யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 200 வரையான சிறுவர் துஷ்பிரயோகம், 163 பாடசாலை இடைவிலகல்

யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 200 வரையான சிறுவர் துஷ்பிரயோகங்களும், கடந்த ஆறு மாதத்தில் 163 பாடசாலை இடைவிலகல்கள் பதிவாகி இருக்கின்றது.அதில் 133 பிள்ளைகளை மீளிணைக்கப்பட்டனர். 30 பிள்ளைகள் மேலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதைவஸ்து பாவனை காரணத்தால் பாடசாலை இடைவிலகலை நாங்கள் பார்க்கின்றோம். இது பாரிய அளவில் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. சில இடங்களில் இந்தப் பாடசாலை இடைவிலகல்களில் பார்க்கும்போது, இந்த ஆறு மாதத்துக்குள் 163 பாடசாலை இடைவிலகல்கள் பதிவாகி இருக்கின்றது.
அதில் 133 பிள்ளைகளை மீளிணைக்கப்பட்டனர். 30 பிள்ளைகள் மேலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர். ஆகவே, இந்தப் பிள்ளைகளுடைய குடும்பப் பின்னணி, பொருளாதாரப் பிரச்சினைகள், பாதுகாப்புச் சம்பந்தமான விடயங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் காரணங்களாக இருக்கலாம். இந்த 30 பிள்ளைகளையும் மீளிணைக்கப்பட வேண்டிய கட்டாயத்தை நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம்.
அதேபோலத்தான் ஏறத்தாழ 200 வரையான சிறுவர் துஷ்பிரயோகங்களும் இந்த வருடத்துக்குள்ள பதிவாகியுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகங்கள் மாத்திரமல்லாமல், யுவதிகள் காணாமல் போதல், தற்கொலை போன்ற பல விடயத்தை நாங்கள் பார்க்கும்போது, இதற்கான சமூகப் பின்னணி எவ்வாறு இருக்கின்றது, சமூகச் சூழலில் இருக்கின்ற பிரச்சினைகள் என்ன என்பதையும் நாங்கள் சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் என்ற வகையில் நான் அந்த அதிகாரிகளுக்கு வலியுறுத்திக் கூறியிருக்கின்றேன். இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டியது.
முக்கியமாக நுண்கடன் வசதிகளைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் இவ்வாறான பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்ற சம்பவங்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம். அதேபோல, இந்த நுண்நிதி, இந்த நுண்கடன்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற நுண்நிதிக் கடன்கள், கடன் வழங்கும் நிலையங்களில் இருக்கின்ற சில பிரச்சினைகள் காரணத்தாலும், இந்தப் பாரிய பிரச்சினைகள் பதிவாகிக் வருவதாகவும் தெரிவித்தார்.
![]()