கவிதைகள்
“பாரெல்லாம் உந்தனையே பரவுகிறார் முருகையா” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா.

ஒளவைக்குத் தமிழை அள்ளியே கொடுத்தாய்
அருணகிரி வாயாலே அமுதத்தமிழ் வாங்கினாய்
பேசாத குமரகுருபரரைப் பாடவும் வைத்தாய்
பெருமைமிகு கச்சியப்பரால் கந்தபுராணம் கொடுத்தாய்
உன்பெருமை பாடிட வாரியார் வந்தார்
உலகமெலாம் திரிந்து உளமிருத்தச் சொன்னார்
பாலதேவராயர் பாடினார் கந்தசஷ்டி கவசம்
பாரெல்லாம் உந்தனையே பரவுகிறார் முருகையா
திருப்புகழைப் பாடினால் தெரிகிறாய் முருகா
எத்தனை சந்தங்கள் எத்தனை தத்துவம்
அத்தனையும் அருணகிரி உனக்காகக் கொடுத்தார்
அகநிறைய அகமகிழ பாடுகிறார் அடியார்
கந்தசஷ்டி பிடித்தால் கஷ்டங்கள் அகலும்
கந்தசஷ்டி பிடித்தால் கவலைகள் அகலும்
கந்தசஷ்டி பிடித்தால் காலனும் அணுகான்
நம்பியே பிடிக்கிறார் நாடெலாம் கந்தா
![]()