இலங்கை

நாளை பட்ஜெட்டில் சில வரிச் சலுகைகள்; சம்பள அதிகரிப்பு – அமைச்சர் நளிந்த

ஜனாதிபதியினால் நாளை வியாழக்கிழமை முன்வைக்கப்படவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சில வரிச் சலுகைகள் வழங்கப்படவுள்ளதுடன், அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பும் மேலும் சில துறைகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பும் வழங்கப்படவுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்   நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, நாளை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீரநிலைக்கு கொண்டு வருவதற்காக சவாலே இருந்தது. அது இலகுவான விடயமல்ல. பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையில் நாடு இருந்த நிலையில், மக்கள் போராட்டம் நடந்து அரசாங்கம் மாறியிருந்த நிலையில் பொருளாதாரத்தை ஸ்தீர நிலைக்கு கொண்டு வருவது இலகுவான விடயமல்ல. காலமெடுக்கும் பணியாகும். ஆனால் சர்வதேச தர நிலை நிறுவனம், சர்வதேச நிதி அமைப்புகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட தரப்பினர் பொருளாதார ஸ்தீர நிலை முன்னேற்றம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் மூன்று வருடங்களில் உயர் அபிவிருத்தியையே எதிர்பார்க்கின்றோம். எவ்வாறாயினும் சில வரி மறுசீரமைப்பின் போது உலக பொருளாதார நிலைமை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். எனினும் சில வரிச் சலுகைகள் கிடைக்கும். அத்துடன் அரச ஊழியர்களுக்கு ஜனவரியில் சம்பள அதிகரிப்பு கிடைக்கும். அதேபோன்று சில துறைகளுக்கு கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். இவற்றையும் இணைத்தே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2000 பில்லியன் ரூபா அபிவிருத்திக்கான மூலதன நிதி ஒதுக்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *