பலதும் பத்தும்

நுண்ணலை லேசர் மூலம் நுளம்பு ஒழிப்பு

LiDAR, ரேடார் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த லேசர் கருவி, பறக்கும் பூச்சிகளைக் தானாகவே கண்டறிந்து லேசர் மூலம் அழிக்கும் திறன் கொண்டது.

பறக்கும் நுண்ணிய இலக்குகளைக் கண்டறிந்து துல்லியமாகத் தாக்கும் ‘ஃபோட்டோன் மேட்ரிக்ஸ்’ (Photon Matrix) எனும் நுண்ணலை லேசர் பாதுகாப்புக் கருவியைச் சீனாவின் சாங்ஷூ நகரைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்பைப் போன்ற சிறிய வடிவிலான இக்கருவி, வீடுகளில் நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முப்பரிமாண வெளியில் பொருட்களைக் கண்டறியும் லைடார் (LiDAR) தொழில்நுட்பம், நுளம்புகளை அடையாளம் காண்பதற்கான கமரா, மில்லிமீட்டர் அலை ரேடார் மற்றும் மென்பொருள், இலக்கின் நகர்வைக் கணிக்கும் செயற்கை நுண்ணறிவுத் (AI) தடமறி அமைப்பு மற்றும் வர்க்கம் 4 (Class 4) லேசர் மூலம் ஆகியவற்றின் கலவையாக இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

முழுக் கருவியையும் நகர்த்தாமல், கால்வனோமீட்டர் கட்டுப்பாட்டுக் கண்ணாடிகள் மூலம் லேசர் கற்றையை இலக்கில் செலுத்தி, நுளம்புகளின் இறக்கைகளைச் சேதப்படுத்தி அவற்றால் பறக்க முடியாத நிலையை உருவாக்குவதே இதன் பிரதான செயற்பாடாகும்.

அதிகபட்சம் 6 மீற்றர் (19.7 அடி) தூரம் வரையிலான இலக்குகளையும், கிடைமட்டமாகச் சுமார் 90 பாகை பரப்பளவிலும் இக்கருவியால் கண்காணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 முதல் 20 மில்லிமீற்றர் அளவிலான மற்றும் செக்கனுக்கு 1 மீற்றர் வேகத்தில் பறக்கும் இலக்குகளைச் சுமார் 3 மில்லிசெக்கன்களில் இனங்கண்டு, ஒரு செக்கனுக்கு ஏறத்தாழ 30 கொசுக்கள் வரை தாக்க முடியுமென உற்பத்தி நிறுவனம் கூறுகிறது.

இந்தத் தொழில்நுட்ப விவரங்கள் அனைத்தும் நிறுவனத்தின் கூற்றுகளாக உள்ள நிலையில், சுயாதீனப் பரிசோதனைகள் மூலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

வெற்றிகரமான நிதித்திரட்டல் முயற்சியைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான முன்பதிவுகளைப் பெற்றுள்ள இக்கருவி, இறுதிச் சரிசெய்தல்களுக்குப் பின்னர் நவம்பர் மாதம் முதல் விநியோகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், சக்திவாய்ந்த லேசர் கற்றையால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பு போன்ற பாதுகாப்புச் சிக்கல்கள் மற்றும் ஏனைய பறக்கும் பூச்சிகளுக்கு ஏற்படக்கூடிய சூழலியல் பாதிப்புகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மனிதர்கள் மற்றும் விலங்குகளைக் கண்டறிதல், பிரதிபலிப்புப் பரப்புகளைத் தவிர்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *