பலதும் பத்தும்

செய்தியாளர் சந்திப்பில் ஆணுக்கு முத்தமிட்ட அரசியல்வாதியால் பரபரப்பு: நடந்தது என்ன?

இந்தியா ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், செய்தியாளர் சந்திப்பின்போது ஆண் ஒருவரை அணைத்துக் கொண்டு முத்தமிட முயற்சிப்பது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஒடிசாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சம் மாவட்டத்தின் சிகிடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மனோரஞ்சன் தியான் சமந்த்ரா இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மாநில மீன்வளம் மற்றும் கால்நடை வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கோகுலானந்த மல்லிக், வெள்ள நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அமைச்சருக்குப் பின்னால் நின்றிருந்த சட்டமன்ற உறுப்பினர் அருகில் இருந்த ஆண் ஒருவரை அணைத்து முத்தமிட முயற்சிப்பது போன்ற காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன.

இந்தக் காணொளியை எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் (BJD) தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, கஞ்சம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பா.ஜ.க. தலைவர்கள் மகிழ்ச்சியில் திளைப்பதாக விமர்சித்துள்ளது.

இந்நிலையில், வைரலாகியுள்ள காணொளி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினரின் மனைவி மீனா சாஹு தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த செய்தியாளர் சந்திப்பின் உண்மையான காணொளி எனக் கூறப்படும் மற்றொரு பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தனது கணவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பிஜு ஜனதா தளத்தின் சமூக ஊடகக் குழுவினர் போலியான காணொளியைப் பரப்பியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், வைரலாகியுள்ள காணொளியின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சட்டமன்ற உறுப்பினரோ அல்லது பா.ஜ.க. தரப்பினரோ இதுவரை உத்தியோகபூர்வ விளக்கமளிக்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *