பலதும் பத்தும்

வெறும் 150 கிராம் உடல்… 5,700 கி.மீ. பயணம்; உலகையே வியக்க வைத்த சிறிய பறவை!

வெறும் 150 கிராம் எடை கொண்ட சிறிய பறவை ஒன்று, எவ்வித ஓய்வும் இன்றி 101 மணி நேரம் தொடர்ந்து பறந்து 5,700 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது.

அமூர் வல்லூறு (Amur Falcon) எனப்படும் இந்தப் பறவையின் வியக்கத்தக்க பயணம் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மணிப்பூரில் இருந்து சோமாலியா வரை நீண்ட பயணம்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட ‘அலாங்’ (Alang) என்ற பெண் அமூர் வல்லூறு, அரபிக்கடலைக் கடந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவைச் சென்றடைந்துள்ளது.

சுமார் நான்கு நாட்கள் மற்றும் ஐந்து மணி நேரம் இடைவிடாமல் பறந்து இந்த நீண்ட பயணத்தை அது நிறைவு செய்துள்ளது.

செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு

இந்தப் பறவையின் பயணத்தை ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் அதன் உடலில் சிறிய செயற்கைக்கோள் கண்காணிப்புக் கருவியைப் பொருத்தியிருந்தனர்.

இதன் மூலம் பறந்த தூரம், பயண நேரம் மற்றும் சென்றடைந்த இடம் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அலாங் மட்டுமன்றி, ‘அபபாங்’ (Apapang) என்ற மற்றொரு அமூர் வல்லூறும் இதே பகுதியில் இருந்து தனது வலசைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

வெறும் 150 கிராம் உடல்... 5,700 கி.மீ. பயணம் : உலகையே வியக்க வைத்த சிறிய பறவை! | Just 150 Grams Yet 5 700 Km Tiny Bird Journey

அமூர் வல்லூறுகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காகவும் உணவு மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்பவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணிக்கின்றன.

இந்தப் பயணத்தின்போது மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் அவற்றின் முக்கிய ஓய்விடங்களாக விளங்குகின்றன.

வெறும் 150 கிராம் எடை கொண்ட சிறிய பறவைகள், கடலுக்கு மேலாக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை இடைவிடாமல் கடந்து சென்றுள்ளமை இயற்கையின் வியக்கத்தக்க ஆற்றலுக்கு மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *