12 ஆம் திகதி பட்ஜெட்…. பாராளுமன்றுக்கு பலத்த பாதுகாப்பு 11,12 இல் கடும் சோதனை

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் எதிர்வரும் வியாழக்கிழமை நிகழ்த்தப்படவுள்ளநிலையில் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வு அறைகள் மற்றும் உடை அலுமாரிகள் உட்பட ஒட்டுமொத்த பாராளுமன்றக் கட்டடமும் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற சபாநாயகரின் அறிவிப்பின்போதே இவ்வாறு அறிவித்த பிரதி சபாநாயகர் இதுதொடர்பில் மேலும் சபைக்கு அறிவிக்கையில்,
நவம்பர் 12 ஆம் திகதியன்று, பாராளுமன்றக் கட்டடத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு மற்றும் விசேட பகுதிகள் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படும். அன்றைய தினம் பொதுமக்கள் கலரி விசேட அதிதிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதுடன்,அதற்கான அழைப்பிதழ்கள் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இயலுமானவரை சாரதியுடன் வருகை தருமாறும்,விருந்தினர்களை அழைத்து வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.உறுப்பினர்கள் தம்மால் ஓட்டிவரும் வாகனங்களை உரிய வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்துவதற்காக, நுழைவாயில்களில் பாராளுமன்ற பணியாட்டொகுதியைச் சேர்ந்த சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவர்.
அன்றைய தினம் பாராளுமன்ற வாகனத் தரிப்பிடம் மூடப்பட்டிருக்கும் என்பதால், வாகனங்கள் உரிய வாகனத் தரிப்பிடங்களுக்கு அனுப்பப்படும்.நுழைவாயில் வரை வர முடியும். பொலிஸ் போக்குவரத்துப் பிரிவும் அண்மித்த பொலிஸ் நிலையங்களும் சிறப்பு போக்குவரத்து திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளன.இத்தகைய சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் படைக்கலச் சேவிதர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது என்றார்.
![]()