உலகம்

சீன உளவாளியுடன் தொடர்பா?; FBI விசாரணைக்குள் Nvidia தலைவர்

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் சீன வர்த்தகப் பெண்ணுடன் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் கொண்டிருந்ததாகக் கூறப்படும் தனிப்பட்ட உறவு குறித்து அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவான FBI விசாரணை நடத்தி வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், இந்தக் குற்றச்சாட்டுகள் தமக்கு ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

னக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான ஜென்சன் ஹுவாங்குடன் தாம் பேசியதாகவும், குறித்த பெண் சீன உளவாளி என்பது தமக்குத் தெரியாது என அவர் கூறியதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் FBI விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஹுவாங் இந்தச் சிக்கலில் இருந்து மீண்டு வருவார் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், வெளிநாட்டு உளவுத்துறையொன்றின் இலக்காக ஜென்சன் ஹுவாங் இருந்தாரா என்பது குறித்து என்விடியா நிறுவனத்தின் இயக்குநர் குழு உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திங்கட்கிழமை பங்குச் சந்தையில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் நான்கு சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன.

63 வயதான ஜென்சன் ஹுவாங்கின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் இந்த விசாரணை எழுப்பியுள்ளது. உலகின் பெறுமதிமிக்க சிப் உற்பத்தி நிறுவனமாக என்விடியா விளங்குவதுடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய முகமாகவும் ஹுவாங் திகழ்கிறார்.

இதற்கிடையில், தனது மனைவிக்கு உண்மையாக இருக்கவில்லை என என்விடியா ஊழியர்களிடம் ஹுவாங் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், எனினும் அந்த உறவு தொடர்பான மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஜென்சன் ஹுவாங்குக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையிலான உறவு மற்றும் அவர் சீன அரசாங்கத்துக்குத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ட்ரம்ப்புக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அந்தத் தகவல்களின் அடிப்படையில் ட்ரம்ப் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளைச் சீனா நிராகரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன், சீன உளவாளி என்ற இந்தக் கதை அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும், அவதூறு பரப்பும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *