இலங்கை

புதிய சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்றப் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தினால் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் போராட்ட இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளை சேர்ந்த பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். பிற்பகல் 12.30 மணியளவில் பொல்துவ சந்திப்பகுதியில் தியத்த உயன பகுதியில் அணிதிரண்ட இவர்கள், அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் வரையில் பேரணியாக பயணித்து மீண்டும் தியத்த உயன பகுதிக்கு திரும்பிச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களின் போராட்டம் காரணமாக பாராளுமன்றம் செல்லும் வீதி பொலிஸாரால் தற்காலிகமாக மூடப்பட்டதால் அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் போராட்ட இயக்கத்தின் முக்கியஸ்தரான வசந்த முதலிகே கூறுகையில்,

அரசாங்கம் இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மக்கள் விடுக்கும் கோரிக்கைகளையும் பயங்கரவாத செயற்பாடுகள் என்று கூறி நடவடிக்கை எடுக்கப்படும் நிலைமையே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படும். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அத்துடன் இதனை ஒடுக்குமுறை சட்டம் என்றும் கூறியது. அவ்வாறு வந்த அரசாங்கம் இப்போது ஒடுக்குமுறை சட்டங்களை கொண்டுவர முயற்சிக்கின்றனர். மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வரும் போது அதனை தடுக்கவே அரசாங்கம் இவ்வாறான சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றது. அதனை நிறுத்த வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *