ஈரான்மீதான தாக்குதலை கைவிடுவது குறித்து ட்ரம்ப் பரிசீலனை

ஈரானிடமிருந்தோ அல்லது யேமனில் ஈரான் ஆதரவு ஹூதிகளிடமிருந்தோ புதிதாக எந்தவொரு ஆத்திரமூட்டலும் இடம்பெறாவிட்டால், ஈரான் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடனான சந்திப்புகளிலும், உளவுத்துறை விளக்கங்களுக்குப் பின்னரும் ட்ரம்ப் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் ஆகியோரும் ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டாம் என ட்ரம்பிடம் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், தேவை ஏற்பட்டால் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலை மத்திய கிழக்கிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஈரான் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இஸ்ரேல் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க மக்களிடையேயும் போர் தொடர்பான அதிருப்தி அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
![]()