இலங்கை

30 இல் இலங்கை முழுவதும் வேலை நிறுத்தம்!; கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கும் தயாராகியுள்ள அரச ஊழியர்களின் தொழிற்சங்கங்கள்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் பல எதிர்வரும் 30ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்துடன் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகியுள்ளது.

பாராளுமன்றத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட அரச ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, அரச தொழிற்சங்கங்கள் ஏற்கனவே பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு அடுத்தக் கட்டமாக வேலைநிறுத்தப் போராட்டத்துடன் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டள்ளது.

அரச சேவை ஊழியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிற்றூழியர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுளளன.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில், கடந்த திங்கட்கிழமை ஆசிரியர்கள், அதிபர்கள் கறுப்புப் பட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரச ஊழியர் சங்கங்களும் கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன.

இதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்து, அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

எவ்வாறாயினும், தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 மற்றும் 2 ஆகிய இரு தினங்களிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஊடாக சுகாதாரத் துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் வைத்தியர்களின் குறைக்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்றைய தினம் மதத் தலைவர்களை சந்திக்க நடவடிக்கை எடுத்திருந்தது,

இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்வரும் 30 திங்கட்கிழமை ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அரச துறையின் பல பிரிவுகள் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன.

இதன்படி அன்றைய தினத்தில் நாடுமுழுவதும் உள்ள தமது தொழிற்சங்க உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்து வந்து பேரணி நடத்தி பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை நடத்தவும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் அன்றைய தினத்தில் அரச நிறுவனங்கள் முடங்கும் நிலை ஏற்படலாம் என்று அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *