மாத்தளை மனிதப் புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்ட வேண்டும்; ‘மாத்தளை காணாமல் போனோர் சங்கத்தின் மனு மீது ஜனவரி 13 இல் விசாரணை

மாத்தளையில் பெருமளவில் மனிதப் புதைகுழிகள் இருப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குமாறு கோரி, ‘மாத்தளை காணாமல் போனோர் சங்கம்” மாத்தளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, மீண்டும் 2027 ஜனவரி 13 இல் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மாத்தளை மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொதுக் கல்லறையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம், 155 மனித உடல்களின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இது குறித்த விசாரணையைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டன.
2012ஆம் ஆண்டு எலும்புத் துண்டுகளை அமெரிக்காவிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிப் பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, 2013ஆம் ஆண்டு மாத்தளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானால் இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.
எனினும், இவ்வழக்கினை மீள் விசாரணை செய்யும்படி காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினால் 2026ஆம் ஆண்டு முற்பகுதியில் மாத்தளை மாவட்ட நீதிமன்றத்திற்கு மனு தாக்கல் செய்யப்பட்ட போது அப்போதைய நீதவானால் வழங்கப்பட்ட கட்டளையை தன்னால் எதுவும் செய்யமுடியாது எனவும், மாவட்ட நீதவானால் அறிவிக்கப்பட்டமையினால், 1988/89 காலப்பகுதியில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலர், அது தொடர்பான வழக்கை மீண்டும் திறக்குமாறு கோரி மாத்தளை மேல் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
அது தொடர்பான விசாரணை நேற்று மாத்தளை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, காணாமல் போனவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறும்,காணாமல் போனவர்களுக்கு நீதி கோரியும் மேல் நீதிமன்றத்திற்கு முன்னால் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாந்து தெரிவித்தார்.
![]()