இலங்கை

யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரையால் பிரச்சினைகள் வராது

யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை விடயத்தில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் விகாரையின் நாயக்க பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வருகின்றார் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஷ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி தொடர்பான வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரி பிக்குகள் குழுவினரால் நடத்தப்படும் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பிலும் யாழ். திஸ்ஸ விகாரை தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

விகாரமகாதேவி பூங்கா, கிங்ஸ்பெரி என்று இப்போது அநுராதபுரத்தில் இருக்கின்றனர். அடுத்த வாரம் இவர்கள் எங்கு இருப்பார்களோ தெரியாது. இது அரசியலமைப்பின் 9ஆவது பிரிவுடன் தொடர்புடைய விடயமல்ல.

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்காக ஜனாதிபதியினால் ஆலோசனை குழு நியமிக்கப்பட்டுள்ளது. எவருக்காவது பிரச்சினை இருந்தால் ருவான்வெலிசாய நாயக்க தேரருடன் கலந்துரையாடி பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலாம்.

இதேவேளை யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை விடயத்தில் விகாரையின் நாயக்க தேரர் இது தொடர்பில் அவதானம் செலுத்தி கலந்துரையாடி எந்தவொரு அரசியல் குழுவுக்கும் வாய்ப்பு கிடைக்காத வகையிலும், மதங்களை அடிப்படையாகக் கொண்டு மோதல் உருவாகாத வகையிலும், பௌத்த மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நல்லிணக்கம் மனித கருணைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாயக்க தேரர் செயற்பட்டு வருகின்றார் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *