலைத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை வரவேற்கும் விதமாக இந்திய பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் பதிவிட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *