இலங்கை

பணச் சலவை வழக்கில் 450 பேருக்கு வலை வீச்சு

பணச்சலவை குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 450 பேருக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் பொலிஸ் அதிகாரிகள் தவறிழைத்தாலும் அவர்களுக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமைஇடம் பெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

கடந்த காலங்களில் நாட்டின் அரசியல் ஒழுங்கற்ற விதத்தில் முன்னெடுக்கப்பட்டதுடன் அது பல்வேறு நிதி ஆதாரங்கள் தேவைப்படும் வியாபாரமாகவும் மாற்றப்பட்டிருந்தது.

அத்துடன் பணச்சலவை நடவடிக்கைகள் பாதாள உலகக் குழுக்களுடனும் போதைப்பொருள் வர்த்தகத்துடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தன.அந்த வகையில் தற்போது காலாவதியான சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த சட்டக் கட்டமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினால் புதிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் 2019ஆம் ஆண்டிலிருந்தே கவனம் செலுத்தப்பட்டு வந்தது.

பணச்சலவையைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்காகும். அதற்காக பல்வேறு துறைகளையும் உள்ளடக்கும் வகையில் புதிய சட்டங்கள் அவசியம் .

பணச்சலவை குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 450 பேருக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, பொலிஸ் அதிகாரிகள் தவறிழைத்தாலும் அவர்களுக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

பணச்சலவையை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தி இந்தச் சட்டங்களுக்கு எதிராகச் செயற்பட முயற்சிக்கின்றனர். கடந்த காலங்களில் சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், தற்போதைய அரசாங்கம் சட்டங்களை உருவாக்குவதுடன் அவற்றைத் தீவிரமாக அமுல்படுத்தி நாட்டை மீளக் கட்டியெழுப்பி வருகிறது.

அதற்காகவே மக்கள் எமக்கு ஆணை வழங்கினர். உலகின் பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்குப் பல்வேறு சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் நடைமுறையில் உள்ளன. அவற்றுக்கு அமைவாக இலங்கையின் சட்டங்களையும் நாம் நவீனமயப்படுத்தி வருகிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *