கவிதைகள்
“வாலறிவன் அருளை வழங்கியே நிற்பான்” ….. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா.

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஏங்கிக் கதறுகையில் எப்படித்தான் கொல்கிறாரோ
வாய்பேசாப் பசுக்கள் வதைபட்டு மாள்கையிலே
மனமிருக்கும் இரக்கம் மறைந்துதான் போயிடுமா
ஆட்டை வளர்க்கின்றார் மாட்டை வளர்க்கின்றார்

அதனாலே வரும்பயனை அனுபவித்து மகிழ்கின்றார்
பயனான ஜீவனையே பலியாக்கிச் சுவைக்கின்றார்
பலியான உயிரனைத்தும் சாபமிட மாட்டாதா
கொல்லாமை என்பது இல்லாமல் போகவே
வான்மறையாம் வள்ளுவம் வழங்கியது அறிவுரையை
வள்ளுவத்தைப் படிக்கின்றார் வகைவகையாய் பேசிகிறார்
தள்ளியதை வைத்துவிட்டு தாமுயிரை வதைக்கின்றார்
தன்னூன் பெருக்குதற்கு பிறிதொரு ஊனுண்ணல்
எங்ஙனம் பொருந்தும் எண்ணியே பாருங்கள்
விரதம் பிடிக்கின்றோம் வேண்டுதல் செய்கின்றோம்
வாய்பேசா பிராணிகளை வதைத்துமே நிற்கின்றோம்
கொல்லாமல் இருந்தால் புலாலுண்ணாமல் இருந்தால்
தொல்லுலகில் உயிரெல்லாம் தொழுதெம்மை நிற்கும்
வதைப்பதை விடுவோம் மனமிருங்கி நிற்போம்
வாலறிவன் அருளை வழங்கியே நிற்பான் !
![]()