இலங்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் விவகாரம்; ஐ.நா.சபையையும் ஏமாற்றிய அரசு!

ஐ. நா. சபையின் உடன்படிக்கைக்கு அமைவாகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை தடுத்தல் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது பொய் என்று ஐ.நா சபை அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது.இந்த விடயத்தில் அரசாங்கம் ஐ.நா. சபையையும் ஏமாற்றியுள்ளது.எனவே இந்த சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற்று திருத்தப்பட்ட சட்டமூலத்தை சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட எம்.பி. அஜித் பி பெரேரா வலியுறுத்தினார்

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமைஇடம் பெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைவிட பாரதூரமான வகையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த சட்ட மூலம் தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை அறிவிக்கும் என்று நம்புகின்றோம்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் ஐ. நா.சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் அரசாங்கம் கூறுவது பொய் .ஐ.நா. சபையின் உடன்படிக்கைக்கு அமைவாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை என்று ஐ.நா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.ஆகவே இந்த விடயத்தில் அரசாங்கம் ஐ.நா. சபையையும் ஏமாற்றியுள்ளது.

பாரதூரமான அம்சங்களை கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலத்தை தயாரித்தது யார் ? இந்த சட்டமூலம் தொடர்பில் அரசாங்கம் இலங்கை சட்டத்தரணிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் துறைசார் நிபுணர்களிடம் கலந்துரையாடியதா?எதுவுமே இல்லை. தான்தோன்றித்தனமாகவே இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற்று மனித உரிமைகளுக்க அமைவாக புதிய சட்டமூலம்தை சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *