உலகம்

அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த புயல்; 22 இலட்சம் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளைப் பாதித்துள்ள சக்திவாய்ந்த புயல் காரணமாகப் பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை, பலத்த காற்று மற்றும் கடலோர வெள்ளம் காரணமாக போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த புயல் காரணமாக நேற்று (26) மாத்திரம் 400க்கும் அதிகமான வானூர்தி பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன, மேலும் 2,200 வானூர்தி பயணங்கள் தாமதமடைந்துள்ளதாக FlightAware தெரிவித்துள்ளது.

மணிக்கு சுமார் 113 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையால் கிழக்கு அமெரிக்காவின் பல கடலோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதற்கிடையில், புயலால் சுமார் 9 இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியா, வெர்ஜீனியா, மேரிலாந்து மற்றும் நியூஜேர்சி மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மேரிலாந்தில் மின்சார விநியோகத் தடைகள் காரணமாக, சுமார் 20 இலட்சம் மக்களை அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் நீரைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, வாஷிங்டனில் நன்றியறிதல் தினத்தன்று பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சியும் இந்தப் புயலால் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடல் நீர்மட்டம் உயர்ந்ததால் ரீகன் தேசிய வானூர்தி நிலையத்தின் ஓடுபாதைகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட கிழக்குக் கடலோரப் பகுதிகளுக்கு அவசர நிதியுதவி வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல் தொடர்கள் காரணமாக அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.

குறிப்பாக, கலிபோர்னியாவின் சில கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் 2.4 மீற்றர் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், அப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், சில தொடருந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *