யாழில் இராணுவம் வசம் முக்கியமான கல்வி நிலம்; பலாலி ஆசிரியர் கலாசாலையை உடன் விடுவிக்கவும்

பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலையின் 54.5 ஏக்கர் காணி இப்போதும் இராணுவ வசம்தான் உள்ளது.ஒரு இராணுவம் கல்வியியல் துறையை தன் வசம் வைத்துள்ளது என்றால் இந்த நாட்டின் கல்வி இறந்து போயுள்ளது என்றுதான் அர்த்தம் .எனவே பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலையின் காணியை அரசாங்கம் உடனடியாக விடுவித்து அதனை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஒரு பீடமாக மாற்ற வேண்டும் என தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ். சிறீதரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக மாற்றக்கோரி ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.ஹேஷா விதான கேயால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையில் உரையாற்றும்போதே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
மலையகத்தில் உள்ள கொட்ட கலை கல்வியியல் கல்லூரி, ஸ்ரீபாத கல்வியல் கல்லூரி போன்றவை மலையகத்தில் இருக்கின்ற 9 இலட்சம் தமிழ் மக்களுக்காக பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்ட பீடங்களாக மாற்றப்படுகின்றபோது அந்த மாணவர்களின் கல்வி, அவர்களின் அடிப்படை கல்வி வசதிகளை நிறைவுசெய்யக்கூடியதாக இருக்கும்.
யாழ்ப்பாணத்து பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை என்பது ஒரு கல்விப் பீடமாக மாற்றப்படவேண்டும் அவ்வாறு மாற்றப்படுகின்றபோதுதான் முகாமைத்துவ துறையிலுள்ள அதிபர்கள் கல்வியியலாளர்கள் ,ஆசிரியர்களுக்கான முகாமைத்துவ துறை வளர்ச்சியடைய முடியும்.
யாழ்ப்பாணத்தில் இருந்த ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதாவது பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் தகவல்களின்படி 54.5 ஏக்கர் காணி இப்போதும் இராணுவ வசம்தான் உள்ளது.ஒரு இராணுவம் கல்வியியல்துறையை தன் வசம் வைத்துள்ளது என்றால் இந்த நாட்டின் கல்வி இறந்து போயுள்ளது என்றுதான் அர்த்தம்
எத்தனையோ பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை பிரசவித்த பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை இப்போதும் இராணுவ முகாமாகவுள்ளது என்றால் அதனை விடுவிக்க வேண்டும் . இந்த அரசாங்கம் காணிகளை விடுக்கின்றோம், மக்களின் வாழ்க்கையை மாற்றுகின்றோம்,அபிவிருத்தியை செய்கின்றோம் என யாழ்ப்பாணம் வந்து உறுதியளித்தது .எனவே இந்த பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலையின் காணியையும் விடுவித்து அதனை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஒரு பீடமாக மாற்ற வேண்டும் என்றார்.
![]()