உலகம்

உலகை ஆட்டிப்படைக்கும் மூன்று வல்லரசுத் தலைவர்கள் ஒரே மேடையில் சங்கமம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் அடுத்த வாரம் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டையொட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய அணு ஆயுத வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவின் தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், அணு ஆயுதங்களைக் குறைப்பது தொடர்பில் பிரதானமாகக் கலந்துரையாடப்படவுள்ளதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒலிவியா வேல்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஈரான் தொடர்பான விவகாரங்களும் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், உக்ரைன் போர் தொடர்பில் கலந்துரையாடப்படாது என அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் எதுவும் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாட்ரம்பின் இந்தோ-பசிபிக் பிராந்திய விஜயம், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) மாநாட்டுடன் ஆரம்பமாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 11ஆம் திகதி புதன்கிழமை இரவு சீனாவின் ஷென்சென் நகரைச் சென்றடையும் ட்ரம்ப், இரண்டு நாட்கள் நடைபெறும் APEC மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையிலும் அவர் ஈடுபடவுள்ளார். 2025ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இருவரும் சந்திக்கும் நான்காவது சந்திப்பாக இது அமையும்.

இந்த விஜயத்தின் இறுதியில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனத் தலைவர்கள் பங்கேற்கும் முத்தரப்புச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்கிடையில், கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா – ரஷ்யா இடையிலான முக்கிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலாவதியானதைத் தொடர்ந்து, உலகளாவிய அணு ஆயுதக் களஞ்சியங்களைக் கட்டுப்படுத்தும் முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்குத் தீர்வாக புதிய சர்வதேசக் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில், சீனாவின் அணு ஆயுதக் களஞ்சியம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை மாத்திரமன்றி சீனாவையும் உள்ளடக்கிய விரிவான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *