இலங்கை

பௌத்தத்தை பாதுகாக்கப் போராடும் போர்வையில் இந்திய எதிர்ப்பை உருவாக்கும் பின்னணியில் இருப்பது யார்?

பௌத்தத்தை பாதுகாப்பதற்காக போராடும் போர்வையில், கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் இந்திய எதிர்ப்பு வாதத்தை மக்களிடையே கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் என்றும், இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் இவர்களுக்குப் பின்னணியிலிருந்து செயற்படுவது யாரென்ற கேள்வி எழுவதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி தொடர்பான வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி தொடர்ச்சியாக சத்தியாக்கிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர், மக்களிடையே இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையிலும் மற்றும் இந்திய எதிர்ப்பு வாதத்தை மக்களிடையே பரப்ப முயற்சிப்பது தொடர்பிலும் கருத்து தெரிவிக்கையிலேயே சிறீதரன் எம்.பி இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் சிறீதரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி தொடர்பில் போராட்டம் நடத்தும் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரின் உண்மையான நோக்கம் இந்திய எதிர்ப்பு வாதத்தை தூண்டி, இந்தியாவை அந்நியப்படுத்தி இந்தியாவுக்கு எதிரான கிளர்ச்சி நிலைமைகளை உருவாக்குவதுமே ஆகும். அவர்களுக்கு பின்னால் சில முக்கிய தரப்புகளும் இருப்பதுடன் தோல்வியடைந்த, சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்ட இனவாத அரசியல்வாதிகளும், குழுக்களுமே செயற்படுகின்றன. அவர்கள் மீண்டும் இனவாதத்தை கையிலெடுத்து மக்களை தூண்ட முயற்சிக்கின்றனர்.

உண்மையில் அநுராதபுரம் என்பது புனித பிரதேசமே. அதனை இல்லாமல் செய்யும் எண்ணம் இந்தியாவுக்கு கிடையாது. புனித நகர அபிவிருத்திக்கு உதவவே இந்தியா முன்வந்துள்ளது. ஆனால் அங்கு புதிதாக ஆலயங்கள் உள்ளிட்ட வேறு மத வழிபாட்டிடங்களை அமைக்கும் நோக்கம் கிடையாது. இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

குறித்த புனித பிரதேசம் தொடர்பில் நல்லெண்ணத்தையே இந்தியா கொண்டள்ளது. ஆனால் அதனை குழப்புவதற்கு கஸ்ஸப தேரர் போன்றோர் பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்த நாட்டின் வளர்ச்சி, நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பில் இந்தியா கொண்டுள்ள நல்லெண்ணங்கள் மற்றும் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா எப்போதும் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களில் இலங்கைக்கு துணை நிற்கும் நாடாகும். அதனை அந்நியப்படுத்த முயற்சிக்கும் குழுக்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய கஸ்ஸப தேரர் போன்ற குழுக்கள் செயற்படுகின்றன. இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் மற்றும் இந்திய எதிர்ப்பை உருவாக்கும் வகையில் வெளியிடப்படும் கருத்துக்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இதேவேளை தெற்கில் இவர்களை சிங்கள மக்களே விரட்டியடிக்கின்றனர். இவர்களே வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்கள் தொடர்பில் பேசி விகாரைகளை அமைக்கவும் புத்தர் சிலைகளை வைத்து இனவாதங்களை தூண்ட முயற்சிப்பவர்கள். இவர்களின் நிகழ்ச்சி நிரல்களை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *