இலங்கை

பலாலி, மயிலிட்டி, வயாவிளான், கட்டுவன், குரும்பசிட்டி உள்ளிட்ட வலி வடக்கில் சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி;  மாற்றுக் காணியோ,நஷ்டஈடோ தேவையில்லை பூர்வீகக் காணிகளையே மீண்டும் ஒப்படைக்கவும்

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்குப் பகுதியில், குறிப்பாக பலாலி, மயிலிட்டி, வயாவிளான், கட்டுவன், குரும்பசிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் இராணுவக் குடியேற்றங்கள் அல்லாத திட்டமிட்ட சிங்களக் குடியிருப்புக்களை உருவாக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதாக மயிலிட்டி காணி விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரிக் காணி உரிமையாளர்களால் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி மீட்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை (06) 29 ஆவது வாரமாக மயிலிட்டி கொமாண்டோப் பங்களா இராணுவ முகாமுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மக்கள் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சார்பில் கருத்து தெரிவித்த ஒரு காணி உரிமையாளரான சுபாஷ் இதனைத் தெரிவித்ததுடன்,அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் பூர்வீக காணிகளை விடுவிப்பதாகத் தொடர்ச்சியாக வாக்குறுதிகள் வழங்கிவரும் அரசாங்கம், நடைமுறையில் காணிகளை விடுவிக்காமல் காலத்தைக் கடத்தி வருவதுடன், நில அளவைத் திணைக்களத்தின் ஊடாக காணிகள் அளவிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.

இதேநேரம் அரசாங்கம் எத்தகைய முயற்சிகளை முன்னெடுத்தாலும் மாற்றுக் காணியோ அல்லது நஷ்டஈடோ தமக்குத் தேவையில்லை.எமது பூர்வீக சொந்தக் காணிகளையே மீண்டும் எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஒரே கோரிக்கை.

இதேவேளை தெல்லிப்பளை மற்றும் மயிலிட்டி பகுதிகளில் ஏற்கனவே காசநோய் வைத்தியசாலைகள் காணப்படுகின்ற நிலையில், வசாவிளான் பகுதியில் புதிதாக வைத்தியசாலை அமைக்கப்படுவது தொடர்பிலும் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் ஆசிரியர் கலாசாலைப் பகுதியில் பாடசாலை முறையாக இயங்காத நிலையில், அப்பகுதியில் முன்னெடுக்கப்படும் விரிவாக்க நடவடிக்கைகளும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனவும் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு, அதனைச் சூழவுள்ள மக்களின் காணிகளை அரச காணிகளாக மாற்றும் முயற்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் மக்களின் காணி உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், மக்களின் வாழ்வாதார அபிவிருத்தியை விட அரசாங்கத்தின் வருமானத்தை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார் .

இதேவேளை, போதைப்பொருள் ஒழிப்பைத் தனது முக்கிய இலக்காக அறிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மதுபானசாலைகள் இல்லாத அமைதியான பிரதேசமாக விளங்கிய மயிலிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் புதிதாக மதுபானசாலை திறக்க அனுமதி வழங்கியுள்ளமைக்கும் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த மதுபானசாலையைத் திறப்பதற்கு எதிராகப் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி அமைப்புகள் மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து எதிர்ப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன.

எனினும், இந்த எதிர்ப்புச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தண்டப்பணம் விதிக்கப்பட்ட பின்னர் மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்களின் விருப்பத்தையும் பிரதேசத்தின் சமூகச் சூழலையும் கருத்தில் கொள்ளாமல் திறக்கப்பட்டுள்ள இந்த மதுபானசாலையை உடனடியாக மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காணி விடுவிப்பை வலியுறுத்தி 29 வாரங்களாகத் தொடரும் போராட்டங்களுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் பலாலி, மயிலிட்டி, வசாவளான், கட்டுவன், குரும்பசிட்டி உள்ளிட்ட வலிகாமம் வடக்கின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, இந்த மாத இறுதிக்குள் மாபெரும் எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.

காணி அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட குடியேற்ற முயற்சிகளுக்கு எதிராக வலிகாமம் வடக்கு மக்களின் ஒரே குரலாக இந்தப் போராட்டம் அமையும் எனவும் தெரிவித்த சுபாஷ்,

அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளுக்குத் துரிதமாகப் பதிலளிக்கத் தவறினால், வலிகாமம் வடக்கில் மக்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *