இலங்கை

ட்ரம்ப்க்கு ஏற்பட்ட கதி தெரியுமா?; முடிந்தால் உடனடியாகத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்

அரசுக்குத் தைரியமிருந்தால் உடனடியாகத் தேர்தலை நடத்திக் காட்டுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசும் ஜனாதிபதியும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அவர்களைத் தொடர்ந்தும் கற்பனை உலகில் வாழ வைக்கின்றது.

அரச அதிகாரத்துக்கு வரும்போது நாட்டு மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், இன்று செல்லும் இடங்களிலெல்லாம் ஜனாதிபதி புதிய கதைகளைக் கூறி மக்களை மேலும் ஏமாற்றி வருகின்றார்.

வரிகள் உயர்த்தப்படவில்லை என ஜனாதிபதி கூறினாலும், இன்று அத்தியாவசியப் பொருள்கள், கல்வி மற்றும் சுகாதார உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களைக் கண்டு அரசு காதுகேளாத யானையைப் போலச் செயல்படுகின்றது.

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறியவர்கள், இந்த ஆண்டில் மட்டும் கட்டணத்தை இருமுறை உயர்த்தியுள்ளதுடன், மீண்டும் 2.8 மடங்கினால் உயர்த்த முன்மொழிந்துள்ளனர்.

எதிர்த்தரப்பினர் தாக்கும் அளவை வைத்தே தங்கள் வெற்றியை அளவிட முடியும் என அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகின்றார்.

அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அடைந்த படு தோல்வியை பாடமாகக் கொண்டு, அரசுக்குத் தைரியமிருந்தால் உடனடியாகத் தேர்தலை நடத்திக் காட்டட்டும். மக்கள் எவ்வளவு சௌகரியமாக இருக்கிறார்கள் என்பதைத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்.

தங்களின் திறமையின்மையை மூடிமறைக்கவே அரசு இந்த அடக்குமுறைகளைக் கையிலெடுக்கின்றது. ஆட்சியை நடத்த முடியாவிட்டால், அதைத் தகுதியானவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *