உலகம்

சிறையிலிருந்தே YouTube செய்தி: காணொளியை நீக்குமாறு கூகுளிடம் பிரித்தானிய பிரதமர் வலியுறுத்து

பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்ற ரஸ்ஸல் பிராண்டின் சிறைச்சாலை செய்தி அடங்கிய யூடியூப் காணொளியை நீக்குமாறு பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், கூகுளிடம் வலியுறுத்தியுள்ளார்.

நான்கு பெண்களுக்கு எதிராக ஒரு பாலியல் வன்புணர்வு மற்றும் மூன்று பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நகைச்சுவை நடிகரும் நடிகருமான ரஸ்ஸல் பிராண்டுக்கு 10 ஆண்டுகள் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், தனது குற்றமற்ற தன்மையை வலியுறுத்தி அவர் வெளியிட்ட அறிக்கையை, அவரது மனைவி லோரா பிராண்ட் வாசித்துள்ளார். குறித்த காணொளி கடந்த ஞாயிற்றுக்கிழமை யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது.

இந்தக் காணொளி பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. 0

சிறையில் இருக்கும் கைதிகள் காணொளி அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்கும் சட்டங்களை ரஸ்ஸல் பிராண்ட் மீறியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக நிறுவனங்கள் இத்தகைய காணொளிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்திய ஆண்டி பர்ன்ஹாம், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் அவருடைய செய்திகளைக் கேட்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அரசாங்க அமைச்சர் மேத்யூ பென்னிகூக், உள்ளடக்கங்களை நீக்குவதற்கு அரசாங்கத்தால் நிறுவனங்களை கட்டாயப்படுத்த முடியாது என பிபிசயிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பில் நிறுவனத்துடன் நெருக்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியை நீக்குவது கூகுளின் தீர்மானத்திற்கு உட்பட்டது எனக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய உள்ளடக்கங்களைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே அரசாங்கம் நீக்கக் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து கேட்கப்பட்டபோது, உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லை என ஆண்டி பர்ன்ஹாம் குறிப்பிட்டதுடன், சமூக ஊடக நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

காணொளி தொடர்ந்து யூடியூப்பில்

வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் 6.6 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட ரஸ்ஸல் பிராண்டின் கணக்கில் குறித்த காணொளி தொடர்ந்து காணக்கூடியதாக இருந்தது. அதனை 950,000-க்கும் அதிகமானோர் பார்வையிட்டிருந்தனர்.

காணொளியை நீக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை கூகுள் நிராகரித்துள்ளதாகவும், தமது விதிமுறைகள் மீறப்படவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய உள்ளடக்கம் தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், தமது குழுக்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூகுள் நிறுவனத்தின் பேச்சாளர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

2023 செப்டம்பரில் ரஸ்ஸல் பிராண்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, யூடியூப்பின் வருமானம் ஈட்டும் திட்டத்திலிருந்து அவரது கணக்கு இடைநிறுத்தப்பட்டது. இதனால், அன்றிலிருந்து அவர் யூடியூப் மூலம் வருமானம் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் உள்ள கைதிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலான அறிக்கைகளை வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மற்றொருவர் மூலம் தமது கருத்துகளை வெளியிடுவதன் ஊடாகவும் இந்த விதிகளை மீற முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஸ்ஸல் பிராண்டின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் தற்போது செயல்பாட்டில் இல்லாததாகத் தெரிகின்றன. 10 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட அவரது எக்ஸ் (X) கணக்கு தொடர்ந்து காணக்கூடியதாக இருந்தாலும், நவம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் அதில் பதிவுகள் எதுவும் வெளியாகவில்லை.

2000ஆம் ஆண்டுகளில் நகைச்சுவை நடிகராகவும் திரைப்பட நடிகராகவும் புகழ்பெற்ற ரஸ்ஸல் பிராண்ட், பின்னர் பழமைவாத மற்றும் மதம் சார்ந்த கருத்துகளைப் பகிரும் சமூக ஊடகப் பிரபலமாக மாறினார்.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மேலதிக குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் பிரித்தானிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *