பலதும் பத்தும்

இந்தியாவில் விசா நடைமுறைகளில் அதிரடி மாற்றம்

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், விசா பிரிவுகளின் எண்ணிக்கையை 13 இலிருந்து 9 ஆக இந்திய மத்திய அரசு குறைத்துள்ளது.

அத்துடன், விசா விண்ணப்பப் படிவங்களில் பூர்த்தி செய்ய வேண்டிய தகவல் விபரங்களின் எண்ணிக்கையும் 65 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களை இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், மருத்துவச் சேவைகளைப் பெறுவோர், மாணவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு விசா பெறும் நடைமுறையை இலகுவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இதன்படி, பிரதான விசா பிரிவுகள் 13 இலிருந்து 9 ஆகவும், உப பிரிவுகள் 49 இலிருந்து 23 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும், முன்னர் சுற்றுலா விசா என அழைக்கப்பட்ட பிரிவு, தற்போது ‘வருகையாளர் விசா’ (Visitor Visa) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், கல்வி மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கான விசா நடைமுறைகளும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

மாணவர் விசா நடைமுறையின் கீழ், பாடசாலைக் கல்வி முதல் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்புகள் வரையான கல்வி நடவடிக்கைகளுக்கு S-1 விசாவும், ஆராய்ச்சி, கலாநிதிப் பட்டப்படிப்பு உள்ளிட்ட ஏனைய கல்விசார் நடவடிக்கைகளுக்கு S-2 விசாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் ‘Study in India’ திட்டத்தின் ஊடாக கல்வி நிறுவனங்களில் இணையும் தகுதியுடைய வெளிநாட்டு மாணவர்களுக்கு, அவர்களின் பாடநெறிக் காலம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை பல தடவைகள் பயணம் செய்யக்கூடிய மின்னணு விசா வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவோருக்கான விசா நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வர்த்தக நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான விசா பிரிவுகளும் புதிய முறையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக உள்துறை அமைச்சு தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளைப் புதுப்பித்து வருகின்றது.

இதற்கான பணிகள் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் பின்னர் புதிய நடைமுறையின் கீழ் விசாக்கள் வழங்கப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு மூலம் வெளிநாட்டவர்களின் பயண நடைமுறைகளை விரைவுபடுத்துவதுடன், இந்தியாவில் சுற்றுலா, கல்வி, மருத்துவம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளையும் ஊக்குவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *