இலங்கை

என்பிபி அரசுக்கு எதிராக மனோவின் அரசியல் போர் ஆரம்பம்

பெருந்தோட்டத் தரிசு நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்க முடியும் என்றால், அதே காணிகளைப் பெருந்தோட்டக் காணியற்ற ஏழை மலையக மக்களுக்கு ஏன் ஒதுக்கீடு செய்ய முடியாது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசை நோக்கிக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“யார், யாரை ஏமாற்றுகிறீர்கள், தோழர்களே?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், “மலையக தரிசு நிலம்” பற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் திட்டவட்டமான நிலைப்பாட்டையும் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதவது:-

“2022ஆம் ஆண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி வெளியிட்ட ‘மலையக சாசனத்தில்’, பெருந்தோட்டத் தரிசு காணிகளை மலையக இளைஞர்களுக்கும் காணியற்ற குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேசிய மக்கள் சக்தியால் வெளியிடப்பட்ட ‘ஹட்டன் பிரகடனத்திலும்’, பெருந்தோட்டத் தரிசு காணிகளை மலையக மக்களுக்கு விவசாய மற்றும் குடியிருப்புத் தேவைகளுக்காக வழங்குவதாகத் தெளிவாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னரும், மலையக மக்களுக்கு ஒரு அங்குலக் காணியைக் கூட ஒதுக்கீடு செய்வதற்கு அரசு முற்றாகத் தவறிவிட்டது.

தரிசு காணிகளில் குடியிருக்க முயற்சித்த ஏழை மலையகக் குடும்பங்கள் வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளானபோது, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து அவசர கலந்தாய்வுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காணியற்ற மக்களுக்கு வழங்க மறுக்கப்படும் அதே பெருந்தோட்டத் தரிசு காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்குப் பெருந்தோட்ட அமைச்சு மூலம் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.

‘அமைச்சரவையின் அனுமதியுடன் தனியார் நிறுவனங்களுக்குக் காணிகளை ஒதுக்கீடு செய்வதற்குத் தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது’ எனப் பெருந்தோட்ட அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளமை இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பான முரண்பாடுகளை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக எழுப்பியுள்ள நான், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிய உத்தியோகபூர்வக் கடிதத்தைச் சபையில் சமர்ப்பித்துள்ளேன்.

எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்க உரையின் போது, “பெருந்தோட்டத் தரிசு காணிகளைத் தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடிகிறது என்றால், அதே காணிகளைக் காணியற்ற மலையக ஏழை மக்களுக்கு ஏன் ஒதுக்கீடு செய்ய முடியாது?” என்பதற்கு ஜனாதிபதி தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும்.” – என்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *